இவர் தான்யா நிஜமான கலெக்டர்! வேலை செய்யாதவர்களை, வெளுத்து வாங்கிய கந்தசாமி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இவர் தான்யா நிஜமான கலெக்டர்! வேலை செய்யாதவர்களை, 'வெளுத்து' வாங்கிய கந்தசாமி

Updated : அக் 20, 2019 | Added : அக் 19, 2019 | கருத்துகள் (46)
கலெக்டர்,வேலை, வெளுப்பு, கந்தசாமி, kandhasamy, collector, collector kandhasamy, kandasamy, dinamalar, கலெக்டர் கந்தசாமி, தினமலர்

திருவண்ணாமலை: ''பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், பயனாளிகளுக்கு, வரும்
திங்கட்கிழமைக்குள் வீடு வழங்கவில்லை என்றால், 'சஸ்பெண்ட்' செய்ய தயாராக
இருக்கிறேன்... நான், எதையும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன்,'' என, திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமியின்ஆவேச பேச்சு, சமூக வலைதளமான, 'வாட்ஸ் ஆப்'பில்வேகமாக பரவி வருகிறது.

பிரதமரின் குடியிருப்பு திட்டத்தில், வீடு இல்லா தோர் மற்றும் குடிசை வீடுகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு, அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடு, கட்டி கொடுக்கப்படுகிறது.
இத்திட்டத்தில் வீடு கட்ட, தலா, 2.10 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன் பெற, 'சமூக பொருளாதார கணக்கெடுப்பு பட்டியல் -- 2011' அடிப்படையில், கிராம சபை வழியே, பயனாளிகள் கண்டறியப்பட்டு, பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.


மக்கள் புகார்அதிகாரிகளுக்கு, 'கவனிப்பு' கிடைக்காததால், இத்திட்டத்திற்கு முட்டுக் கட்டை போட்டு வருகின்றனர்.இது குறித்து, தமிழகம் முழுவதும், மக்கள் புகார் அளித்துவருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த, விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும், அது குறித்த புகார் வந்தது.இந்நிலையில், திருவண்ணாமலை கலெக்டராக உள்ள கந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்களின், 'வாட்ஸ் ஆப்' குழுவிற்கு, 'ஆடியோ' ஒன்றை அனுப்பியுள்ளார்.

'வாட்ஸ் ஆப் ஆடியோ'வில், கலெக்டர் கந்தசாமி பேசியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம். நான், கலெக்டர் பேசுகிறேன். கடந்த வாரம், திருவண்ணாமலை மாவட்டத்தில்,
பிரதமரின் வீடு கட்டும் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் குறித்து, ஆய்வு செய்தோம்.கடந்த முறை, வீடு வழங்கும் திட்டத்திற்கு தகுதியானவர்களுக்கும், பொருளாதார
கணக்கெடுப்பில் தேர்வானவர்களுக்கும், வீடு வழங்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அந்த வீடு, யாருக்கும் போகவில்லை.

நாள்தோறும், நிறைய புகார்கள் வருகின்றன. விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும், இது குறித்து புகார்கள் வந்துள்ளன.வரும் திங்கட்கிழமை தான் உங்களுக்கு கடைசி. நான்,இந்த மாவட்டத்தில் இருக்கிறேனா அல்லது நீங்கள் பணியில் இருக்கிறீர்களா என,முடிவு செய்து கொள்ள
வேண்டும்.


'சஸ்பெண்ட்'திங்கட்கிழமைக்குள், பயனாளிகளுக்கு, வீடுகளை ஒதுக்கி தர வேண்டும்; இல்லையென்றால், பஞ்சாயத்து செயலர், பி.டி.ஓ., உள்ளிட்டோரை, 'சஸ்பெண்ட்' செய்ய, நான் தயாராக
இருக்கிறேன். இதை, நீங்கள் எப்படி வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் தவறு செய்வதை பார்த்துக் கொள்ள, நான் இங்கு உட்காரவில்லை. தப்பு செய்பவர்களுக்கு, காவல்
காப்பவன் நான் இல்லை. இதுவே கடைசி.இது, என்னடைய உச்சக்கட்ட கோபம். அனைத்து, பி.டி.ஓ.,க்களும், பஞ்., செயலர்களும் இதை, 'சீரியசாக' எடுத்துக் கொள்ள வேண்டும்.

திங்கட்கிழமை காலையில், நீங்கள் வேலைக்கு வந்து, மாலையில் வேலையோடு
போறீங்களா... இல்லை, வேலை இல்லாமல் போகிறீங்களா என, நீங்கள் முடிவு செய்து
கொள்ளுங்கள்.நான், எதையும் எதிர் கொள்ள தயாராக உள்ளேன்.இவ்வாறு, அவர் பேசியுள்ளார்.

கலெக்டர் கந்தசாமி பேசிய, 'ஆடியோ' சமூக வலைதளங்களில் பரவி, மக்களிடம் அமோக பாராட்டுகளை பெற்று வருகிறது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X