புதுடில்லி : 2024 ம் ஆண்டு உலக அளவில் வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 20 நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி, இந்தியா முன்னேறும் என கணிக்கப்பட்டுள்ளது.

2024 ம் ஆண்டு உலக நாடுகளின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது பற்றி சர்வதேச நாணய நிதியம் கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு உலக அளவில் வளர்ச்சி என்பது குறைவாகவே இருக்கும். பொருளாதாரமும் மந்தமாகவே இருக்கும். இந்த ஆண்டு உலக அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் வளர்ச்சியில் 3 சதவீதம் சரிவு ஏற்படலாம்.
இது உலகின் 90 சதவீதம் பகுதியை பாதிக்கும். வளர்ச்சி விகித பட்டியலில் சீனா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் என்றாலும், சர்வதேச ஜிடிபி வளர்ச்சியின் சரிவு காரணமாக வளர்ச்சி மந்தமாகவே இருக்கும்.

உலக வளர்ச்சியில் அமெரிக்காவின் பங்கு முக்கியமானதாக இருந்தாலும், 2024 ல் வளர்ச்சி ஆதிக்க நாடுகள் வரிசையில் இந்தியாவை தொடர்ந்து 3 இடத்திலேயே இருக்கும். இந்தோனேசியா 4வது இடத்திலும், ஐரோப்பா 9வது இடத்திலும் இருக்கும். ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி ஜப்பான் 5 வது இடம்பிடிக்கும். ஜெர்மனி 7 வது இடத்திலும் இருக்கும்.
இவை தவிர துருக்கி, மெக்சிகோ, பாகிஸ்தான், சவுதி அரேபியா, ஸ்பெயின், போலந்து, கனடா ஆகிய நாடுகள் டாப் 20 நாடுகள் பட்டியலில் இடம் பிடிக்கும். அதே சமயம் வியட்நாம் டாப் 20 பட்டியலில் இருந்து வெளியேறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.