மாமல்லபுரத்தில் நடந்த, சீன அதிபர் ஸீ ஜின்பிங் - பிரதமர் மோடி சந்திப்பில், ஐரோப்பிய யூனியன் நாடுகளில், 'யூரோ கரன்சி' பயன்பாட்டில் உள்ளது போல, ஆசிய நாடுகளுக்கு என, பொதுப்பணம் உருவாக்குவது குறித்து, இருவரும் முதல் கட்ட பேச்சு நடத்திய தகவல், வெளியாகி உள்ளது.
'தமிழகம், கேரளாவில், பா.ஜ., ஆட்சியை கொண்டு வருவேன்' என, பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார். எனவே, தமிழகத்தின் மீது பிரதமர் மோடியின் கவனம் அதிகரித்துள்ளது. அதன் வெளிப்பாடு தான், ஐ.நா., சபையில், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என, கலியன் பூங்குன்றன் பாடிய பாடலை, பிரதமர் மோடி பாராட்டி பேசி, உலக நாடுகள் அளவில், தமிழ் மொழியின் பெருமையை உயர்த்தி பிடித்தார்.
கவனம்
மேலும், இரு நாடுகளின் நல்லுறவை மேம்படுத்த, சீன அதிபர் ஸீ ஜின்பிங்கை, மாமல்லபுரத்திற்கு அழைத்து வந்தபோது, தமிழகம் மீது உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில், யூரோ பணம் பயன்பாட்டில் உள்ளது. அதேபோல், ஆசிய நாடுகளிலும் பொதுப் பணத்தை பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்துவது குறித்து, இருவரும் முதல் கட்ட ஆலோசனை நடத்திய தகவலும், தற்போது வெளியாகி உள்ளது.
இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த, 2002ம் ஆண்டில், ஐரோப்பிய யூனியனில் உள்ள அனைத்து நாடுகளும், தங்களின் பழைய நாணய முறையை ஒழித்து, யூரோ நாணய முறையை பயன்படுத்தத் துவங்கின. இதனால், ஐரோப்பிய யூனியனில் உள்ள சில நாடுகள், பொருளாதாரத்திலும், வர்த்தகத்திலும் முன்னேற்றம் அடைந்துள்ளன. ஐரோப்பா பாணியில், ஆசிய கண்டத்தில் உள்ள, 48 நாடுகளில், பொதுப்பணம் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து, சீன அதிபரும், பிரதமர் மோடியும் பேச்சு நடத்தி உள்ளனர்.
இந்தியா, அதிக அளவில் இறக்குமதி செய்யும் பொருட்களாக, கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவை உள்ளன. இவற்றை எல்லாம், அமெரிக்க பணமான, 'டாலர்' கொடுத்து பெற வேண்டியதிருப்பதால், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கிறது.
வளர்ச்சி
எனவே, ஆசியா நாடுகளில் இடம் பெற்றுள்ள குவைத், ஈரான், ஈராக் போன்ற எண்ணைய் வளம் அதிகமாக உள்ள நாடுகளிடம், அமெரிக்க டாலருக்கு பதில், பொதுப் பணத்தை இந்தியா வழங்கும்போது, இந்திய பொருளாதாரமும், வர்த்தகமும் வளர்ச்சி அடையும் என, கருதப்படுகிறது. ஜப்பான், சிங்கப்பூர், மலேஷியா உள்ளிட்ட, 48 நாடுகளிடம் ஒருமித்த கருத்து ஏற்படுமானால், பொதுப் பணம் பயன்பாட்டிற்கு வரும் நடவடிக்கைகளை, சீன அதிபரும், பிரதமர் மோடியும் இணைந்து மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது.இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
தஞ்சை பெரிய கோவில் விழா இஸ்ரேல் பிரதமருக்கு அழைப்பு?
தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் விழா, அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. தற்போது, திருப்பணிகள் நடந்து வருகின்றன. அக்கோவிலை கட்டிய ராஜராஜ சோழனின் பெருமையை, உலக அளவில் பிரபலப்படுத்த, பிரதமர் மோடி விரும்புகிறார். அதற்காக, இஸ்ரேல் நாட்டின் பிரதமரை அழைத்து, மத்திய அரசின் சார்பில், பிரம்மாண்ட விழா நடத்தவும், பிரதமர் அலுவலகத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, மும்பையில் உள்ள கப்பல் கட்டுமான நிறுவனத்திற்கு, அந்த காலத்திலேயே மிகப்பெரிய கப்பல் படை வைத்திருந்த ராஜராஜேந்திர சோழன் உருவ படத்தை, மத்திய அரசு வழங்கி, தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE