காஷ்மீரில் முதலீடுக்கான திட்டங்கள் தயார்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு| Dinamalar

காஷ்மீரில் முதலீடுக்கான திட்டங்கள் தயார்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Updated : அக் 19, 2019 | Added : அக் 17, 2019 | கருத்துகள் (5)
காஷ்மீர், முதலீடு, திட்டங்கள், தயார், நிர்மலா சீதாராமன், அறிவிப்பு

வாஷிங்டன்: 'சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ள ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு துறைகளில் அதிக முதலீடு களை ஈர்க்கும் திட்டங்கள் தயாராகி வருகின்றன; விரைவில் அவை அறிவிக்கப்படும்' என, மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான, நிர்மலா சீதாராமன், அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டனில் உள்ள, ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியத்தின் தலைமையகத்தில் நடந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தில், அவர் பேசியதாவது:உலகிலேயே மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது.

திறமைவாய்ந்த தொழிலாளர்கள், மிகவும் வெளிப்படையான நிர்வாகம், தொழில் துறைக்கு தேவையான தொடர் சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகியவை முதலீடு செய்வதற்கு உலகின் மிகச் சிறந்த நாடாக இந்தியா விளங்குகிறது. இதைத் தவிர, ஜனநாயகம் மற்றும் வலுவான நீதித் துறை ஆகியவை, முதலீடு செய்வதற்கு மிகவும் உகந்த நாடாக இந்தியா விளங்குவதற்கு உதவுகின்றன.

சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் கால நிலை மாறுபாடு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில், இந்தியா முன்னிலையில் உள்ளது. சோலார் எனப்படும் சூரியசக்தியை அதிக அளவில் பயன்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காற்று மாசுவைக் குறைக்க, தான் அளித்த உறுதிமொழியை இந்தியா நிறைவேற்றி வருகிறது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைப் போலவே, அங்கும் இனி முதலீடுகள் செய்யலாம். இதுவரை கிடைக்காத வளர்ச்சி, ஜம்மு - காஷ்மீருக்கு கிடைக்க உள்ளது. அங்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கான விரிவான திட்டம் தயாராகி வருகின்றது.மிக விரைவில், ஜம்மு - காஷ்மீரில் முதலீடு செய்வது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும். சுற்றுலா, கைவினைப் பொருட்கள், பட்டு, ஆப்பிள் மற்றும் குங்குமப்பூ உற்பத்தி ஆகியவற்றில் முதலீடுகள் செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X