பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் பயோ டீசல் ஆகிறது பழைய எண்ணெய்

Added : அக் 14, 2019
Advertisement
மதுரையில் பயோ டீசல் ஆகிறது பழைய எண்ணெய்

மதுரை : சமையலில் தவிர்க்க முடியாத இடத்தை தனதாக்கியிருப்பது எண்ணெய் வகை. கடலெண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் என ஏதாவது ஒரு வழியில் உணவு தயாரிக்க எண்ணெய்யை உபயோகிக்கிறோம். அளவோடு பயன்படுத்தும் வரை ஆபத்தில்லை. உபயோகிக்கும் அளவு அதிகமாக, அதிகமாக எண்ணெய் நமக்கு எமனாகிவிடும்.

மதுரையையும் எண்ணெய்யில் தயாராகும் மணமிகு உணவுகளையும் பிரிக்க முடியாது. வடை, சமோசா, கார வகைகள், பொரித்த மீன், கோழி, இன்ன பிற உணவுகள் தயாரிக்கும் கூடங்கள் பெருகிவிட்டன. இங்கு தயாராகும் உணவுப்பொருட்களை ருசிக்க வாடிக்கையாளர் கூட்டமும் அலைமோதுகிறது. வயது வேறுபாடு இன்றி பொரித்த உணவுகளை வெளுத்துவாங்குகின்றனர்.இன்னொருபுறம், வாடிக்கையாளர்களின் நலனை மறந்து வருமானத்தை மட்டும் அள்ளத்துடிக்கும் டீக்கடைகள், ஓட்டல்கள், பலகார கூடங்களில் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை திரும்ப, திரும்ப உபயோகிக்கும் வழக்கம் அதிகரித்துள்ளது.

வீடுகளில் கூட ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை குப்பைக்கு அனுப்ப மனமின்றி மீண்டும் உபயோகிக்கின்றனர். ஆனால், ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெயில் மீண்டும் தயாராகும் உணவுகள் எத்தனை ருசியாக இருப்பினும், நம் உயிரை அவை மெல்ல குடிக்கும் தன்மை கொண்டவை. ஒரு கட்டத்தில் கொடிய நோய்களை ஏற்படுத்தி உயிரோடு விளையாடும்.தினமும் மீதமாகும் 4,000 லிட்டர் மதுரையை பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு 4.5 லட்சம் லிட்டர் எண்ணெய் இறக்குமதியாகிறது.

இதில் 2.5 லட்சம் லிட்டர் வரை பக்கத்து மாவட்டங்களுக்கு விற்பனைக்கு செல்கிறது. எஞ்சிய எண்ணெய் மதுரையில் உபயோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு 50 லிட்டர் எண்ணெயை உபயோகிக்கும்போதும் நாள் முடிவில் 10 லிட்டர் எண்ணெய் மிஞ்சும். இது மீண்டும் உபயோகிக்க தகுதியற்றது. அந்த வகையில் மதுரையில் மட்டும் தினமும் 4 ஆயிரம் லிட்டர் வரை பயன்படுத்த முடியாத எண்ணெய் சேகரமாகிறது. இவை குப்பைக்கு செல்வதில்லை. மாறாக, மீண்டும் உபயோகத்துக்கு வருகின்றன. ஆராய்ந்தால் எத்தனை ஆபத்தான சூழலில் நாம் வாழ்கிறோம் என்பது புரியும்.

இப்போது திரும்ப, திரும்ப எண்ணெய்யை பயன்படுத்தும் வழக்கத்தை ஒழிக்க மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறை இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன. இதற்காக ஓட்டல்கள், பலகார கூடங்களில் ஒருமுறை பயன் படுத்திய எண்ணெய்யை குறிப்பிட்ட தொகைக்கு பெற்று பயோ டீசல் தயாரிக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளன. அவசர தேவையை உணர்ந்து மதுரையில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. பணிகள் துவக்க கட்டத்தில் உள்ளன. இப்பொறுப்பு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டது.


சான்றிதழ் வழங்குவோம்

மதுரை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சோம சுந்தரம்: அரசின் திட்டப்படி தினமும் 50 லிட்டர் எண்ணெய் உபயோகிக்கும் நிறுவனங்களை கணக்கிடுகிறோம். இதுவரை 500 நிறுவனங்களை அடையாளம் கண்டுள்ளோம். ஒவ்வொரு நிறுவனத்திடமும் தலா 10 லிட்டர் பழைய எண்ணெய் மிஞ்சும். இதை தனியார் நிறுவனம் சேகரித்து பயோ டீசல் தயாரிக்கும் கூடங்களுக்கு அனுப்பி வைக்கும். எண்ணெய்யை கொள்முதல் செய்ய குறிப்பிட்ட தொகை நிர்ணயிக்கப்பட உள்ளது. இப்பணி விரைவில் துவங்கும்.

50 லிட்டருக்கு குறைவான எண்ணெய் பயன்படுத்தும் கடைகள், நிறுவனங்களையும் விரைவில் கவனிப்போம். அவர்கள் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை உபயோகிக்கும் பழக்கத்தை தாமாகவே கைவிட வேண்டும். பழைய எண்ணெய்யை உபயோகிக்காத நிறுவனங்களை அங்கீகரித்து சான்றிதழ் வழங்குவோம். இச்சான்றிதழ் நிறுவனங்களில் ஒட்டப்பட வேண்டும். பொதுமக்கள் அடையாளம் காண இது உதவும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X