சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளில் களைகட்டிய இடைத்தேர்தல் பிரசாரம், இன்றுடன்(அக்.,19) முடிந்தது. யாருக்கு வெற்றி என்பதை தீர்மானிக்க, வரும், 21ல், இரு தொகுதி மக்களும் ஓட்டளிக்க உள்ளனர்; 24ல் முடிவு தெரியும்.
தமிழகத்தில், நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு, வரும், 21ல் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தொகுதியில், தி.மு.க., கூட்டணி கட்சியான, காங்கிரஸ் வேட்பாளர் மனோகரன், அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணன் உட்பட, 23 பேர் களத்தில் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் புகழேந்தி, அ.தி.மு.க., வேட்பாளர் முத்தமிழ்செல்வன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி, உட்பட, 12 பேர் களத்தில் உள்ளனர். இரு தொகுதிகளிலும், வேட்பாளர்கள் அதிகம் இருந்தாலும், விக்கிரவாண்டியில் அ.தி.மு.க., - தி.மு.க., இடையிலும், நாங்குநேரியில் காங்., - அ.தி.மு.க., இடையிலும், நேரடி போட்டி நிலவுகிறது.
அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் பிரசாரம் செய்தனர். அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், மாவட்ட செயலர்கள், இரு தொகுதிகளிலும் முகாமிட்டு, தேர்தல் பணிகளை கவனித்தனர். அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, கூட்டணி கட்சி தலைவர்களான, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அக்கட்சி இளைஞர் அணி தலைவர் அன்புமணி, தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா ஆகியோர் பிரசாரம் செய்தனர். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், இன்று(அக்.,19) விக்கிரவாண்டியில், வேன் மூலம் பிரசாரம் செய்தார்.

தி.மு.க., மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இளைஞர் அணித் தலைவர் உதயநிதி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, நடிகை குஷ்பு ஆகியோர் பிரசாரம் செய்தனர். தி.மு.க., சார்பிலும், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், தொகுதியில் முகாமிட்டு, தேர்தல் பணிகளை கவனித்தனர்.
15 நாட்களாக களைகட்டிய இடைத்தேர்தல் பிரசாரம், இன்று மாலை, 6:00 மணியுடன் நிறைவடைந்தது. ஓட்டுப்பதிவு, வரும், 21ம் தேதியும், ஓட்டு எண்ணிக்கை, 24ம் தேதியும் நடக்கிறது.
புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தல் பிரசாரமும், மஹாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தலுக்கான பிரசாரமும் நிறைவு பெற்றது.
கர்நாடகா-15,உ.பி.,-11கேரளா- 5 சிக்கிம்-3 உள்ளிட்ட 18 மாநிலங்களில் 64 தொகுதிகளுக்கும், ஒரு லோக்சபா தொகுதிக்கும் இடைத்தேர்தல் அக்டோபர் 21 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஒட்டு எண்ணிக்கை அக்டோபர் 24 ம் தேதி நடைபெறும்.