புதுடில்லி: 'அயோத்தி வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்பு, நாட்டின் எதிர்கால அரசியலில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்' என, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், முஸ்லிம் அமைப்புகள் கூறியுள்ளன.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
ஒத்திவைப்பு
இந்த வழக்கில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த வழக்கில் தங்களுடைய முக்கியமான கோரிக்கைகள் என்ன, எந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி, அனைத்து தரப்பினரையும், உச்ச நீதிமன்ற அமர்வு கேட்டிருந்தது.அதன்படி, ஹிந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில், சீலிட்ட உறையில், அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
உத்தர பிரதேச சன்னி வக்பு வாரியம் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள் சார்பில், செய்தி அறிக்கையும் கொடுக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், 'இந்த வழக்கில், சீலிட்ட உறையில் தாக்கல் செய்த அறிக்கையை வெளிப்படையாக பதிவு செய்ய வேண்டும்' என, முஸ்லிம் அமைப்புகள், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்விடம் நேற்று முறையிட்டன. அதை, அமர்வு ஏற்றுக் கொண்டது.
அரசியல் சாசனம்
மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவான் தயாரித்துள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:அயோத்தி வழக்கில் இந்த நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருந்தாலும், அது நாட்டின் எதிர்கால சந்ததியினர் இடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், நாட்டின் அரசியல் எதிர்காலத்திலும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
கடந்த, 1950ல் இந்தியாவை குடியரசாக அறிவித்த அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை உள்ள, கோடிக்கணக்கான மக்கள் மனதில், இந்த தீர்ப்பு பாதிப்பை ஏற்படுத்தும்.இந்த தீர்ப்பு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை மனதில் கொண்டு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இருக்க வேண்டும். பல்வேறு மதங்கள், பல்வேறு கலாசாரங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது. உச்ச நீதிமன்றமே, அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டிய அமைப்பு. அதனால், எதிர்கால சந்ததியினர் இந்தத் தீர்ப்பை எப்படி பார்ப்பர் என்பதை உணர்ந்து, அதற்கேற்ப தீர்ப்பு அமைய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE