நவ., 18ல் குளிர்கால கூட்டத் தொடர்... துவக்கம்? பார்லி.,யில் வரிந்து கட்ட கட்சிகள் தயார்

Added : அக் 17, 2019
Advertisement

புதுடில்லி, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர், அடுத்த மாதம், 18ல் துவங்கி, ஒரு மாதத்துக்கு மேல் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, பார்லிமென்டில் முக்கிய பிரச்னைகளை எழுப்ப, எதிர்க்கட்சிகளும், அதற்கு பதிலடி கொடுக்க, ஆளும் தரப்பும் தயாராகி வருகின்றன. மஹாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல், வரும், 21ல் நடக்கவுள்ளது. இதற்கு அடுத்த சில நாட்களில், அந்த மாநிலங்களில் புதிய அரசுகள் அமைவதற்கான நடவடிக்கைகள் நடக்கும். அதற்குப் பின், அரசியல் கட்சிகளின் பரபரப்பு ஓய்ந்து விடும். அதிகாரப்பூர்வ அறிவிப்புஎனவே, நவம்பர் மத்தியில், பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரை துவக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ஆலோசிப்பதற்காக, பார்லிமென்ட் விவகாரத்துக்கான மத்திய அமைச்சரவை குழு, ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் தலைமையில் சமீபத்தில் நடந்தது. இதில், குளிர்கால கூட்டத் தொடரை எப்போது துவக்குவது, என்னென்ன மசோதாக்களை நிறைவேற்றுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், அடுத்த மாதம், 18ல் கூட்டத் தொடரை துவக்கி, ஒரு மாதத்துக்கு மேலாக நடத்துவது என முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது. எனினும், கூட்டத் தொடர் துவங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகலாம். கடந்த இரண்டு ஆண்டுகளில், குளிர்கால கூட்டத் தொடர், நவம்பர், 21ல் துவங்கி, ஜனவரி முதல் வாரம் வரை நடந்தது. ஆனால், இந்தாண்டு குளிர்கால கூட்டத் தொடரை, சில நாட்களுக்கு முன்னதாகவே துவங்கி, டிசம்பர் மூன்றாவது வாரத்தில் முடிக்கவுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. ஆலோசனைபொருளாதார மந்தநிலையை தவிர்க்க, கார்ப்பரேட் வரியை குறைத்தது, இ - சிகரெட் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதித்தது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டங்களை, இந்த குளிர்கால கூட்டத் தொடரில், சட்டமாக மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதுதவிர, மேலும் சில முக்கிய மசோதாக்களையும் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத் தொடரின் தேதி, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன், அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தவும் மத்திய அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது, சிதம்பரம் கைது உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப, எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆளும் தரப்பும் வியூகங்களை வகுத்து வருகிறது. ராஜ்யசபாவில் பலம்ராஜ்யசபாவில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களில், அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள், ராஜ்யசபாவில், பா.ஜ.,வுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.,க்கள் சிலர், அந்த கட்சியிலிருந்து விலகியுள்ளனர். சமீபத்தில், கர்நாடகாவைச் சேர்ந்த ராமமூர்த்தி என்ற எம்.பி., காங்கிரசிலிருந்து விலகினார்.கர்நாடக சட்டசபையில், பா.ஜ.,வுக்கு அதிக பலம் இருப்பதால், இடைத்தேர்தலில், அந்த கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இதுபோன்ற காரணங்களால், மொத்தம், 245 உறுப்பினர்கள் உள்ள ராஜ்யசபாவில், பா.ஜ.,வுக்கு மட்டும், 83 உறுப்பினர்கள் இடம் பெறவுள்ளனர். இதனால், தே.ஜ., கூட்டணியின் பலம், 106 ஆக அதிகரிக்கும். இதுதவிர, அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, ஒய்.எஸ்.ஆர்., - காங்கிரஸ் ஆகிய கட்சிகளும், பா.ஜ.,வுக்கு ஆதரவாகவே செயல்படும் என்பதால், ராஜ்யசபாவில் மசோதாக்களை நிறைவேற்றுவது, ஆளும் தரப்புக்கு, இனி எளிதான காரியமாகவே இருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X