கோவை : பாரதியார் பல்கலை துணைவேந்தர் நியமனத்தில், தேடல் குழுவின் செயல்பாடுகள், கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன.
கவர்னர் அலுவலக வழிகாட்டுதலின்படியே, பாரதியார் பல்கலை துணைவேந்தர் பதவிக்கு, 100 புள்ளிகள் அடிப்படையில், 147 விண்ணப்பதாரர்களில், இறுதிப் பட்டியலில், 10 பேர் தேர்வு செய்யப்பட்டதாக, தேடல் குழு உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.இந்நிலையில், அது போன்ற எவ்வித மதிப்பெண் முறை வழிகாட்டுதலும் வழங்கப்படவில்லை என, கவர்னர் அலுவலக தகவல் வெளியானது.
இது, உயர்கல்வித் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், குழுவின் மீதான நம்பகத்தன்மையை இழக்கச் செய்துள்ளது.பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள, பாரதியார் பல்கலையை மீட்க, ஊழல் மற்றும் எவ்வகையிலும் குற்றப் பின்னணி இல்லாத, தகுதியான துணைவேந்தர் தேவை.ஆனால், தேடல் குழு தேர்வு செய்துள்ள இறுதிப் பட்டியலில் இருப்போரில் சிலர், பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடையோர்.
பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள், இக்குழுவை கலைக்க வலியுறுத்தி, கவர்னருக்கு மனு அனுப்பியுள்ளன.அரசு உதவி பெறும் கல்லுாரிகள் சங்க மாநில தலைவர் சங்கர சுப்பிரமணியன் கூறியதாவது:துணைவேந்தர் நியமன தேடல் குழு, வெளிப்படைத் தன்மையின்றி செயல்பட்டுள்ளது.அரசின் வழிகாட்டுதல் இன்றி, மதிப்பெண் முறையை சுயமாக தயாரித்து, பின்பற்றியது கண்டிக்கத்தக்கது.கவர்னர் தலையிட்டு, இக்குழுவை கலைக்கவும், சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
பல்கலை ஆசிரியர் சங்க மாநில தலைவர் பசுபதி கூறுகையில், ''தார்மீக அடிப்படையில், தேடல் குழு உறுப்பினர்கள் தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும்,'' என்றார்.