பதிலடி!எல்லையில் பாக்., அத்துமீறலுக்கு இந்திய ராணுவம்... பாக்., வீரர்கள் 5 பேர் பலி; பயங்கரவாதிகளும் காலி

Updated : அக் 20, 2019 | Added : அக் 20, 2019
Advertisement

புதுடில்லி:எல்லை பகுதியில், பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதை அடுத்து, இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை குறிவைத்து, இந்திய ராணுவம் நடத்திய பீரங்கி தாக்குதலில், பாக்., வீரர்கள் ஐந்து பேரும், பயங்கரவாதிகள், 25 பேரும் கொல்லப்பட்டனர்; நான்கு பயங்கரவாத முகாம்களும் அழிக்கப்பட்டன.
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவை, மத்திய அரசு, சமீபத்தில் ரத்து செய்தது. இந்த விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்க, அண்டை நாடான பாகிஸ்தான், தொடர்ந்து முயற்சித்து வந்தது. ஆனால், அதன் முயற்சிகள் தோல்வி அடைந்தன.
சதி திட்டம்
இதையடுத்து, காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ வைத்து, தாக்குதல்களை நடத்த வைக்கும் சதித்திட்டத்தில், பாக்., அரசு ஈடுபட்டுள்ளது. பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்கு வசதியாக, காஷ்மீரில், எல்லை பகுதியில், பாக்., ராணுவத்தினர் தொடர்ந்து, அத்துமீறி தாக்குதல் நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் மாலையில், காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில், தாங்தார் பகுதியில் உள்ள கிராமங்களை குறிவைத்து, பாக்., ராணுவத்தினர், அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.

இதில், நம் வீரர்கள் இருவர் உயிரிழந்தனர்; அப்பாவி பொதுமக்களில் ஒருவரும், இதில் உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். வீடுகளும் பலத்த சேதமடைந்தன. இதற்கு பதிலடி தரும் வகையில், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை குறிவைத்து, நம் வீரர்கள், நேற்று காலை முதல், அதிரடியாக பீரங்கி தாக்குதல் நடத்தினர். நம் ராணுவத்தின் கடுமையான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல், பாக்., வீரர்கள் பின்வாங்கினர். இந்த தாக்குதலில், பாக்., வீரர்கள் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். அந்த பகுதியில் முகாம்கள் அமைத்து செயல்பட்டு வந்த பயங்கரவாதிகள், 25 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயம் அடைந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
முற்றிலும் அழிப்பு
இந்திய ராணுவத்தின் தாக்குதலில், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரீன் நீளம் பள்ளத்தாக்கு பகுதியில் செயல்பட்டு வந்த, நான்கு பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. இதற்கிடையே, தங்கள் ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்திய வீரர்கள் ஒன்பது பேர் உயிரிழந்ததாக, பாக்., ராணுவம் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவம், இதை மறுத்துள்ளது. இரு நாட்டு ராணுவமும் நடத்திய இந்த தாக்குதல் காரணமாக, எல்லை பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. நம் எல்லையில், கூடுதல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, ராணுவ தளபதி பிபின் ராவத், எல்லையில் நடந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளார். பயங்கரவாதிகளின், 3 - 4 முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் பாக்., தரப்பில், 6 - 10 வீரர்கள் கொல்லப் பட்டு உள்ள தாகவும் அவர் தெரிவித்தார்.
ராஜ்நாத் ஆலோசனை
எல்லையில் நிலவும் பதற்றத்தை தொடர்ந்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளபதி பிபின் ராவத்துடன், நேற்று ஆலோசனை நடத்தினார். எல்லையில் நடந்த தாக்குதல் குறித்த விபரங்களை கேட்டறிந்ததுடன், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்தார். எல்லையில் நடக்கும் நிகழ்வுகளை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், கூர்ந்து கவனித்து வருவதாகவும், தேவைப்பட்டால், காஷ்மீருக்கு சென்று நிலைமையை கண்காணிக்க திட்டமிட்டு உள்ளதாகவும், ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X