சென்னை: சென்னையில் போலியாக கால் சென்டர் நடத்தி மோசடி செய்த கும்பல், அந்த பணத்தை ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுத்தியது அம்பலமாகியுள்ளது.

சென்னை சித்தாலப்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் போலி கால் சென்டர் செயல்பட்டு வந்தது. அதில் வேலை செய்யும் நபர்கள், அவர்களுக்கு கிடைக்கும் வாடிக்கையாளர் மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு எளிதாக வங்கிக் கடன் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறி வந்துள்ளனர்.
இதனை நம்பிய சிலர், அவர்களின் வாட்ஸ்அப் எண்ணிற்கு வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை அனுப்பியுள்ளனர். அதை பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடியுள்ளனர்.
இதனால் பாதிப்படைந்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில், கால் செண்டர் நடத்திய வந்த கும்பலை மத்திய குற்ற போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. இதுவரை சுமார் 1500 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியதாக விசாரணையில் தெரியந்துள்ளன.

மேலும், போலீசாரிடம் சிக்காமல் தப்பிக்க, சுருட்டிய பணத்தை காப்பாற்றுவதற்காக, அந்த பணத்தை வெ்வேறு வங்கி கணக்குகளில் மாற்றியதாக கைதானவர்கள் கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், அந்த பணத்தை ஆன்லைன் விளையாட்டு தளங்களில் இழந்தது போல் கணக்கு காட்டிவிட்டு, சுருட்டிய பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழலாம் எனவும் திட்டம் தீட்டியுள்ளனர். இந்த முயற்சிகள் அனைத்தையும் போலீசார் சுக்குநூறாக ஆக்கிவிட்டனர்.

இந்த போலி கால் சென்டர் கும்பலிடம் ஏமாந்த வாடிக்கையாளர்களின் பணத்தை மீட்கும் நடவடிக்கையில் வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் இறங்கியுள்ளனர். ஆனால், ஆன்லைன் விளையாட்டுகளில் பரிமாற்றப்படும் பணத்தை கண்காணிக்கவோ, அவற்றை முறைப்படுத்தவோ எந்த விதிகளும் இல்லாததால் இது போன்ற மோசடி கும்பலிடம் இருந்து முழுவதுமாக பணத்தை பறிமுதல் செய்வதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுபோன்று, வங்கி கடன் வாங்கி தருவதாக செல்போன் மூலம் அணுகும் கும்பலிடம் வங்கி விவரங்களை கொடுக்காமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.