பெங்களூரு:சாவர்க்கர் விவகாரத்தில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை, பா.ஜ., தலைவர்கள் வார்த்தையால் 'விளாசி' வருகின்றனர். அவருக்கு கட்சியின் மற்ற தலைவர்கள் ஆதரவு தெரிவிக்காமல், உள்ளுக்குள், 'குஷி'யுடன் நிலைமையை வேடிக்கை பார்க்கின்றனர்.
சுதந்திர போராட்ட வீரரான வீர சாவர்க்கருக்கு, 'பாரத ரத்னா' விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென, மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் அறிக்கையில் பா.ஜ., தெரிவித்துள்ளது. இதற்கு, அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.அண்டைய மாநில விஷயம் பற்றி கர்நாடகாவில் முக்கிய பிரச்னையாக கருதி, பலரும் விவாதித்து
வருகின்றனர். சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, 'காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாரத ரத்னா விருது அளிப்பதா?' என, விமர்சித்தார்.
அவரது கருத்தால் மாநில பா.ஜ., தலைவர்கள் கோபமடைந்து, ஒட்டுமொத்தமாக,
சித்தராமையா மீது பாய்ந்துள்ளனர்.மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் ஜோஷி, சதானந்த கவுடா, எம்.பி., சித்தேஷ்வர், அமைச்சர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், ஈஸ்வரப்பா, சி.டி.ரவி, ஸ்ரீராமுலு, முன்னாள் அமைச்சர் சொகுடு சிவண்ணா உட்பட, பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.தனிப்பட்ட முறையில் வசை பாடியும் கூட, மாநில காங்கிரசில் எந்த தலைவரும், சித்தராமையாவுக்கு ஆதரவாக வாய் திறக்கவில்லை.
இதை வேடிக்கை பார்த்து வரும் பழம்பெரும் காங்கிரசார், உள்ளுக்குள் குஷியாக உள்ளனர்.
சித்தராமையாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்துவிடக் கூடாது என அதிகபட்ச முயற்சி மேற்கொண்டு, தோல்வி அடைந்ததால், அவர்கள் அதிருப்தியில் இருந்தனர்.
இவர்களின் அதிருப்தியை பொருட்படுத்தாமல், தன் பணியை சித்தராமையா செய்து வருகிறார். மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், பா.ஜ., வை கடுமையாக சாடுகிறார்.கர்நாடகா, மஹாராஷ்டிரா உட்பட மற்ற மாநிலங்களின் வெள்ள பெருக்கு சூழ்நிலை பற்றி சித்தராமையா விமர்சித்த போது, பா.ஜ., மாநில தலைவர்கள்
மவுனமாக இருந்தனர். ஆனால், சாவர்க்கர் விஷயத்தில் பதிலடி கொடுக்க துவங்கியுள்ளனர்.
இந்த சூழலில், சித்தராமையா பற்றி பா.ஜ.,வினர் பேசுவதற்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போன்று காங்கிரஸ் தலைவர்கள் நடந்து கொள்கின்றனர்.வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது கொடுப்பது பற்றி சித்தராமையா விமர்சித்திருப்பது, அவரது கவுரவத்துக்கு அழகல்ல.
அரசியல்உள்நோக்கத்துடன் பேசுவதை, அவர் நிறுத்த வேண்டும். ஏற்கனவே மக்கள் அவருக்கு பாடம் கற்பித்தும், அவருக்கு புத்திவரவில்லை என்றால் என்ன செய்வது? சித்தகங்கா மடத்தின் சிவகுமார சுவாமிகளுக்கு பாரத ரத்னா விருது கிடைக்க வேண்டும் என்பது, நான் உட்பட எங்கள் கட்சி தலைவர்களின் விருப்பம்.
அஸ்வத் நாராயணன்,
துணை முதல்வர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE