தமிழகத்தில், விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளிலும் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க., சார்பில், இரண்டு தொகுதிகளிலும், வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். அவர்களுக்கு, பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
தி.மு.க., விக்கிரவாண்டி தொகுதியிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ், நாங்குநேரி தொகுதியிலும், வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இவர்களுக்கு, இந்திய கம்யூ., - மா.கம்யூ., - ம.தி.மு.க., - வி.சி., உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்து உள்ளன. இன்று நடக்கும் ஓட்டுப்பதிவுக்காக, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், ஒரு கம்பெனி மத்திய தொழில் பாதுகாப்பு படை, ஐந்து கம்பெனி தமிழக சிறப்பு காவல் படையினரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.புதுச்சேரியில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும், இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை வரும், 24ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கிடையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிற்கு, அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் அனுப்பிஉள்ள புகார் மனு:தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு, விக்கிரவாண்டி தொகுதியில் இருந்து, அ.தி.மு.க., தேர்தல் பொறுப்பாளர்களும், தொண்டர்களும் வெளியேறி விட்டனர். இரண்டு தொகுதிகளிலும், அ.தி.மு.க.,விற்கு தான் வெற்றி வாய்ப்பு உள்ளது என, கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.
இதனால், தி.மு.க., முக்கிய பிரமுகர்களான நேரு, வேலு, பொன்முடி, ஜெகத்ரட்சகன் ஆகியோர், தேர்தலின் போது கலவரத்தை ஏற்படுத்துவதற்காக, தொகுதிக்கு அருகேயுள்ள இடங்களில், குண்டர்களுடன் தங்கியுள்ளனர். இவர்கள், ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றி, சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட உள்ளதாக தெரிகிறது. வாக்காளர்களை மிரட்டி, சாதகமாக ஓட்டளிக்க வேண்டும் என, இவர்கள் கட்டாயப்படுத்த முயல்வதாகவும் செய்திகள் வருகின்றன. எனவே, அங்கிருந்து அவர்களை வெளியேற்ற வேண்டும். அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், மூன்று அடுக்கு பாதுகாப்பு போட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.