புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், சிபிஐ., அமைப்பை தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது அவர் திஹார் சிறையில், நீதிமன்ற காவலில் உள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தை நாட உள்ளனர்.
மஹாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், அன்னிய முதலீடு செய்வதற்கு, காங்., ஆட்சியின்போது, 2007ல் அனுமதி அளிக்கப்பட்டது. இதில் மோசடி நடந்துள்ளதாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளன. இந்த வழக்கில், மத்திய நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி மீது குற்றஞ்சாட்டப்பட்டது. சிதம்பரத்தை, சி.பி.ஐ., அதிகாரிகள், ஆக., 21ல் கைது செய்தனர். தற்போது, நீதிமன்றக் காவலில், டில்லியில் உள்ள திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய காவல், நாளையுடன்(அக்.,17) முடிகிறது. இந்த வழக்கில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, சிதம்பரத்தை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, அமலாக்கத் துறை, டில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

நேற்று நடந்த விசாரணையின்போது, 'நீதிமன்ற வளாகத்தில், சிதம்பரத்தை, 30 நிமிடங்கள் விசாரிக்கலாம்; அதன் பிறகு, காவலில் எடுக்க மனு தாக்கல் செய்யலாம். திஹார் சிறைக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து அவரை கைது செய்யலாம்' என, நீதிமன்றம் கூறியது. இதற்கு, 'நீதிமன்ற வளாகத்தில் அவரை விசாரிக்கிறோம். இங்கேயே அவரை கைது செய்கிறோம்' என, அமலாக்கத் துறை கூறியது. ஆனால், அதை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. 'அவருடைய கவுரவத்தையும் பார்க்க வேண்டும். பொது இடத்தில் வைத்து கைது செய்யக் கூடாது' என, நீதிமன்றம் கூறியது.
இதனையடுத்து திஹார் சிறைக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 பேர், சிதம்பரத்திடம் விசாரணை நடத்தினர். 2 மணி நேரம் விசாரணை முடிந்த நிலையில், சிதம்பரத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.