பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரம்: நிரம்பும் அணைகளால் ஆறுகளில் வெள்ளம்

Updated : அக் 23, 2019 | Added : அக் 23, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
தமிழகம் முழுவதும், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பல மாவட்டங்களிலும், கனமழை நீடிப்பதால், அணைகள் நிரம்பி வருகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், கரையோர மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.தமிழகத்தில், நடப்பாண்டு, வடகிழக்கு பருவமழை முன்னதாகவே துவங்கி, நன்றாக பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில், நேற்று
தமிழகம், பருவமழை, தீவிரம், அணை, ஆறு, வெள்ளம்

தமிழகம் முழுவதும், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பல மாவட்டங்களிலும், கனமழை நீடிப்பதால், அணைகள் நிரம்பி வருகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், கரையோர மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், நடப்பாண்டு, வடகிழக்கு பருவமழை முன்னதாகவே துவங்கி, நன்றாக பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவும் கனமழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில், 41 செ.மீ., மழை பதிவானது.மாவட்டத்தில் பெரிய அணையான அப்பர் பவானி, முழு கொள்ளளவை எட்டியதால், வினாடிக்கு, 250 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால், அத்திக்கடவு, பில்லுார் போன்ற பகுதிகளில், கரையோரம் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல, மாவட்டநிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மழையால், தோட்டங்களில் பயிரிட்டுள்ள காய்கறிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஊட்டி - மேட்டுப்பாளையம் இடையே, இன்று முதல், 25ம் தேதி வரை, மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.


கலெக்டர் ஆய்வுமழையில், 20 இடங்களில் ஏற்பட்ட மண் சரிவை, நெடுஞ்சாலை துறையினர் சீரமைத்தனர். கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, மண்சரிவு ஏற்பட்ட இடங்களையும், அவசர கால முகாம்களையும் நேற்று பார்வையிட்டார். கலெக்டர் கூறுகையில், ''மாவட்டத்தின் அனைத்து அபாய பகுதிகளிலும், 24 மணி நேர கண்காணிப்பு நடவடிக்கை தொடர்கிறது. இதற்கு, 42 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குந்தா, குன்னுார் பகுதிகளில், பேரிடர் பயிற்சி பெற்ற மீட்பு குழுவினர், தயார் நிலையில் உள்ளனர். தற்போது, மாவட்டத்தில், எவ்வித பாதிப்புகளும் இல்லை. சேதமான வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.

நீலகிரி மாவட்டத்தில், சமீபத்தில் நடத்தப்பட்ட புவியியல் துறையினரின் ஆய்வில், 283 பேரிடர் பகுதிகள் கண்டறியப்பட்டு, அதில், மிகவும் அபாயகரமான பகுதிகளாக, 70 இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன; பட்டியல், மாநில அரசுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.


கொடிவேரியில் தடைஈரோடு மாவட்டம், கோபி அருகே கொடிவேரி, சத்தி, அரசூர், மாக்கினாங்கோம்பை பகுதிகளில் பெய்த மழையால், கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ௧௯ முதல், ௨௧ம் தேதி வரை சுற்றுலா பயணியர் குளிக்க, தடை விதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, பவானிசாகர் அணை நிரம்பி, பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, 10 ஆயிரத்து, 700 கன அடி நீர் ஆற்றில் வெளியேறியது. இதனால், கொடிவேரி அருவியில் குளிக்க, நான்காவது நாளாக, நேற்றும் தடை நீட்டிக்கப்பட்டது.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பவானி ஆற்றங்கரையோர மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, தண்டோரா மூலம், கோபி வருவாய் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.


சேலத்தில் போக்குவரத்து பாதிப்புசேலம் மாவட்டத்திலும், பரவலாக மழை கொட்டி வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில், சேலத்தில் பல இடங்களை, மழை நீர் சூழ்ந்தது. ஏற்காடு மலைப் பகுதிகளில், பல இடங்களில் திடீர் அருவிகள் உருவாகின. இதனால், ஏற்காடு மலையடிவாரத்தில் அமைந்துள்ள புது ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது.ஏற்காடு மலையிலிருந்து வடியும் மழைநீர், கோரிமேடு, ஏ.டி.சி., நகர் பகுதியில் உள்ள கால்வாயில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்வதால், கோரிமேடு பகுதியில் இருந்து பெரிய புதுார் செல்லும் வழி துண்டிக்கப்பட்டுள்ளது. விடிய விடிய பெய்த கன மழையால், திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஆற்றில் மழைநீரை விட அதிகமான கழிவுகள் கலந்துள்ளதால், தண்ணீர் கறுப்பாக பாய்ந்தோடுகிறது. வெள்ள நீரில் அடித்து வரப்பட்ட ஆகாயத்தாமரை செடிகள், பிளாஸ்டிக் கழிவுகள், பாலங்களில் தேங்கியுள்ளன.உத்தமசோழபுரம் ஆத்துக்காடு பாலத்தை தண்ணீர் மூழ்கடித்து, நுரை பொங்கி வழிந்தோடுகிறது. இதனால், பாலத்தை கடக்க முடியாமல், மக்கள் அவதிப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம், மின்னக்கல் செல்லும் சாலையில், திருமணிமுத்தாற்று தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் ஓடுவதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார் அடுத்த மதியம்பட்டி ஏரி, தரைப்பாலம் வழியாக ஓடும் திருமணிமுத்தாறில், நுரையுடன் மூன்றடிக்கு வெள்ளம் சென்றதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், எட்டுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். மதியத்திற்கு மேல் தண்ணீர் குறைந்ததும், இருசக்கர வாகனங்கள் மட்டும் இயக்கப்பட்டன.சேலம் மாவட்டத்தில், நேற்று காலை, 6:45 மணி வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டேயிருந்தது. இதனால், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, நேற்று விடுமுறை விடப்பட்டது.


குமரியில் நீடிப்புகன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் மழையால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கூடல் அணை, அதன் முழு கொள்ளளவான, 25 அடியை எட்டியது. இதனால், உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையும், முழு கொள்ளளவை எட்டி வருகிறது. 77 அடி கொண்ட இந்த அணை நீர்மட்டம், நேற்று காலை, 72 அடியை கடந்தது.மழையால், 60 வீடுகள் இடிந்தன. திற்பரப்பு அருவியில் குளிக்க, நேற்றும் தடை விதிக்கப்பட்டது. 500 ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்கள், தண்ணீரில் மூழ்கின.


சீறிப்பாயும் தண்ணீர்ஈரோடு பவானிசாகர் அணையின் மதகுகள் வழியாக, ஆர்ப்பரித்து செல்கிறது.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை, 105 அடி உயரம் கொண்டது. 32.8 டி.எம்.சி., நீர் தேக்க முடியும். நீர்மட்டம், 102 அடியை எட்டியதை அடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி, நேற்று முன்தினம் இரவு முதல், அணைக்கு வரும் நீர் முழுவதும், பவானி ஆற்றில் திறக்கப்பட்டது.மாலை நிலவரப்படி, 13 ஆயிரம் கன அடி நீர், ஒன்பது கண் மேல் மதகு மற்றும் ஆற்று மதகு வழியாக, திறக்கப்பட்டு, பவானி ஆற்றில் சீறிப்பாய்ந்து செல்கிறது.


வீராணம் நீர்மட்டம் உயர்வுகடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள வீராணம் ஏரி, செப்., 5ல் நிரம்பியது. பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு மற்றும் சென்னைக்கு குடிநீர் அனுப்பியதால், ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக குறைந்தது.மொத்த கொள்ளளவான, 1,465 மில்லியன் கன அடி, 1,250 மில்லியன் கன அடியாக குறைந்தது. இந்நிலையில், மூன்று நாட்களாக, காட்டுமன்னார்கோவில் மற்றும் வீராணம்ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக, ஏரிக்கு தண்ணீர் வர துவங்கியது.மேலும், கீழணையில் இருந்து, வடவாறு வழியாக, 400 கன அடி தண்ணீர், வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. தற்போது, ஏரியின் நீர்மட்டம், 1,380 மில்லியன் கன அடியாக உள்ளது. மழை எச்சரிக்கை இருப்பதால், ஏரியில் இருந்து, 1,065 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


மேட்டூர் அணை நிரம்பும்?நடப்பாண்டில் மூன்றாவது முறையாக, மேட்டூர் அணை நாளை நிரம்ப வாய்ப்புள்ளது.சேலம் மாவட்டம், மேட்டூர் அணை மொத்த உயரம், 120 அடி; கொள்ளளவு, 93.47 டி.எம்.சி.,காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தீவிரம் அடைந்த மழையால், மேட்டூர் அணைக்கு, நேற்றுவினாடிக்கு, 16 ஆயிரத்து, 239 கன அடி நீர் வந்துகொண்டிருந்தது. திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்கிறது. மேலும், பவானிசாகர் அணையில் இருந்து, வினாடிக்கு, 13 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரி நீர், பவானி ஆறு வழியாக, காவிரியில் வெளியேற்றப்படுகிறது. இதனால், மேட்டூர் அணை டெல்டா நீர் திறப்பு, நேற்று முன்தினம் இரவு முதல், வினாடிக்கு, 500 கன அடியாக குறைக்கப்பட்டது.நீர்வரத்தை விட, திறப்பு வெகுவாக குறைந்ததால், நேற்று முன்தினம், 117.80 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று, 118.60 அடியாக உயர்ந்தது. நீர்இருப்பு, 91.25 டி.எம்.சி.,யாக இருந்தது.அணை நிரம்ப, இன்னமும், 2.5 டி.எம்.சி., நீர் தேவை. தற்போதைய நிலவரப்படி, நீர் இருப்பு, நாள் ஒன்றுக்கு, 1.25 டி.எம்.சி., அதிகரிக்கிறது. நீர்வரத்தில், இதே நிலை நீடித்தால், நடப்பாண்டில் மூன்றாவது முறையாக, மேட்டூர் அணை, இன்று நிரம்ப வாய்ப்புள்ளது. நடப்பாண்டில், கடந்த மாதம், 7 மற்றும், 23ல் மேட்டூர் அணை நிரம்பியது.


பாம்பனில் 18 செ.மீ., மழைராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால், ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முன், 2 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியது. சில மணி நேரத்திற்கு பின், கடலில் கலந்தது. மேலும், தங்கச்சிமடம் விக்டோரியா நகரில் மழை வெள்ளத்தால், மக்கள் சாலையில் செல்ல முடியாமல் முடங்கினர். பாம்பனில், 18 செ.மீ., மழை பதிவானது.பாம்பன் சின்னபாலம் மீனவர் கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட மீனவர்களின் குடிசை வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், பொருட்கள் மிதந்தன. இதனால், மீனவர்கள் அவதிப்பட்டனர். கலெக்டர் வீரராகவராவ் பார்வையிட்டு, மழை நீரை வெளியேற்ற உத்தரவிட்டார். மீனவர்கள் குடும்பத்தினரை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, உணவு அளித்தனர்.


வெறிச்சோடிய கொடைக்கானல்வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், 'மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், இரண்டு நாட்கள் கனமழை கொட்டித் தீர்க்கும்' என வானிலை மையம், 'ரெட் அலெர்ட்' விடுத்திருந்தது.இதையடுத்து, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதியில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், வருவாய்த் துறை இறங்கியது.பாதுகாப்பு கருதி, வனச்சுற்றுலா தலங்கள் மற்றும் பேரிஜம் ஏரி பகுதியை, இரண்டு நாட்கள் மூடுவதாக, வனத் துறையினர் அறிவித்தனர். இதனால், பிரதான ஏரி, பிரையன்ட் பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ்வாக் உட்பட நகர் முழுவதும், சுற்றுலா பயணியர் இன்றி வெறிச்சோடியது.

நேற்று காலை முதலே சூறைக்காற்று வீசிய நிலையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியத்திற்கு பின் லேசான சாரல் மற்றும் வெயில் தலை காட்டியது. கொடைக்கானல் அருகே உள்ளது பெருமாள்மலை. இங்கிருந்து, தேனி, பெரியகுளத்திற்கு, 38 கி.மீ.,க்கு நெடுஞ்சாலைத் துறையினர், சாலை அமைத்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில், இந்த சாலையில் இரு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இடிபாடுகளை அகற்றி, இலகு ரக வாகனங்கள் செல்லுமளவிற்கு நெடுஞ்சாலைத் துறை சீரமைத்தது. இரண்டாவது நாளாக, பாறைகளை துளையிடுவது, இடிபாடுகளை அகற்றும் பணி நேற்றும் தொடர்ந்தது.

-நமது நிருபர்-

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RR Iyengar - Bangalore,இந்தியா
23-அக்-201908:10:04 IST Report Abuse
RR Iyengar முதலில் பாதாளசாக்கடை திட்டத்தை ஒழித்து அந்தந்த பகுதிகளிலேயே வெளியேறும் நீரை ஆழ்குழாய் கிணறுகள் மூலம் பூமிக்கடியில் செல்லும்படி அமைக்கவேண்டும் ... மேலும் தெருவுக்கு ஓன்று என்று இயலாவிட்டாலும் மழை நீர் அதிகம் தேங்குமிடத்தில் கிணறுகள் அல்லது ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து அந்த நீரை அப்படியே பூமிக்குள் அனுப்பினால் எந்த காலத்திலும் நீர் பற்றாக்குறை வராது ... மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட அரசாங்கத்தால் இதை செய்ய முடியும் ... (சென்னையில் தமிழகத்தை ஆண்ட ஆண்டுகொண்டிருக்கும் நபர்கள் அதிகமாக வசிக்கிறார்கள் அவர்களின் சொந்த தேவைக்காகவாவது இதை செயல்படுத்தலாம்)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X