புதுடில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ கைது செய்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு சுப்ரீம் கோர்ட், நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஆனாலும், அமலாக்கத்துறை சார்பிலும் கைது செய்யப்பட்டுள்ளதால் அவரால் சிறையிலிருந்து வெளியே வர முடியாது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் 21ல் கைது செய்தனர். சிதம்பரம் தற்போது டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதே வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையும் கைது செய்துள்ளது. இந்நிலையில், சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் உரிமையாளர் பீட்டர் முகர்ஜி உள்ளிட்டோர் மீது டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. சார்பில் சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

குற்றப்பத்திரிகை ஏற்பு
சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹார் முன் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு தங்களிடம் ஆதாரம் இருப்பதாக சி.பி.ஐ. தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சிதம்பரம் மீதான குற்றப்பத்திரிகை ஏற்கப்பட்டதாக நீதிபதி அறிவித்தார். மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி உள்ளிட்ட மற்றவர்கள் நவ.29ல் ஆஜராக 'சம்மன்' அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

நிபந்தனை ஜாமின்
இதற்கிடையே ஜாமின் கோரி சுப்ரீம் கோர்ட்டில் சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்ததை அடுத்து, நீதிபதி பானுமதி அமர்வு, இன்று (அக்.,22) தீர்ப்பளித்தது. அதில், சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
அமலாக்கத்துறை சார்பிலும் சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதால் ஜாமின் கிடைத்தும் வெளியே வர முடியாது. அமலாக்கத்துறையின் விசாரணை அக்., 24ல் முடிவடைகிறது. அதன்பின் குற்றப்பத்திரிகை மீதான விசாரணை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.