ராஞ்சி: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ராஞ்சி டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ், 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக வென்றது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2-0 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றியது.

மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 497/9 ரன்கள் ('டிக்ளேர்'), தென் ஆப்ரிக்கா 162 ரன்கள் எடுத்தன. 'பாலோ ஆன்' பெற்று இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த தென் ஆப்ரிக்க அணி, மூன்றாவது நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்து, இன்னிங்ஸ், 203 ரன்கள் வித்தியாசத்தில் பின் தங்கியிருந்தது. டி புருய்ன் (30), நார்ட்ஜே 5 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.

சபாஷ் ஷாபாஸ்
இன்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. முதல் ஓவரை முகமது ஷமி வீசினார். இதில் உதிரியாக ஒரு ரன் கிடைத்தது. இரண்டாவது ஓவரில் ஷாபாஸ் நதீம் பந்தை சுழற்றினார். முதல் நான்கு பந்தில் தடுமாறிய புருய்ன் (30), 5வது பந்தில் விக்கெட் கீப்பர் சகாவிடம் 'பிடி' கொடுத்து வெளியேறினார். அடுத்து நார்ட்ஜேயுடன் இணைந்தார் லுங்கிடி.
வந்த வேகத்தில் முதல் பந்தை வேகமாக விளாசினார் லுங்கிடி (0). பந்து எதிர்முனையில் இருந்த நார்ட்ஜே கையில் பட்டு எகிறியது. இதை அருகில் இருந்த நதீம் 'கேட்ச்' செய்ய, தென் ஆப்ரிக்க அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இன்று போட்டி துவங்கிய 9 வது நிமிடத்தில் தென் ஆப்ரிக்க அணி கூடுதலாக ஒரு ரன் மட்டும் எடுத்து, 133 ரன்னுக்கு சுருண்டது.
இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று கோப்பை கைப்பற்றியது. இந்தியா சார்பில் முகமது ஷமி 3, உமேஷ் யாதவ், நதீம் தலா 2, அஷ்வின், ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி பங்கேற்ற முதல் தொடரில் விண்டீசை (2-0) வீழ்த்தி 120 புள்ளிகள் பெற்றது. தற்போது தென் ஆப்ரிக்காவையும் முழுமையாக வென்றதால் (3-0) கூடுதலாக 120 புள்ளிகள் கிடைத்தன. ஒட்டுமொத்தமாக 240 புள்ளிகள் பெற்று, டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 'நம்பர்-1' அணியாக நீடிக்கிறது.