மின்னல் தாக்கி 4 பெண்கள் பலி: 25 பேர் காயம்; புதுகையில் பரிதாபம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்னல் தாக்கி 4 பெண்கள் பலி: 25 பேர் காயம்; புதுகையில் பரிதாபம்

Added : அக் 16, 2019
Share

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே, மின்னல் தாக்கியதில், வயலில் வேலை செய்து கொண்டிருந்த, நான்கு பெண்கள் உயிரிழந்தனர்; 25 பேர் காயமடைந்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை, நாளை முதல் துவங்கும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதற்கு முன்பாகவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல், மழை பெய்து வருகிறது.புதுக்கோட்டை மாவட்டத்தில், சில நாட்களாக, அவ்வப்போது மழை பெய்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து, விவசாய பணிகளை மேற்கொண்டு வந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், வைத்தூர், வழுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளிகள், செம்பாட்டூர் அருகே கீழமுட்டுக்காடு பகுதியில் உள்ள வயலில், நிலக்கடலை பறித்துக் கொண்டிருந்தனர்; சிலர், நெற்பயிர் நடவுப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.நேற்று மதியம், 3:00 மணிக்கு, வைத்தூர், செம்பாட்டூர் பகுதிகளில், பலத்த மின்னலுடன், மழை பெய்ய துவங்கியது. அப்போது, திடீரென, அந்த பகுதியில் மின்னல் தாக்கியதில், வயலில் வேலை செய்து கொண்டிருந்த, வைத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வி, 45, சாந்தி, 35, லட்சுமி, 60, விஜயா, 47, ஆகியோர் உயிரிழந்தனர்.படுகாயமடைந்த, 25 பேர், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மூவர், ஆபத்தான நிலையில் உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X