திருப்பூர் : ஆட்டோவில் வந்து இறங்கிய ஓட்டு மெஷினால் திருப்பூரில் ஓட்டு எண்ணும் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லூரியில் ஓட்டு எண்ணப்படுகிறது. இந்த ஓட்டு எண்ணும் மையத்துக்கு மாலை 4 மணியளவில் ஒரு ஆட்டோ வந்தது. ஆட்டோவில் இருந்து சேர்கள் மற்றும் ஒரு எல்க்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரம் இறக்கப்பட்டது. இதனை பார்த்த அரசியல் கட்சிகளின் பூத் ஏஜன்டுகள் சந்தேகம் அடைந்தனர். ஆட்டோகாரரை சுற்றிவளைத்து ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து கேள்வி எழுப்பினர். அவர் சரிவர பதில் சொல்லாமல் ஆட்டோவை கிளப்ப முயன்றார். ஆனால் அவரை சிறைபிடித்த அரசியல் கட்சியினர், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். நேற்று திருப்பூரில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்த பயிற்சி வகுப்புகள் நடந்தது. அதற்கு பயன்படுத்தப்பட்ட டம்பி ஓட்டுப்பதிவு இயந்திரமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் அரசியல் கட்சியினர் சமாதானம் ஆகாததால் தேர்தல் உயர் அதிகாரிகள் விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.