கோல்கட்டா, :மேற்கு வங்க மாநிலத்தின் உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு அனுப்பியும், அவர்கள், தன்னை சந்திக்க மறுப்பதாக, அம்மாநில கவர்னர் ஜக்தீப் தான்கார், பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
இந்த மாநில கவர்னரானஜக்தீப் தான்கார், சமீபத்தில், சில மாவட்டகலெக்டர்களுக்கு கடிதம் அனுப்பினார். அதில், 'விரைவில் உங்கள் மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளேன். இது குறித்து ஆலோசனை நடத்த, கவர்னர் மாளிகைக்கு வர வேண்டும்' என, அவர் எழுதியிருந்தார். ஆனால், சம்பந்தப்பட்ட கலெக்டர்களும், அதிகாரிகளும், கவர்னரை சந்திக்கவில்லை. அவர்கள் அனுப்பிய பதில் கடிதத்தில், 'முதல்வர் மம்தா பானர்ஜி, எங்கள் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்; அதற்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தி வருவதால், உங்களை சந்திக்க முடியவில்லை' என,தெரிவித்திருந்தனர். இது, கவர்னர் ஜக்தீபுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, அவர் கூறியதாவது:நான் கடிதம் அனுப்பி, நான்கு நாட்கள் கழித்து, கலெக்டர்கள் பதில் கடிதம் அனுப்பியுள்ளனர். அதிகாரிகளை, நான் சந்திக்க விருப்பம் தெரிவிக்கும்போதெல்லாம், அதற்கு தடை போடப்படுகிறது. மேற்கு வங்கத்தில் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, எதுவும் தணிக்கை துறை செயல்படுகிறதா என தெரியவில்லை.
கலெக்டர்களின் இது போன்ற நடவடிக்கைகள், அரசியல் சட்டத்துக்கு முரணானவை. இது, எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனாலும், என் சுற்றுப்பயணத்தை ரத்து செய்யப் போவது இல்லை. என் கடமையை தொடர்ந்து செய்வேன். இவ்வாறு, அவர் கூறினார். அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு, மேற்கு வங்க மாநில பா.ஜ., தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE