புதுடில்லி: கேரளாவின் 7 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கொச்சியில் விடாது பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கி உள்ளன. நகரில் முக்கிய சாலைகளிலும் நீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கொச்சியில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. 9 மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுவதாக இந்திய வானிலை மையம் நேற்று (அக்.,20) தெரிவித்திருந்தது.
ஆரஞ்சு அலர்ட்

இந்நிலையில் நாளை முதல் கேரளாவின் கொல்லம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கன்னூர், காசர்காடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதனால் 13 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் படியும் கேரள அரசை இந்திய வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் திருவனந்தபுரம், கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, திரிசூர், பாலக்காடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இன்று மாலை விடுக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE