எளிமை திருமணங்கள் எங்கே?

Added : அக் 19, 2019 | கருத்துகள் (5) | |
Advertisement
எளிமை திருமணங்கள் எங்கே?சமீப காலமாக தமிழகத்தில், பண பலத்தை, அதிகாரத்தை, ஆடம்பரத்தை காண்பிக்கும் விழாக்களாக, திருமண விழாக்கள் மாறி விட்டன. ஆடம்பரத்தில், ஒருவரை ஒருவர் மிஞ்ச வேண்டும் என எண்ணி, படாடோபமாக திருமணங்களை நடத்துகின்றனர்.இதனால், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள், திருமண விழாக்களை நடத்தவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.இப்போது, 45 - 50 வயதில் இருக்கும் பெரும்பாலான, ஆண் -
 எளிமை திருமணங்கள் எங்கே?

எளிமை திருமணங்கள் எங்கே?சமீப காலமாக தமிழகத்தில், பண பலத்தை, அதிகாரத்தை, ஆடம்பரத்தை காண்பிக்கும் விழாக்களாக, திருமண விழாக்கள் மாறி விட்டன. ஆடம்பரத்தில், ஒருவரை ஒருவர் மிஞ்ச வேண்டும் என எண்ணி, படாடோபமாக திருமணங்களை நடத்துகின்றனர்.இதனால், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள், திருமண விழாக்களை நடத்தவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.இப்போது, 45 - 50 வயதில் இருக்கும் பெரும்பாலான, ஆண் - பெண்களின் திருமணத்தில், 'வீடியோ' கூட எடுத்திருக்க மாட்டார்கள்; போட்டோக்களும், அதிகபட்சம், 20 - 30, 'காப்பி'கள் தான் இருந்திருக்கும்.ஆனால், அவர்களின் திருமணத்திற்கு, உற்றார், உறவினர்கள் திரளாக வந்திருந்து, இரண்டு, மூன்று நாட்கள் தங்கியிருந்து, மனம் விட்டு பேசி மகிழ்ந்து, புதிய உறவுகளை புதுப்பித்து இருப்பர். ஆனால், இப்போது, திருமணம் என்பது, சில மணி நேர விவகாரமாகப் போய் விட்டது.சம்பிரதாயமாக, திருமண விழாக்களுக்கு சென்று, மணமக்களுடன் நின்று, 'போட்டோ' எடுப்பதுடன் திருமண விழாக்கள், பலருக்கு முடிந்து போய் விடுகின்றன. ஆனால், அந்த சில மணி நேர நிகழ்வுக்காக, வீண் ஆடம்பரங்கள் ஏராளமாக செய்யப்படுகின்றன.'ஆடம்பர திருமணங்கள் தேவையற்றவை' என, எந்த சமுதாயத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும், மத பெரியவர்களும் கூறுவதில்லை. அதற்கு காரணம், யாரும் கேட்கப் போவதில்லை என்பது தான். இதனால், நாளுக்கு நாள், திருமணங்களில் வீண் ஆடம்பரங்கள் அதிகரித்த வண்ணமாக உள்ளன.நாம் குறிப்பிடும்,20 - 25 ஆண்டுகளுக்கு முந்தைய திருமண விழாக்கள்,உறவுகளின் சங்கம விழாக்களாகவே இருந்தன. ஆடம்பரம், பகட்டு, விளம்பரம், போலி உபசரிப்பு என, துளியும் இருக்கவில்லை. மணமகன் வீட்டருகே மேடை; அதில் மணமக்கள் அமர, அர்ச்சகர் அல்லது குடும்ப பெரியவர்கள் தாலி எடுத்துக் கொடுக்க, மங்கள இசை முழங்க, 'கெட்டி மேளம்... கெட்டி மேளம்...' என, திருமணங்கள் நடந்தன.திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்னரே உறவினர்கள் குவிந்து, திருமண இல்லங்கள், உற்சாகத்தில் களை கட்டும். மணமக்களுக்கு தேவையான அறிவுரைகளை, வீட்டின் முதியோர் சொல்லிக் கொடுப்பர். அக்கம் பக்கம் உள்ள இல்லங்களே, உணவு பரிமாறப்படும் மண்டபங்களாக இருந்தன. சொந்தங்களும், நண்பர்களும், உணவு பரிமாறும், 'சர்வர்'களாக மாறி இருந்தனர்.திருமண பத்திரிகையுடன், வீடு வீடாக சென்று, வெற்றிலை, பாக்கு வைத்து, 'குடும்பத்துடன் வாருங்கள்...' என்றழைக்கும் பண்பு இருந்தது. பக்கத்து வீட்டில் திருமணம் என்றால், அடுத்த வீடுகளில், அடுத்த சில நாட்களுக்கு அடுப்பு எரியாது. அவர்களையும் இணைத்து, மகிழ்ச்சியான விழாவாக திருமணத்தை நம்மவர்கள் நடத்தினர்.ஆனால் இப்போதோ, பெரும்பாலான திருமணங்கள் ஆடம்பரம், வீண் செலவுகள், பகட்டு, போலி உபசரிப்பு, விளம்பரம், சுற்றுச்சூழல் மாசு போன்றவற்றின் கலவையாகவே உள்ளன.மங்கல நாண் பூட்டும் நிகழ்வை காண, மண மேடைக்கு எதிரே, இருக்கை போடப்பட்டிருக்கும். ஆனால், மேடையை மறைத்தபடி, கறுப்பு, வெள்ளை நிற குடைகளுடன், வீடியோ கேமராக்களுடன் வீடியோகிராபர்கள், போட்டோகிராபர்கள், அவர்களின் உதவியாளர்கள் நின்று மறைத்துக் கொள்வர்.திருமணம் முடிந்த அடுத்த நொடியே, போட்டோகிராபர்கள், வீடியோகிராபர்களின் ஆளுகையின் கீழ், மணமக்கள் வந்து விடுகின்றனர். பெயரளவுக்கு உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்து கூறி முடிந்ததும், மணமக்களை தனியாக அழைத்துச் செல்லும் இந்த நபர்கள், இருவரையும், சினிமா நாயகி - நாயகன் போல, விதவிதமான, 'போஸ்'களில் படம் எடுக்கின்றனர்.அதிலும் சில நேரங்களில், எல்லை மீறி, கட்டிப் பிடிப்பது, முத்தம் கொடுப்பது, உணவு ஊட்டுவது, மடியில் படுப்பது என, வீடியோகிராபர்களின் விருப்பங்களை, மணமக்கள் செய்யும் நிலை ஏற்பட்டு விட்டது; அதையும், படக்காட்சிகளாக பதிவு செய்கின்றனர்.கேரளாவிலிருந்து அழைத்து வரப்படும், செண்டை மேளக் கலைஞர்கள், திருமண மண்டபங்கள் முன் நின்று, செண்டை மேளங்களை இசைப்பர்; காது செவிடாகி விடும்; அந்த அளவுக்கு, மேளங்களை அவர்கள், 'உடைப்பர்!'இந்த தொந்தரவுகளும் போதாது என்று நினைத்து, திருமண விழாக்களில் இன்னிசை கச்சேரிகளை ஏற்பாடு செய்து விடுகின்றனர். அதற்காக, பல ஆயிரம் ரூபாயை, தாராளமாக செலவு செய்கின்றனர். அதிக சத்தத்தில் அதிரும் ஒலிபெருக்கிகளால், இதய கோளாறு இல்லாதவர்களுக்கும் வந்து விடும்.திருமண வரவேற்பு விழாவில், நண்பர்கள், உறவினர்களை பார்த்து பேசலாம் என முயற்சித்தால், முடியவே முடியாது; உறவுகளிடம், சைகையில் தான் பேச வேண்டியிருக்கிறது.அது போல, பந்தி என்ற பெயரில், ஏராளமான உணவு வகைகளை, சகட்டு மேனிக்கு வீணடிக்கின்றனர். இவ்வாறு படைக்கப்படும் உணவு பதார்த்தங்களை யாராலும், அத்தனையையும் சாப்பிட முடியாது. கிடைத்தவற்றை, வயிற்றுக்குள் திணித்து, மூச்சு திணறி, காது வெடித்து, 'பிரஷர்' ஏறி, கார், பஸ் பிடித்து, வீடு வந்து சேர்ந்தால் தான் நிம்மதி!சரி, மண விழாவில், மணமகள் அணிந்திருக்கும் ஆபரணங்களுக்கும் அளவே இல்லை. முகம் முழுக்க, கழுத்து நிறைய, கை நிறைய, இடுப்பு நிறைய, கண்ணைக் கவரும் வண்ண கற்களுடன், ஆபரணங்களை அணிகின்றனர். பார்ப்பவர்களுக்கு, பட்டத்து இளவரசியை நினைவுபடுத்துகின்றனர்.சமீபத்தில் இப்படித் தான், ஒரு திருமண விழாவுக்கு சென்றிருந்தேன். மணமகள் அணிந்திருந்த ஆபரணங்களைப் பார்த்து, 'அடடா... நம்ம அண்ணன் ஏராளமாக, மகளுக்கு நகையை சேர்த்து வைத்திருந்தார் போலும். எவ்வளவு அள்ளிப் போட்டிருக்கிறார்... மாப்பிள்ளையும், மாப்பிள்ளை வீட்டாரும் கொடுத்து வைத்தவங்க...' என, மனைவியின் காதுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னேன்.தொடையில் கிள்ளிய என் மனைவி, 'அத்தனையும், 'கவரிங்!' போட்டோ... படங்கள் நன்றாக வரவேண்டும் என்பதற்காக, வாடகைக்கு வாங்கிய நகைகள் அவை. நாளை வந்து பாருங்க. உங்க அண்ணன் மகள் எவ்வளவு நகை போட்டிருக்கிறார் என்று...' என கூறி, தலையை வெட்டினாள்.அந்த அளவுக்கு, போலித் தன்மை, திருமண விழாக்களில் காணப்படுகிறது. அந்த கால திருமணங்களின் போது, பெண்கள், கவரிங் எனப்படும் போலியான தங்கப் பூச்சு நகைகளை அணிவதில்லை; அநேகமாக, அனைத்தும் தங்கமாகவே இருந்தன. வாடகைக்கோ அல்லது பக்கத்து வீட்டு பெண்ணின் நகைகளை வாங்கி அணிவித்தாலோ, அவமானமாக பார்க்கப்பட்டது, அந்த காலத்தில்!

அப்போது, எவ்வளவு பெரிய கோடீஸ்வர மாப்பிள்ளையாக இருந்தாலும், அதிகபட்சம், பட்டுச் சட்டை, பட்டு வேட்டி, பட்டு அங்கவஸ்திரம், கழுத்தில் தங்க சங்கிலி, கையில் வாட்ச், மோதிரங்கள் தான் அணிந்திருப்பார்.ஆனால், இப்போது மணமகன், வட மாநிலத்தவர் போல, உடலுக்கும், உணர்வுக்கும் பொருந்தாத உடைகளை அணிந்துள்ளார். முகத்தில் பெரிய, 'சைஸ்' தாடி வைத்துள்ளார். காலில், விக்ரமாதித்தன் கதையில் வரும் நாயகன் போல, வளைந்த, 'ஷூ' அணிந்திருக்கிறார்.மணமகள் கழுத்தில், மணமகன் தாலி கட்டும் போது, மங்கல வாத்தியங்கள் முழங்கும்; அர்ச்சகர், மந்திரங்களை ஓதுவார். ஆனால் இப்போது, மண்டபமே இடிந்து விழும் அளவுக்கு, தெருவில் உள்ளோருக்கு,5 - 10 நிமிடம் இதயமே நின்று போகும் அளவுக்கு, 'தவ்சண்ட் வாலா' பட்டாசுகளை ஏராளமாக வெடிக்கின்றனர்.திருமண விழாக்கள் தான் என்றில்லாமல், அனைத்து விதமான விழாக்களையும் இப்படி ஆடம்பரமாக நடத்தத் துவங்கி விட்டனர், நம்மவர்கள். எளிமையான திருமணம் பற்றி யாரும் மூச்சு விடுவதில்லை.இதனால், பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டுவது துவங்கி, பிறந்த நாள், காது குத்தும் விழா, பூப்புனித நன்னீராட்டு விழா, கிரஹப்பிரவேசம் என, அனைத்து விழாக்களுக்கும், வருவோரை வரவேற்று, பல அடி உயர, 'பேனர்'கள் வைக்கப்படுகின்றன. கோர்ட் உத்தரவை அடுத்து, இப்போது கொஞ்சம் அடக்கி வாசிக்கப்படுகிறது; அவ்வளவு தான்!திருமணம் என்பது, வாழ்க்கையில் ஒருமுறை. அந்த நாளை, உறவுகளுடன் கூடி மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும். ஆடம்பரமில்லாமல், பொருட்களை வீணாக்காமல், மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல், எளிமையாக நடத்தினால், வாழ்க்கையில் எப்போதும் இன்பமே!தொடர்புக்கு: 94869 44264இ - மெயில்: mariyappan27041971@gmail.com ,ச.மாரியப்பன்சமூக ஆர்வலர்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (5)

கவிஞர் கண்ணநேசன் - சென்னை,இந்தியா
23-அக்-201913:39:44 IST Report Abuse
கவிஞர் கண்ணநேசன் இன்றைய திருமண நிகழ்வுகள் இப்படித்தான் இருக்கின்றன. சாப்பிடக்கூட வேண்டாம் இந்தச் சத்தத்திலிருந்து வெளியே வந்தால் போதுமென்கிற அளவுக்கு இரைச்சல் மிகுந்த இசை. போதாதென்று வாடகைக்கு அழைத்து வரப்படும் இளவட்டங்களின் காக்காவலிப்பு ஆட்டம் வேறு. கட்டுரையாளர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான்...
Rate this:
Cancel
Nagarajan Duraisamy - Fremont,California,யூ.எஸ்.ஏ
22-அக்-201910:42:51 IST Report Abuse
Nagarajan Duraisamy இந்த பகுதியில் நான் எழுதிய கருத்து சுவையாக இருததனாலோ என்னவோ ...
Rate this:
Cancel
22-அக்-201900:54:10 IST Report Abuse
S.V ராஜன்(தேச பக்தன்...) பணம் இல்லாதவர்கள் எளிமையாக நடத்துவது சரிதான் ஆனால் பணம் இருப்பவர்கள் பிரமாண்ட கல்யாணம் நடத்துவது தான் சரியானது. பிரமாண்ட கல்யாணங்கள் மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கின்றது என்பதை யாரும் நினைத்து பார்ப்பதில்லை. யாருக்கும் துன்பம் இல்லாத பொழுது பிரமாண்ட திருமணங்களை தவறு என்று எவ்வாறு சொல்லலாம்?புலியை பார்த்து பூனை சூடு போட்டுகொண்டால் அதற்க்கு பூனை தான் அவதிப்பட வேண்டும் அதைவிடுத்து புலியை தண்டனை ஏற்க சொல்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.இதுபோல ஏழை தேவை இல்லாமல் பணக்காரன் வீட்டு கல்யாணத்தை பார்த்து அதே போல தன் வீட்டு கல்யாணத்திற்காக கடன் வாங்கி கல்யாணம் செய்தால் அதற்கு அவனின் பேராசை தான் காரணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X