பொது செய்தி

இந்தியா

குறையும் ஜி.எஸ்.டி., வசூல்: தீர்வு என்ன?

Updated : அக் 15, 2019 | Added : அக் 14, 2019 | கருத்துகள் (19)
Share
Advertisement
'சரக்கு மற்றும் சேவை வரியில் குறைகள் இருக்கலாம். ஆனால், அதை முற்றிலும் நீக்கிவிட முடியாது, அது இந்த நாட்டின் சட்டம்' என, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருப்பது இன்று பேசுபொருளாக மாறியுள்ளது. நிதி அமைச்சரின் கொந்தளிப்புக்கு பின்னேயுள்ள நியாயம் என்ன? ஜூலை, 2017 முதல் அமல்படுத்தப்பட்ட, 'ஜி.எஸ்.டி.,' என்ற, சரக்கு மற்றும் சேவை வரி தொடர்ச்சியான விமர்சனங்களை
GST,ஜி.எஸ்.டி, வசூல், நிர்மலா சீத்தாராமன், குறையும், சரிவு

'சரக்கு மற்றும் சேவை வரியில் குறைகள் இருக்கலாம். ஆனால், அதை முற்றிலும் நீக்கிவிட முடியாது, அது இந்த நாட்டின் சட்டம்' என, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருப்பது இன்று பேசுபொருளாக மாறியுள்ளது. நிதி அமைச்சரின் கொந்தளிப்புக்கு பின்னேயுள்ள நியாயம் என்ன?

ஜூலை, 2017 முதல் அமல்படுத்தப்பட்ட, 'ஜி.எஸ்.டி.,' என்ற, சரக்கு மற்றும் சேவை வரி தொடர்ச்சியான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மறைமுக வரிகளைஎல்லாம் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ஜி.எஸ்.டி.,யானது வரி விதிப்பு முறையில் புரட்சிகரமான முயற்சியாக கருதப்பட்டது. பல்வேறு அடுக்குகளில் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டன. ஒவ்வொரு மாதமும், 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் திரட்டப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால், செப்டம்பர், 2019ல், 92 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் குறைவாகவே திரட்டப்பட்டுள்ளது. 1 லட்சம் கோடி ரூபாயைத் தொட்ட மாதங்கள், வெகு சிலவே.


வரி வசூல் குறைவு

மேலும், 1 லட்சம் கோடி ரூபாய் என்பது, 2017ல் நிர்ணயிக்கப்பட்ட கணக்கு. ஆண்டொன்றுக்கு சாதாரணமாக, 10 சதவீத வரி வசூல் உயர்வேனும் இருக்க வேண்டுமல்லவா? அப்படிப் பார்க்கும்போது, தற்சமயம், 1.20 லட்சம் கோடியேனும் திரட்டப்பட வேண்டும். இப்படிப் பார்க்கும் போது, வரி வசூல் மிகவும் குறைவே. இதற்கான காரணங்கள் பல. தற்சமயம், செப்டம்பர், 2019 கணக்கை எடுத்துக்கொண்டால், ஆட்டோமொபைல், இரும்பு மற்றும் உருக்கு, சிமென்ட் ஆகிய துறைகளில் திரட்டப்பட்டுள்ள, ஜி.எஸ்.டி., மிகவும் குறைவு.

பதினோரு மாதங்களாக விற்பனை சரிவில் திண்டாடும் ஆட்டோமொபைல் துறையில் திரட்டப்பட்ட, ஜி.எஸ்.டி., 3,500 கோடி ரூபாய். சிமென்ட் துறையில், 1,500 கோடி ரூபாய். உருக்குத் துறையில், 1,200 கோடி ரூபாய் மட்டுமே. மேலும், இறக்குமதித் துறையில் இருந்து திரட்டப்பட்ட, ஜி.எஸ்.டி.,யில் 13 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால், மின்னணு சாதனங்கள், நுகர்வோர் பொருட்கள், புகையிலை ஆகியவற்றில் திரட்டப்பட்ட ஜி.எஸ்.டி., நன்கு உயர்ந்துள்ளது.

மொத்தத்தில், 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி தொடர்ச்சியாக வரிவசூல் செய்ய முடியவில்லை என்ற நிலைமைதான் தொடர்கிறது. பொதுவாக, பொருளாதாரம் தொய்வடைந்திருப்பதால், வசூல் பெருகவில்லை என்பது முதல் எண்ணம். ஆனால், நிதி அமைச்சர் புனேயில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசும்போது, வேறு காரணங்களையும் தெரிவித்தார்.

உதாரணமாக, ஜி.எஸ்.டி., பதிவதில் ஏய்ப்பு இருக்கிறது. ஒரு சில மாநிலங்களில் கடுமையான மழைப்பொழிவும் வெள்ளமும் இருந்ததால், அங்கெல்லாம் வரிவசூல் பெருகவில்லை என்றார்.


குறைபாடுகள்

இந்தக் கூட்டத்தில், பல்வேறு பட்டய கணக்காளர்கள் பங்கேற்று பேசியிருக்கின்றனர். அவர்களில் சிலர், ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்ட விதத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி உள்ளனர். அங்கே தான் நிதி அமைச்சர், தன் பொறுமையை இழந்து, ஜி.எஸ்.டி., விமர்சிக்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்துள்ளார். குறைகள் இருக்கலாம். ஆனால், அதை மேம்படுத்துவதற்கான, சீர்திருத்துவதற்கான வழிமுறைகளைக் காண வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சந்தேகமே இல்லை. சரியான அணுகுமுறை தான்.

தொடர்ச்சியாக இதுபோன்ற குறைகளைத் தான் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களில் இருந்து பல்வேறு பட்டயக் கணக்காளர்கள் வரை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கென, தற்போது ஓர் ஆலோசனைக் குழுவையும் நிதி அமைச்சர் நியமித்துள்ளார் என்பது வரவேற்கத்தக்க முடிவு. ஆனால், சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை இன்னும் கருணையோடு அணுக வேண்டும் என்பது எதிர்பார்ப்பு.

படிவங்களையும் சமர்ப்பிக்கும் முறைகளையும் எளிமைப்படுத்த வேண்டும். உள்ளீட்டு வரிப் பிடித்தத்தொகையை விரைந்து திரும்பத் தர வேண்டும். பல சமயங்களில் அரசாங்கத்திடம் இருந்து வர வேண்டிய தொகையில் காலதாமதம் ஏற்படுவதால், பல தொழில் நடத்துபவர்கள், 'நடப்பு மூலதனம்' இல்லாமல் தவிப்பதாக செய்திகள் வருகின்றன. இது வணிகர்களிடமிருந்தும் உற்பத்தியாளர்களிடம் இருந்தும் வரும் கோரிக்கைகள் என்றால், வாடிக்கையாளர்கள் வேறு கோரிக்கைகளை வைக்கிறார்கள்.

உதாரணமாக, சமீபத்திய செய்தி ஒன்று கவலையை அளிக்கிறது. போதிய, ஜி.எஸ்.டி., வருவாய் இல்லை என்பதால், 5 சதவீத வரி அடுக்கில் உள்ள பல்வேறு பொருட்களை, அரசாங்கம் அடுத்த வரி அடுக்கில் உயர்த்தும் எண்ணம் கொண்டிருப்பதாக செய்தி சொல்கிறது. அதேபோல், இதுவரை வரி விதிக்கப்படாத பொருட்களும் சேவைகளும் எவை என்பதைக் கண்டுபிடித்து, அவற்றின் மீதும் வரி விதிக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாகச் சொல்லப்படுகிறது.இவையெல்லாம் நிச்சயம் வாடிக்கையாளர்களை பாதிக்கும் அம்சங்கள்.


முன்னுரிமை

வரி என்பது, வலிக்காமல் பாக்கெட்டில் இருந்து எடுக்கப்படுவது போன்று இருக்க வேண்டுமே அன்றி, வலிந்து பிடுங்குவதாக இருக்கக் கூடாது. காலி பாத்திரத்தை சுரண்டினால், சத்தம் மட்டும் தான் வரும். உண்மையில், நாம் செய்ய வேண்டியது வேறு. பொருளாதார சுழற்சியை அதிகப்படுத்தி, மக்களிடம் வாங்கும் சக்தியை மேம்படுத்தி, நம்பிக்கையை விதைக்க வேண்டும். அதன் மூலம், பல்வேறு பொருட்கள், சேவைகளை நுகர்வது அதிகரிக்கும்.

அப்போது, அரசாங்கத்துக்கு வரி வசூல் அதிகரிக்கும். பற்றாக்குறையே இருக்காது. அரசாங்கத்தின் வளர்ச்சிக்காக யாரும் தொழில் நடத்துவதில்லை. சொந்த வளர்ச்சிக்கே முன்னுரிமை. தனிநபர்கள், நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அரசாங்கம் ஒத்துழைக்குமேயானால், அரசு கஜானா நிரம்புவது நிச்சயம்.

-ஆர்.வெங்கடேஷ்,
பத்திரிகையாளர்

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - chennai,இந்தியா
14-அக்-201917:23:18 IST Report Abuse
mohan வராத பணத்துக்கு gst கட்ட வேண்டி உள்ளது... gst கட்டிய பின் தொகை வராவிட்டால், அம்போ தான்.. ஏனென்றால், சிறு தொழில் பொறுத்த வரை, எந்த ஒரு பில் தொகை என்றாலும், ஒரு சிறிய தொகை பிடித்தம் செய்து கொண்டு கொடுப்பது ஒரு வாடிக்கை ஆகி விட்டது... அதில் gst வேறு என்னே செய்ய....
Rate this:
Cancel
G Mahalingam - Delhi,இந்தியா
14-அக்-201914:53:17 IST Report Abuse
G  Mahalingam இதில் என்ன கொடுமை என்றால் வராத பணத்துக்கு முன்பே ஜிஎஸ்டி கட்ட வேண்டி உள்ளது. சில கம்பெனிகள் ஜிஎஸ்டி கட்டிய பிறகு மொத்த பணமும் அனுப்புகிறார்கள். அதற்கு 2 முதல் 4 மாதங்கள் பொறுத்து கொள்ள வேண்டி உள்ளது.
Rate this:
Cancel
VANNAI KUMAR - Chennai,இந்தியா
14-அக்-201914:45:43 IST Report Abuse
VANNAI KUMAR நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை சுரண்டுவதின் பெயர் GST.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X