எங்கே தவறு நேர்ந்தது என யோசிக்க வேண்டும்: மன்மோகனுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி| Dinamalar

எங்கே தவறு நேர்ந்தது என யோசிக்க வேண்டும்: மன்மோகனுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

Updated : அக் 20, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (59)
எங்கே தவறு, மன்மோகன், நிர்மலா சீதாராமன், பதிலடி

வாஷிங்டன்: 'மற்றவர்கள் மீது பழிபோடுவதை நிறுத்துங்கள் என, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதை மதிக்கிறேன். அதேநேரம், எந்த காலகட்டத்தில், எங்கே தவறு நேர்ந்தது என்பதை, யோசித்து பார்க்க வேண்டியது அவசியம்' என, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்துக்கு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி தந்துள்ளார்.

ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் ஆண்டு கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமெரிக்கா சென்றுள்ளார்.

நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய போது, 'மன்மோகன் சிங் பிரதமராகவும், ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னராகவும் இருந்த காலகட்டத்தில், பொதுத்துறை வங்கிகள் மோசமாக நிர்வகிக்கப்பட்டதால் தான், அவை, இன்றைக்கு மிகப்பெரிய சிக்கல்களை சந்தித்து வருகின்றன' என்றார்.


முயல வேண்டும்



இதற்கு பதிலடியாக, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், பத்திரிகையாளர்களை சந்தித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், 'நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலைக்கு, மற்றவர்களை குறை கூறுவதை நிறுத்திவிட்டு, மோடி அரசு, பிரச்னைக்கு தீர்வு காண முயல வேண்டும்' என்றார்.

இந்நிலையில், அமெரிக்காவில் பத்திரிகையாளர்களை நேற்று சந்தித்த நிர்மலா சீதாராமன் கூறியதாவது:ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பேசிய பேச்சு குறித்து, கொலம்பியா பல்கலையில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு தான், மன்மோகன் - ரகுராம் ராஜன் குறித்து பதில் அளித்தேன். யாரையும் குறை கூற வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. மற்றவர்கள் மீது பழிபோடுவதை நிறுத்துங்கள் என, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதை மதிக்கிறேன். அதே நேரம், எந்த காலகட்டத்தில், எங்கே தவறு நேர்ந்தது என்பதையும், யோசித்துப் பார்க்க வேண்டும்.

நம் பொருளாதார நிலை குறித்து, கட்டுக் கதைகளை கூறவேண்டிய அவசியம் எனக்கில்லை. இந்தியா மற்றும் சீனாவின் வளர்ச்சி விகிதம், 6.1 சதவீதம் என, சர்வதேச நிதியத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.வர்த்தக ஒப்பந்தம்இந்தியா உட்பட, பல்வேறு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி விகிதங்களையும், சர்வதேச நிதியத்தின் சமீபத்திய அறிக்கை குறைவாக மதிப்பிட்டு காட்டி உள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 2018ல், 6.8 சதவீதமாக இருந்தது; அது, 2020ல், 7 சதவீதமாக உயரும். யார் என்ன கூறினாலும்,உலக அரங்கில்,இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அந்த வேகத்தை மேலும் அதிகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக துறையில் உள்ள கருத்து வேறுபாடுகள் மெல்ல குறைந்து வருகின்றன. எனவே, விரைவில், இரு நாடுகள் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X