சென்னை: தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள 'கல்கி' சாமியார் ஆசிரமங்களில் நடந்த வருமான வரி சோதனையில் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டத்தில் உள்ள வரதய்யாபாளையத்தில் கல்கி சாமியார் ஆசிரமம் அமைந்துள்ளது. இதன் கிளைகள் மற்றும் அலுவலகங்கள் ஆந்திரா தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் உள்ளன.இந்த ஆசிரமத்தின் மீது எழுந்த வரி ஏய்ப்பு புகார் காரணமாக வருமான வரி அதிகாரிகள் மூன்றுநாட்களாக சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வருமான வரித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கல்கி ஆசிரமத்துடன் தொடர்புடைய ஐதராபாத் பெங்களூரு நகரங்களில் 40 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 2014 - 15ம் ஆண்டில் சொத்து விற்பனை வாயிலாக கணக்கில் காட்டாத ரொக்கம் பெற்றதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் முதல் கட்ட மதிப்பு 409 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.மேலும் சோதனை நடத்திய பல்வேறு இடங்களில் இருந்து 44 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தவிர 18 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பண பரிமாற்ற ஆவணங்கள் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் சிக்கின.

தங்கக்குவியல்
கணக்கில் காட்டாத 26 கோடி ரூபாய் மதிப்பிலான 88 கிலோ தங்க நகைகள் 5 கோடி ரூபாய் மதிப்பிலான 1721 காரட் வைரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 93 கோடி ரூபாய். அதோடு கணக்கில் காட்டாமல் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாய் ஈட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர், உட்பட பல்வேறு நாடுகளில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது; தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.