முப்பது லட்சத்தை 'லவட்டிய' அதிகாரி... முப்பொழுதும் வசூல்வேட்டையில் போலீசார்!

Updated : அக் 22, 2019 | Added : அக் 22, 2019
Share
Advertisement
தீபாவளிக்கு ஐந்து நாட்களே உள்ள நிலையில், திருப்பூர் முழுவதும் மக்கள் மற்றும் வாகன நெரிசலால், களை கட்டியிருந்தது. சித்ராவும், மித்ராவும், பட்டாசு வாங்க அவிநாசி ரோட்டில் கூட்ட நெரிசலில் சிக்கி, ஊர்ந்து சென்று கொண்டிருந்தனர்.''அக்கா... தீபாவளிக்கு அஞ்சு நாள் இருந்தாலும், மக்களுக்கு பண்டிகை உற்சாகம் வந்திடுச்சு பார்த்தீங்களா?''''கரெக்டா சொன்னடி. நிறைய பேர்
 முப்பது லட்சத்தை 'லவட்டிய' அதிகாரி... முப்பொழுதும் வசூல்வேட்டையில் போலீசார்!

தீபாவளிக்கு ஐந்து நாட்களே உள்ள நிலையில், திருப்பூர் முழுவதும் மக்கள் மற்றும் வாகன நெரிசலால், களை கட்டியிருந்தது. சித்ராவும், மித்ராவும், பட்டாசு வாங்க அவிநாசி ரோட்டில் கூட்ட நெரிசலில் சிக்கி, ஊர்ந்து சென்று கொண்டிருந்தனர்.''அக்கா... தீபாவளிக்கு அஞ்சு நாள் இருந்தாலும், மக்களுக்கு பண்டிகை உற்சாகம் வந்திடுச்சு பார்த்தீங்களா?''''கரெக்டா சொன்னடி. நிறைய பேர் வெளியூர் போறதால, டிரெஸ், பட்டாசு, ஸ்வீட் பர்ச்சேஸ் பண்றதுக்காக, ஒட்டு மொத்தமா வெளியே வந்துட்டாங்க.
அதனாலதான், இவ்ளோ கூட்டம். அதிலயும் பஸ் ஸ்டாண்டில் அதிகம் மித்து,''''ஆமாக்கா... உண்மைதான். அதிலும், பஸ் ஸ்டாண்டை வச்சு, ஒரு அரசியல் வந்தது, கேட்டீங்களா?''''தெரியலையே''''நஞ்சப்பா ஸ்கூல் கிரவுண்ட்ல தற்காலிக பஸ் ஸ்டாண்ட் போடலாம்னு, கார்ப்ரேசன்காரங்க, ஐடியா பண்ணினாங்க. இது தெரிஞ்சுகிட்ட முன்னாள் மாணவர்கள் சிலர், ஸ்கூல் கிரவுண்ட் வீணா போயிடும். அதே மாதிரி மத்த பங்ஷனுக்கும் கிரவுண்ட் கேப்பாங்க. அதனால, அனுமதி வழங்க கூடாதுன்னு, கலெக்டர்கிட்ட போயி மனு கொடுத்தாங்க,''''அப்புறம் என்னாச்சுடி?''''மனுவை வாங்கின கலெக்டர், வேற இடம் பாருங்கன்னு ஆர்டர் போட்டுட்டார்.
அதுக்குள்ள, தோழர்கள், தனியா மனு கொடுத்தாங்களாம். உடனே, 'சவுத்' ''அப்படி ஒரு ஐடியாவே இல்லை.. பொய் பிரசாரம் செய்யாதீங்க,'ன்னு, 'வாட்ஸ் ஆப்' குரூப்பில், பிரசாரமே செஞ்சிட்டாரம்,''''எப்படியோ, அந்த பிரச்னைக்கு ஆரம்பித்திலேயே முற்றுப்புள்ளி வச்சிட்டாங்க. ஆமா... மித்து, கார்ப்ரேஷன் மேல எம்.பி., ஏன், ரொம்ப டென்ஷனா இருக்கற விஷயம் உனக்கு தெரியுமா?,''''ஊஹூம்.. தெரியாதுங்க்கா,''''அட... எந்த விஷயத்தையும், கார்ப்ரேஷன் அதிகாரிங்க, எம்.பி.,கிட்ட சொல்றது இல்லையாம்.
இதனால, 'பஸ் ஸ்டாண்டை எதுக்கு இடிக்கிறீங்க, நல்லா இருந்த டவுன்ஹால்ல இடிச்சிட்டீங்க. அதே மாதிரி, எல்லா மார்க்கெட்டையும் இடிக்கறீங்க? இதெல்லாம் சரியில்லைனு அறிக்கை மேல் அறிக்கை விடறாராம். இருந்தாலும், கார்ப்ரேஷன்காரங்க, வழக்கம்போல, எம்.பி.,ய கண்டுக்கறதில்லையாம்,'' என்றாள் சித்ரா.''ஆளுங்கட்சி எம்.பி.,யாக இருந்தாதான் கண்டுப்பாங்க போல,'' என்ற மித்ரா, ''தொண்டர்கள் சொல்றத பார்த்தா, உள்ளாட்சி தேர்தல் வர்ற மாதிரி தெரியலையே,'' சந்தேகம் கேட்டாள்.''ஒட்டுமொத்தமாகவே, அ.தி.மு.க., காரங்க சொல்ற விஷயம்தான் இது. ஆனா, கோர்ட் ஆர்டரை செயல்படுத்த, தேர்தல் கமிஷன் ஜரூரா வேலை செய்யுது. இதனால, வாக்காளர் பட்டியலை சொதப்பிடலாம்னு ஒரு 'ஐடியா' பண்ணியிருக்காங்களாம்,''''அதெப்டிங்க்கா... முடியும்?''''வாக்காளர் பட்டியலில், கணவன், மனைவிய கூட பிரிச்சு, வெவ்வேறு வார்டில் சேர்த்திட்டாங்க. அதேபோல, குடும்பத்த மூன்றாக பிரிச்சு, அவங்களுக்கு சம்பந்தமில்லாத ஏரியாவுல சேர்த்திட்டாங்க. இப்படி பல இடத்துல இருந்து புகார் வந்திருக்கு. இதையே காரணம் காட்டி, யாராவது, கோர்ட்ல கேஸ் போட்டு, இன்னொரு ஆறு மாசம் தள்ளிடலாம்னு திட்டம் இருக்குதாம்,''''ஏங்க்கா.. ரூம் போட்டு யோசிப்பாங்க போல.
ஆமா, பட்டாசு வாங்கலாமுன்னு சொல்லி, லிங்கம்பாளையத்துக்கே கூட்டிட்டு வந்துட்டீங்க,'' புலம்பினாள் மித்ரா.''ஆமாண்டி, மித்து. இங்கேதான், கூட்டுறவு சங்க கடை போட்டிருக்காங்க. தனியாருக்கு இன்னமும் லைசென்ஸ் கொடுக்கலையாம். 'ஆன்லைனில்' பதிவு செஞ்சாலும், வழக்கம் போல, ஒவ்வொரு 'துறை'களிலும் 'துரை'களையும் கவனிச்சாதான் 'லைசென்ஸ்' வருதாம்,''''அதுவுமில்லாம, பெட்டி, பெட்டியா பட்டாசு வேற கொடுக்கணுமாம். இதுக்கு, சும்மாவே இருந்திடலாம்னு, பலரும் பும்பித் தள்ளறாங்க,'' என்ற மித்ரா, சொைஸட்டி முன் வண்டியை நிறுத்தினாள்.
திடீரென மழைத்துளிகள் விழவே, இருவரும் ஓடிச்சென்று, அங்கிருந்த 'ெஷட்டில்' உட்கார்ந்து கொண்டனர்.''மித்து, இப்படியே மழை வந்தால, 'தீபாவளி' அதோகதிதான்,''''ஆமாங்க்கா... எனக்கு அதே கவலைதான். ஆனா, பக்கத்திலுள்ள கிராம மக்களுக்கு வேற கவலைங்க்கா..''''என்னடி, பொடி வைச்சு பேசறே?''''இல்லக்கா.. விஷயத்தை சொல்றேன், கேளுங்க. வேட்டுவபாளையம் கிராமத்தில் நடுராத்திரி மண் லோடு லாரி ஒன்னு, சேற்றில் சிக்கி நின்று விட்டது. சந்தேகப்பட்ட பொதுமக்கள், தகவல் சொன்னதும், அதிகாரிகள் உடனே வந்து லாரியை தாலுகா ஆபீஸ் கொண்டு போய்ட்டாங்க,''''சரிடி.. இதில், கவலைப்பட என்ன இருக்கு?''''விஷயத்தை முழுசும் கேளுங்க. மறுநாள் காலையில் லாரி அங்கில்லையாம்.
எப்படியோ அதிகாரிங்களை சரிக்கட்டி, எடுத்துட்டு போய்ட்டாங்களாம். கஷ்டப்பட்டு புடுச்சு கொடுத்துமே, இப்டியாயிடுச்சேன்னு, மக்கள் கவலைப்பட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.
''அதிகாரிகள் மட்டுமல்ல, அரசியல்வாதிகளும்தான். 'இப்ப பாரு, இந்த பார்' ஏலத்தில், ரெண்டு முக்கிய புள்ளிகள் வெளையாடறாங்களாம்,''''அப்படியா, சங்கதி?''''ஆமாங்க்கா, 'சரக்கு' கடையுடன் உள்ள 'பார்'களுக்கான ஏலம், இரண்டு தடவை ரத்து செஞ்சுட்டாங்க. மறுபடியும் இந்த வாரம் நடக்குதாம். ஆனா, ஒருத்தர்கூட 'அப்ளிகேஷன்' வாங்கலையாம்.ஆளுங்கட்சியின் சிட்டி, அப்புறம் ரூரலிலுள்ள வி.ஐ.பி.,கள் ரெண்டுபேர் பிரிச்சு, 'பார்' நடத்தறப்போ, கவர்மென்ட்டுக்கு வருமானம் எங்கேயிருந்து வருமுன்னு, அதிகாரிகள் புலம்பறாங்களாம்,''''ஆமா.. அது உண்மைதாண்டி.
'டாஸ்மாக்'கில், அரசியல்வாதிகள் கை ஓங்கியிருக்குதுன்னா, சமூக பாதுகாப்பு திட்டத்தில் அதிகாரிகள் கை ஓங்கிடுச்சாம்,'' என்று 'டாபிக்' மாற்றினாள் சித்ரா.''அதிகாரிங்க, வழக்கம்போல, ஏதாவது...''''யெஸ். சமூக பாதுகாப்பு திட்டத்தில், நோயாளி நல நிதியில், 30 லட்சம் ரூபாய்க்கு மோசடி நடந்துள்ளது. ஒரு பயனாளிக்கு, அதிகபட்சமா, 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுக்கிறாங்க. ஆனால், தலா, 10 லட்சம் ரூபாய் என, மூன்று பேருக்கு, 30 லட்சம் ரூபாய்க்கு, நோயாளி நல நிதிக்கான 'செக்' கொடுத்தாங்களாம்,''''அதுக்கப்புறம், சம்பந்தப்பட்ட பயனாளிகளிடம் போன அதிகாரிகள், 'செக்'கில் தவறுதலாக, தொகை போட்டுட்டோம்னு சொல்லி, 'செக்' திருப்பி வாங்கிட்டு, 'ஸ்வாஹா' செஞ்சிட்டாங்களாம்.
இதுக்கு, துணை தாசில்தார், இரண்டு அசிஸ்டன்ட் உடந்தையாக இருந்ததாக தகவல்,''''அது சரிங்க்கா... இதெப்படி அதிகாரிகளுக்கு தெரியாம போச்சு?''''இல்லடி. அதைப்பத்தி ரகசிய விசாரணை போயிட்டிருக்குது. இருந்தாலும், கலெக்டர் தலையிட்டதான், உண்மை வெளிவருமுங்கறது, மத்த அதிகாரிகளோட, 'ஓபன் டாக்,''''அடக்கொடுமையே... இந்த மாதிரியானவங்க மீது கடும் நடவடிக்கை எடுத்தா மட்டும்தான், மத்தவங்க சரியாவாங்க. நாட்டு நடப்பை பேசப்பேச டென்ஷன் பி.பி., தான் ஜாஸ்தி ஆகுது.
நாளையிலிருந்து யோகா 'ட்ரை' பண்ணலாம்னு இருக்கேன். மன அமைதியாச்சும் கிடைக்கும்,''''சரியா சொன்னடி. மறக்காம 'மேட்' எடுத்துட்டுப்போ. நீயும் நம்ம, 'ஜெ' பள்ளி ஸ்டூடண்ட்ஸ் போல, கடனுக்கு யோகா பண்ணிட்டு இருக்காதா' என்றாள்.''ஏன்... அவங்க அப்டி பண்றாங்க?''''யோகா செய்றதுக்குனு வழிமுறை இருக்கு. அதில் முக்கியமானது யோகா 'மேட்டில்' செய்யணும். ஆனால், அந்த பள்ளியில் ஸ்டூடண்ட்ைஸ, மணல் பரப்பில் உக்காரவைச்சு நடத்திட்டு இருக்காங்களாம்,''''டீச்சர்ஸ்க்கு கூட இது தெரியாதா?''''நீங்க வேற, அவங்களே 'ஓவர் ஒர்க் லோடு'ன்னு, புலம்பிட்டு இருக்காங்களாம்,''''ஏன்... என்னாச்சு?''''எமிஸ், பயோமெட்ரிக், கற்றல் விளைவுகள், வாசிப்புத்திறன், பாடத்திட்டம், பள்ளி கட்டமைப்பு என, ஏகப்பட்ட ரெக்கார்டு தயாரிப்பு வேலைகளை கொடுத்து, ஆசிரியர்களை பிழிந்தெடுக்கிறது கல்வித்துறை.
இதற்கு எதிர்ப்பு தெரிவிச்சு, ஆசிரியர் தரப்பில் மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் பரவுதாம்,''''இந்த விவரம் ஆபீசர் காதுக்கு போனதால், 'மீம்ஸ் கிரியேட்' செய்ய நேரம் இருக்கு. ரெக்கார்டு ஒர்க் பண்ண மட்டும் நேரம் இல்லையா,'னு கேள்வி கேட்பதாக ஒரு தகவல்,'' என்றாள் மித்ரா.''அக்கா, சிட்டி போலீஸ்காரங்க ரொம்ப பரபரப்பா வேலை செய்ய ஆரம்பிச்சுட்டாங்கன்னு சொல்றாங்க,'' என, போலீஸ் மேட்டருக்கு தாவினாள் மித்ரா.''அட... அதெல்லாம், தீபாவளிக்குத்தான்டி.
சிட்டியில், ஸ்டேஷன்களில் இருக்கும் 'குறு'மன்னர்கள், கட்சிக்காரர், 'பார்'காரர், லாட்டரி, கஞ்சா விற்பவர் என, சட்டவிரோத செயல் செய்பவர்களுக்கு 'லைன்' போட்டுட்டாங்களாம். ஒவ்வொருத்தரா, ஸ்டேஷனுக்கு வந்து 'கவனிச்சுட்டு போறதா கேள்வி. இதை, 'உளவு' போலீஸ்காரங்க சிலையாட்டம் இருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.''அடடே... அக்கா.. அதேமாதிரி, டிஸ்டிரிக்ட் கிரைம் போலீசாரும் 'கப்சிப்'ன்னு இருக்காங்களாம்,''''ஏன்... இந்த அதிகாரி வந்ததிலிருந்து பரவாயில்லைன்னு சொன்னாங்களே,''''இல்லக்கா.. யாரும் மாறவேயில்லை. லிங்கேஸ்வரர் ஊர், அப்புறம் '...மலை'யூரில், சமீபகாலமாக திருட்டு, வழிப்பறி, கொள்ளைன்னு, எக்கச்சக்கமான கிரைம் நடந்திருச்சு. அதில, வெளியில் தெரியுற சம்பவத்துக்கு எப்.ஐ.ஆர்., போடறாங்க.
இல்லாட்டி, புகாரை, ஸ்டேஷனிலே மூடி மறைச்சறாங்களாம்,''''இதனால், பல புகாருக்கு, எப்.ஐ.ஆர்., போடறது கிடையாது. கிரைம் 'டீம்' என்ன பண்ணுது தெரியலைன்னு, மத்த போலீஸ்காரங்களே கேள்வி கேட்கறாங்களாம்,''''இதில்லாம, '... மலை' சப்-டிவிஷனில், பல இடங்களில், தனிப்பிரிவு போலீஸ் ஆசியோடு 'சரக்கு' விற்பனை சக்கைப்போடு போடுதாம்,'' என்றாள் மித்ரா.அப்போது, மின் இணைப்பு வரவே, பட்டாசு கடை வளாகம் மின்னொளியில் ஜொலித்தது.அதைப்பார்த்ததும், ''தாரா....'விலுள்ள மின்வாரிய அலுவலகத்தில், இரண்டு புரோக்கர்களோட அட்டகாசம் நாளுக்குநாள் அதிகமாயிட்டே போகுதாம்.
உயரதிகாரியும் கண்டுக்க மாட்டேங்கிறாராம்,'' என, 'ஷாக்' அடிக்கும் மேட்டரை சொன்னாள் சித்ரா.''அப்ப.. அவருக்கு 'பங்கு' போயிடும்போல,'' என, சிரித்த மித்ரா, ''மழை நின்னுடுச்சு, புறப்படுங்க.... பட்டாசு வாங்கலாம்,''என்றதும் சித்ரா விறுவிறுவென நடக்க ஆரம்பித்தாள்.அப்போது, ராக்கெட் பட்டாசு ஒன்று, வானில், பல வண்ணங்களில் ஜாலம் காட்டியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X