சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, எஸ்.கே.கவுல் பதவி வகித்தபோது, முதலாவது நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்து கொண்டிருந்தார். அப்போது, தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி, வழக்கறிஞர்கள் சிலர், முதலாவது நீதிமன்றத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர்.இதையடுத்து, உயர் நீதிமன்றத்துக்கு, சி.ஐ.எஸ்.எப்., என்ற, மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டது. பின், உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும், சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்பு வழங்கப்பட்டது;2015 நவம்பர் முதல், இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பான வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி, நீதிபதி சரவணன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, ''உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும், சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்பை நிரந்தரமாக்க வேண்டும்,'' என்றார்.
அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ''உயர் நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் உள்ளன. சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்பை முழுமையாக நீட்டித்தால், வழக்கறிஞர்களை சந்திக்க, அவர்களின் அறைகளுக்கு வருபவர்களுக்கு சிரமம் ஏற்படும்,'' என்றார்.
இதையடுத்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
மறு உத்தரவு வரும் வரை, உயர் நீதிமன்றத்துக்கு அளிக்கப்படும், சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்பை நீட்டிக்கிறோம். உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் மற்றும் எழும்பூர், சைதை உள்ளிட்ட சென்னை நகரில் உள்ள மற்ற நீதிமன்றங்களுக்கும், சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்பு வழங்குவது குறித்து, பாதுகாப்பு குழு ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க வேண்டும்.இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.