புதுடில்லி:ரயில்வே வாரியத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க, ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
ரயில்வே துறையின் திறனை மேம்படுத்தும் வகையிலும், ஒரே பணியில், தேவைக்கு அதிகமானோரை ஈடுபடுத்துவதை குறைப்பதற்காகவும், ரயில்வே வாரியத்தில் உள்ள அதிகாரிகள் எண்ணிக்கையை குறைக்க, முந்தைய, வாஜ்பாய் ஆட்சி காலத்திலேயே திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், ரயில்வே துறையின் திறமை மேம்படுத்துவதற்காக, சில திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளார். ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவும், இதற்கு ஒத்துழைப்பு அளிக்க திட்டமிட்டுள்ளார்.
இதன்படி, ரயில்வே வாரியத்தில், தற்போது பணியாற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கையை, 200லிருந்து, 150 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மீதமுள்ள, 50 அதிகாரிகளும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் மண்டலங்களுக்கு பணிமாற்றம் செய்யப்படவுள்ளனர். குறிப்பாக, இயக்குனர் மற்றும் அந்த பதவிக்கு மேலான அந்தஸ்து உள்ள அதிகாரிகள் மாற்றம் செய்யப்படவுள்ளனர். 'இதன் மூலம், ஒரே பணியில், ஒன்றுக்கும் அதிகமானோரை ஈடுபடுத்துவதை தவிர்க்க முடியும்.
'மேலும், ரயில்வே மண்டல அலுவலகங்களில், மூத்த மற்றும் திறமையான அதிகாரிகள் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும்' என, ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. இதேபோல், ரயில்வே வாரிய கட்டமைப்பை மாற்றி அமைக்கவும், ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.