புதுடில்லி : தமிழகத்தின் மாமல்லபுரத்தில் முறைசாரா சந்திப்பை வெற்றிகரமாக நடத்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஸீ ஜின்பிங்கின் சந்திப்பின் பின்னணியில் இருந்த தமிழக அதிகாரிகளை இருநாட்டு தலைவர்களும் பாராட்டி உள்ளனர். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த 3 அதிகாரிகளை இருநாட்டு தலைவர்களும் நேரடியாக அழைத்து தங்களின் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

யார் அந்த 3 தமிழர்கள் :
மோடி - ஜின்பிங் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியது முதல், திரும்பி செல்லும் வரை சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகளை செய்தவர், ஐஏஎஸ் அதிகாரி கவிதா ராமு. இதே போன்று இரு நாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தையின் போது அவர்களின் கருத்துக்களை அற்புதமான முறையில் இரு மொழிகளிலும் மொழிபெயர்த்தவர், ஐஎப்எஸ் அதிகாரி மதுசூதனன். இரண்டு நாட்களும் தலைவர்கள் தங்கி இருந்த ஓட்டல்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை திறம்பட கவனித்தவர், ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தன். இவர்கள் 3 பேரும் தான் மோடி-ஜின்பிங்கின் மனதை கவர்ந்து, பாராட்டுக்களை பெற்ற தமிழர்கள்.

கவிதா ராமு ஐ.ஏ.எஸ் :
மோடியின் வருகை குறித்து சுவாரஸ்யமான சில தகவல்களை வெளியுறவுத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதில்,''சீன அதிபர் சென்னை விமானநிலையத்தில் தரையிறங்கியபோது, அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. கரகாட்டம், மானாட்டம், ஒயிலாட்டம், பரதநாட்டியம், பறையிசை என மொத்தம் 5 வகையான நடனங்களால் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை முன்நின்று கவனித்தவர் கவிதா ராமு ஐ.ஏ.எஸ். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ப்பு சேவையின் இயக்குநரான இவர், பரதநாட்டிய கலையில் 35 வருடங்கள் அனுபவம் வாய்ந்தவர். யார் வரவேற்பு ஏற்பாடுகளுக்கு பொறுப்பேற்பது? என தலைமைச் செயலாளர் சண்முகத்திடம் வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆலோசித்தபோது, கவிதா ராமுவின் பெயரை தலைமைச் செயலாளரே பரிந்துரைத்தாராம்.

"இப்படி ஒரு வரவேற்பை நான் எதிர்பார்க்கவில்லை. விமானநிலையத்தில் இருந்து ஹோட்டல் வரையில் பள்ளி மாணவர்களும், மக்களும் உற்சாகமாக வரவேற்பளித்தனர். குறிப்பாக, விமானநிலையத்தில் அளிக்கப்பட்ட கலைநிகழ்ச்சிகள் வரவேற்பில் மனம் நெகிழ்ந்துவிட்டது" என மோடியிடம், ஜின்பிங் கூறியுள்ளார். இதனால், மோடி தனது பாராட்டையும் கவிதா ராமுவிடம் தெரிவிக்கச் சொல்லி இந்திய வெளியுறவு அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
மதுசூதன் ரவீந்திரன் ஐ.எப்.எஸ் :
மோடிக்கும், ஜின்பிங்குக்கும் இடையே மொழிபெயர்ப்பாளராக இருந்தவர் தமிழரான மதுசூதன். வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னைதான். 2007 பேட்ச் இந்திய அயல்பணி அதிகாரியான இவர், சென்னை அண்ணா பல்கலை.,ல் பொறியியல் முடித்தவர். இந்திய வெளியுறவுத்துறையில் துணைச் செயலாளராக பணிபுரிகிறார். தமிழ், மலையாளம், ஹிந்தி, மாண்டரின் மொழியில் நிபுணத்துவம் பெற்ற மதுசூதன், 2018-ல் வூ ஹானில் நடைபெற்ற முதலாவது முறைசாரா உச்சிமாநாட்டில், பிரதமரின் மொழிபெயர்ப்பாளராக அங்கம் வகித்தார். தற்போது மாமல்லபுரத்தின் அழகை மோடி விவரிக்க, அதை அச்சுப்பிசகாமல் மாண்டரின் மொழியில் சீன அதிபருக்கு மதுசூதன் விளக்கிய விதம் பிரதமரை மிகவும் கவர்ந்துவிட்டது. முதல்நாள் உச்சிமாநாட்டை முடித்துவிட்டு பிரதமர் ஓய்வெடுக்க கிளம்பும் போது, மதுசூதனை அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார்.

அரவிந்தன் ஐ.பி.எஸ் :
பிரதமர் தங்கியிருந்த மாமல்லபுரம் 'பிஷ்ஷர் மேன் கவ்' நட்சத்திர விடுதி, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.யான அரவிந்தன் ஐ.பி.எஸ்.-ன் கட்டுப்பாட்டில் தான் இரண்டு நாள்களும் இருந்தது. கடற்கரையில் பிரதமர் வாக்கிங் சென்றபோது, எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அதிகாரிகளை விட அதிகமாக பதற்றப்பட்டது அரவிந்தன் தான். தனது பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் கிளம்பும்போது, அரவிந்தனை அழைத்து 'இரண்டு நாள்களும் தூங்காமல் பாதுகாப்பு அளித்தீர்கள். விஷ் யூ குட் சக்சஸ்' எனப் பாராட்டினாராம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE