அனுமதிக்கு வந்த, 'லே-அவுட்'... அதிகாரிக்கு ரூ. 25 லட்சம் ரேட்!

Updated : அக் 22, 2019 | Added : அக் 22, 2019
Share
Advertisement
 அனுமதிக்கு வந்த, 'லே-அவுட்'...  அதிகாரிக்கு ரூ. 25 லட்சம் ரேட்!

தீபாவளி பர்ச்சேஸ்க்கு கிளம்பிய சித்ராவும், மித்ராவும், டவுன்ஹால் கார்ப்பரேஷன் ஆபீஸ் அருகே ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு, ஜவுளி கடையை நோக்கிச் சென்றனர்.''என்னக்கா, கார்ப்பரேஷன் ஆபீசர் மீதான புகாரை விசாரிக்கச் சொல்லி, லஞ்ச ஒழிப்புத்துறையில இருந்து, கமிஷனருக்கு லெட்டர் வந்திருக்காமே...'' என, நோண்ட ஆரம்பித்தாள் மித்ரா.

''ஆமா மித்து, 'வெஸ்ட் ஜோன்'ல இருக்கற 'லேடி' ஆபீசர் மேல ஏகப்பட்ட புகார் வருதாம். அந்த ஜோன்ல 'ஈகோ' பிரச்னையும் இருக்காம். உயரதிகாரிங்க நடவடிக்கை எடுக்காததால, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு யாரோ 'பெட்டிசன்' போட்டிருக்காங்க. அங்க இருந்து, கார்ப்பரேஷன் கமிஷனருக்கு விசாரிச்சு நடவடிக்கை எடுக்கச் சொல்லி, அனுப்பி வச்சிருக்காங்க. இனியும் நடவடிக்கை எடுக்கலைன்னா, 'ரெய்டு' நடத்தி, கைது செய்வாங்க போலிருக்கு,''

''கார்ப்பரேஷன் அதிகாரிங்க, திருந்தவே மாட்டாங்களா. ஏற்கனவே ரெண்டு ஆபீசர்ஸ் கைதாகி, இப்ப தான், ஜாமின்ல வெளியே வந்திருக்காங்க. வருஷத்துக்கு ஒருத்தரை கைது செஞ்சா தான், கார்ப்பரேஷன்ல இருக்கறவங்க ஒழுங்கா வேலை பார்ப்பாங்க போலிருக்கு,'' என, நொந்து கொண்டாள் மித்ரா.

''மித்து, இன்னொரு அதிகாரியை பத்தி சொன்னா, வாயைடைச்சு போயிடுவ. ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்கு நெருக்கமான அந்த அதிகாரிக்கு, 'லே-அவுட்' அப்ரூவல் வாங்கிக் கொடுத்ததுக்காக, 25 'ல'கரம் கொடுத்திருக்காங்களாம். திருப்பதிக்கு போயி, காணிக்கை போட்டுட்டு வந்திருக்காரு,''''அடங்க மாட்டாங்க போலிருக்கு,'' என்ற மித்ரா,

''ரூ.2,000க்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு கொடுக்குறாங்களாமே,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள்.''ஆமாப்பா, ரேஷன் கடையில, 'யூஸ் பண்ற, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியை சர்வீஸ் செய்ற இன்ஜினியருதான், அவரு. தெற்கு வட்ட வழங்கல் அலுவலகத்தில், கோலோச்சுறாரு. 2,000 ரூபாயை கொடுத்தா போதுமாம்; 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு கொடுப்பாராம்.''கார்டுல பெயர் சேர்க்குறது, நீக்குறதுன்னு எல்லா வேலையையும் அவரே செய்றாராம். மாவட்ட அதிகாரிக்கு, முழு முதற்கடவுளின் பெயர் கொண்டவர்தான், 'ஆல் இன் ஆல்' ஆக இருக்கிறாராம்,'' என, பேசிக்கொண்டே, ஒப்பணக்கார வீதியிலுள்ள ஜவுளிக்கடைக்கு சித்ரா நுழைந்தாள்.

கூட்ட நெரிசலுக்கு இடையே, சுடிதார் செக் ஷனுக்கு சென்றனர். ரகங்களை எடுத்துக் காட்டுவதற்கு ஊழியர்கள் திணறிக் கொண்டிருந்தனர்.''அக்கா, எனக்கு இந்த கலர் நல்லா இருக்குமா,'' என்றவாறு, 'பிங்க்' நிறத்தில், 'எம்ப்ராய்டரி' போட்டிருந்த சுடிதாரை எடுத்துக் காட்டினாள் மித்ரா.

''சூப்பரா இருக்குப்பா, எடுத்துக்கோ,'' என்ற சித்ரா, ''மித்து, ஹேண்ட் பேக்கை பத்திரமா வச்சுக்கோ. தீபாவளி நேரத்துல திருடுற கோஷ்டி அதிகமா சுத்திக்கிட்டு இருக்கும். ஜாக்கிரதையா இருக்கணும்,'' என்றாள்.''ஆமாக்கா, பணத்தை திருடுறதுக்குனு, டீம் சுத்திக்கிட்டு இருக்காம். இதுல ஒரு குரூப், சித்ரா, நேரு நகர், என்.ஜி.பி., ஏரியாவுல, பெட்டிக்கடைகளை குறிவச்சு, நைட் நேரத்துல வேலைய காட்டுதாம்.

பணம், பீடி, சிகரெட், புகையிலை பாக்கெட்டுகளை துாக்கிட்டு போயிடுறாங்க. தெனமும் ஒரு கடைன்னு ஏழு நாள்ல ஏழு கடைகள்ல அள்ளியிருக்காங்க.''கடைக்காரங்க, போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுக்க முடியாம இருக்காங்க. அதனால, திருட்டு கும்பல் ஒவ்வொரு ஏரியாவா கைவரிசை காட்டிட்டு இருக்கு. இரவு ரோந்தை தீவிரப்படுத்துனா, நல்லாயிருக்கும்,'' என்ற மித்ரா, பேன்சி சேலை பிரிவுக்குள் நுழைந்தாள்.

''மித்து, கஷ்டப்பட்டவங்களை கழட்டி விட்டுட்டு, எதுவுமே செய்யாதவங்களுக்கு மெடல் கொடுக்கப் போறாங்களாமே...''''அதுவா, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, அத்திவரதர் தரிசன நிகழ்ச்சி நடந்துச்சுல்ல. நம்மூர் போலீஸ்காரங்க, 20 நாட்களுக்கும் மேல முகாமிட்டு, ராத்திரி, பகலா பாதுகாப்பு பணியில ஈடுபட்டாங்க. சிறப்பா வேலை பார்த்தவங்களுக்கு சி.எம்., மெடல் அறிவிச்சிருக்காங்க.''அந்த லிஸ்ட்டுல, உயரதிகாரிங்க சிபாரிசு செஞ்சவங்க பெயர் மட்டும் இருக்காம்; ரோட்டுல நின்னு கஷ்டப்பட்டவங்களை கழட்டி விட்டுட்டாங்களாம். போலீஸ்காரங்க புலம்பிட்டு இருக்காங்க,''

''இதேமாதிரி, வனத்துறையிலும் நடக்குதாம். வன விலங்குகளை காப்பாத்துற டாக்டர்கள், வனத்துறையினருக்கு 'அவார்டு' கொடுக்குறது இல்லை. யானைகள் உயிரிழப்புக்கு காரணமா இருக்கிற, வேலையே செய்ய தெரியாதவங்களுக்கு கொடுக்கறாங்கன்னு, வனத்துறையினர் புலம்பிட்டு இருக்காங்க...'' என்ற மித்ரா, ஆரஞ்சு நிறத்தில், 'பார்டர்' வச்ச சேலையை தேர்வு செய்தாள்.''ஏம்ப்பா, அந்த ரெண்டு பேரையும் 'அரெஸ்ட்' செஞ்சிட்டாங்களாமே...''

''ஆமாக்கா, சித்த மருத்துவரை மிரட்டிய போலி நிருபர்களைதானே சொல்றீங்க? சித்த மருத்துவர் நேரடியா போலீஸ் கமிஷனர் ஆபீசில் புகார் கொடுத்துட்டார். உயரதிகாரிகள் உத்தரவிட்டபிறகும்கூட போலி நிருபர்கள் மேல ஆக் ஷன் எடுக்காம இழுத்தடிச்சு, குனியமுத்துார் போலீஸ் ஸ்டேஷன்ல அதிகாரிக போக்கு காட்டியிருக்காங்க. 'லா அண்ட் ஆர்டர்' 'டிசி' பாலாஜி சரவணன், போன்ல கூப்பிட்டு, 'லெப்ட் ரைட்' வாங்கிட்டாரு... அப்புறமாத்தான் ரெண்டு போலி நிருபர்களையும் கைது செஞ்சாங்களாம்...''

''அதெல்லாம் சரி, கல்லுாரி முதல்வர் பதவிக்கு கூட அடிதடி நடந்துச்சாமே,'' என, 'ரூட்' மாறினாள் மித்ரா.''அதுவா, அரசு பி.எட்., கல்லுாரி முதல்வர் பொறுப்புல இருந்த பேராசிரியை, ஆறு மாசத்துக்கு மெடிக்கல் லீவுல போனாரு. ஆண் பேராசிரியர் ஒருத்தரிடம் பொறுப்பு ஒப்படைச்சிருந்தாங்க. விடுமுறை முடிஞ்சு பேராசிரியை திரும்பி வந்ததுக்கு அப்புறமும் பொறுப்பை ஒப்படைக்கலையாம். சட்ட போராட்டம் நடத்தி, பதவியை மறுபடியும் அந்த பேராசிரியை வாங்கியிருக்காங்களாம்.''

''அடடே...'' என்றபடி, 'பில்' தொகை செலுத்த, 'க்யூ'வில் நின்றிருந்த மித்து, ''தணிக்கை துறை அதிகாரிகளையும் சரிக்கட்ட முயற்சி நடக்குதாமே,,'' என, இழுத்தாள்.''நேத்துதான் கேள்விப்பட்டேன். கவர்மென்ட் ஆஸ்பிட்டல்ல மருந்து, மாத்திரை வாங்குனதுல, அரசுக்கு ரூ.70 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது சம்பந்தமா ஏற்கனவே பேசுனோமே. அந்த தொகையை கருவூலகத்துல செலுத்தச் சொல்லி உத்தரவு போட்டுட்டாங்க.''ரூ.25 லட்சத்தை கட்டியிருக்காங்க. மீதமுள்ள தொகையை கட்டுறதுக்காக, அதிகாரிகளை சந்தித்து பேசிப்பார்த்துருக்காங்க; உள்ளூர் பிரமுகரை சந்திச்சும் உதவிக்கரம் கேட்டுருக்காங்க. அவரோ, இந்த விஷயத்துல உதவி செய்ய முடியாதுன்னு நழுவிட்டாராம். தணிக்கைத்துறை அதிகாரிகளையும் மடக்க முயற்சி செஞ்சிருக்காங்க; முடியாததால, என்ன செய்றதுன்னு தெரியாம, முழிக்கிறாங்க...''துணிகளை 'டெலிவரி' வாங்கி விட்டு, கடையை விட்டு இருவரும் வெளியே வந்தனர்.

ராஜவீதி கார்ப்பரேஷன் பார்க்கிங் ஏரியா அருகே உள்ள பேக்கரிக்குள் நுழைந்தனர்.பப்ஸ், கிரீன் டீ ஆர்டர் செய்த மித்ரா, ''அக்கா, ரோட்டுல கூட வண்டியை நிறுத்தலாம். கார்ப்பரேஷன் பார்க்கிங் இடத்துல மட்டும் நிறுத்திடக்கூடாது. நிறுத்துன ஒடனே, 20 ரூபா வாங்குறாங்க. ஆறு மணி நேரத்தை கடந்தா, அவ்ளோ தான், பர்சுல இருக்கிற பணத்தை பறிச்சிடுவாங்க.''ஒவ்வொரு வருஷமும் இப்படித்தான் நடக்குது. கார்ப்பரேஷன் சென்ட்ரல் ஜோன் அதிகாரிக்கு நல்லா தெரியும். 'பங்கு' வாங்கிட்டு, நல்லா சம்பாதிக்கட்டும்னு விட்டுடுறாரு போலிருக்கு,'' என்றாள்.டீ குடித்து விட்டு, துணிப்பைகளுடன், வண்டியை நிறுத்திய இடங்களுக்கு, கூட்ட நெரிசலுக்கு இடையே இருவரும் நடந்து வந்தனர்.ஸ்கூட்டரை சித்ரா ஓட்ட, பின்னால், மித்ரா அமர்ந்து கொண்டாள்.

அரசு மருத்துவமனையை கடந்தபோது, ''மித்து, இந்த ஆஸ்பத்திரிக்கு டிரீட்மென்ட்டுக்கு போனா, நோய் கூடுதலா வந்துரும் போலிருக்கு,'' என்றாள்.''அதுவாக்கா, பிரசவ வார்டுக்கு பக்கத்துல நிலத்துக்குள்ள சாக்கடை குழாய் இருக்கு. அதுல கசிவு ஏற்பட்டு, கழிவு நீர் வெளியேறி, தண்ணீர் தொட்டியில இறங்குதாம். ஆஸ்பத்திரிக்காரங்க, பொதுப்பணித்துறைக்கு தகவல் சொல்லிட்டாங்க. இன்னைக்கு, நாளைக்குன்னு இழுத்துட்டு இருக்காங்களாம்.''கழிவு நீர் கலந்த தண்ணீரே, எல்லா வார்டுக்கும் போகுதாம்.

நோய் தொற்று ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்கறதால, டாக்டர்கள் பயந்துட்டு இருக்காங்களாம்,''வீட்டுக்கு முன் ஸ்கூட்டரை சித்ரா நிறுத்தியபோது, அருகில் இருந்து ரேஷன் கடையில் பொருட்கள் இறக்கிக் கொண்டிருந்தனர்.அதைப்பார்த்த மித்ரா, ''அக்கா, வாளையார், வேலந்தாவளம் வழியா, பைக்குல ரேஷன் அரிசி கடத்துறாங்களாம். ரோந்து போலீஸ்காரங்க கண்டுக்காம விட்டதுனால, டீமையே இன்ஸ்பெக்டர் மாத்தி அமைச்சிருக்காரு.''இருந்தாலும், கடத்தல்காரங்க, எப்ப, எந்த வழியா போவாங்கன்னு, பழைய டீம்ல இருந்தவங்க கரெக்ட்டா தெரிஞ்சு வச்சிருக்காங்க.

அந்த நேரத்துல, மீனாட்சிபுரம் சுற்றுப்புகுதியில முகாமிடுறாங்களாம். ஒரு வண்டிக்கு ரூ.500 வசூலிக்கிறாங்களாம். ஒரு நாளைக்கு, ஏழு டன் அரிசி கடத்துறாங்களாம்...'' என்றபடி, துணிப்பைகளை துாக்கிக் கொண்டு, வீட்டுக்குள் நுழைந்தாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X