சேலம்: போதையில் தாயை தவறாக பேசிய பெரியப்பாவை, உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்த சிறுவனை, போலீசார் கைது செய்தனர்.
சேலம், ஜாகீர்ரெட்டிபட்டியை சேர்ந்தவர் சரவணன், 40. இவர் மனைவி பத்மபிரியா, 37. கட்டட தொழிலாளியான சரவணன், மது அருந்தி விட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்ததால், 10 ஆண்டுகளுக்கு முன்பே,கணவனை பிரிந்து, இரு பெண் குழந்தைகளுடன் ஜாகீர்அம்மாபாளையத்தில் பத்மபிரியா தனியாக வசித்து வருகிறார். இதேபோல், சரவணனின் தம்பி முருகேசன், 36; மதுவுக்கு அடிமையானவர். இவரது மனைவி ஜீவா, 32. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். முருகேசன் மது அருந்தி விட்டு, அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததால், ஜீவா தன் இளைய மகனை அழைத்து கொண்டு, தர்மபுரி மாவட்டம், அரூரில் உள்ள தந்தையின் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். மூத்த மகனை, முருகேசனின் தாய் மாதம்மாள் வளர்த்து வந்தார். இந்நிலையில், சரவணன் அடிக்கடி மது அருந்தி விட்டு, தாய் மாதம்மாள், தம்பி முருகேசனுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததோடு, முருகேசனின் மூத்த மகன், அவரின் தாய் ஜீவா ஆகியோரை ஆபாச வார்த்தைகளால் திட்டி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு வழக்கம் போல் ஆபாச வார்த்தைகளை கூறி தகராறில் ஈடுபட்டார். அப்போது, ஆவேசமடைந்த முருகேசனின் மூத்த மகனான, 15 வயது சிறுவன், அருகில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து, சரவணனின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில், ரத்த வெள்ளத்தில் சரவணன் சம்பவ இடத்திலேயே பலியானார். சூரமங்கலம் போலீசார் வழக்குபதிந்து, சிறுவனை கைது செய்து, உருட்டு கட்டையை பறிமுதல் செய்தனர். சிறுவன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜாகீர்ரெட்டிபட்டி மக்கள், சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட வந்தனர். போலீசார், அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE