தன் சொந்த தொகுதியான வாரணாசியில், பா.ஜ., தொண்டர்கள், நிர்வாகிகளுடன் நேரில் உரையாடி, அவர்களுக்கு தீபாவளி விருந்து அளிக்க, பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார்.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கே, பா.ஜ., ஆட்சி அமைந்ததில் இருந்து, இங்குள்ள அயோத்தி நகரில், ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை, பிரமாண்டமாககொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில், பிரதமர் மோடி, தன் தொகுதியான வாரணாசியில், நாளை, பா.ஜ., நிர்வாகிகளுடன் தீபாவளியை கொண்டாட திட்டமிட்டுள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில், வாரணாசி தொகுதியில் இருந்து, 4.20 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில், இரண்டாவது முறை, எம்.பி.,யாக தேர்வாகியுள்ள பிரதமரால், தன் அலுவல்கள் காரணமாக, அங்கு அடிக்கடி செல்ல முடியவில்லை.இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு, 'நாளை, என் தொகுதியான வாரணாசியில், பா.ஜ., தொண்டர்கள், நிர்வாகிகளை சந்தித்து, உரையாட திட்டமிட்டுள்ளேன். எ-ன்னிடம் கேட்க, கேள்விகள் அல்லது தகவல்கள் இருப்பின், அவற்றை, 'நமோ ஆப்' மூலமாக தெரியப்படுத்தவும்' என மோடி, 'டுவிட்டரில்' குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு, 'தீப உற்சவம், மோடிஜியுடன் தொண்டர்கள் விருந்து' என, பெயரிடப்பட்டுள்ளது.நாளை மாலை, 4:30 மணியளவில், இந்த தீபாவளி விருந்து நிகழ்ச்சிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பிரதமர் வாரணாசி செல்லும் அதே நாளில் தான், மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் நாடு முழுவதும், 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்கள் ஆகியவற்றின் முடிவுகள் வெளியாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. - நமது டில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE