லாகூர் : பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத், சிறைக்குள் தனி ராஜாங்கம் நடத்தி வருவதாகவும், முக்கிய வழக்குகளில், 'கட்ட பஞ்சாயத்து' நடத்தி, நிழல் நீதிமன்றமாக செயல்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

'ஜமாத்-உத் தாவா' என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீத். 'லஷ்கர் - இ-தோய்பா' என்ற பயங்கரவாத அமைப்பின், மறுவடிவம் தான் ஜமாத் - உத் தாவா. சர்வதேச பயங்கரவாதியாக, அமெரிக்கா மற்றும் ஐ.நா.,வால் அறிவிக்கப்பட்ட ஹபீஸ் சயீத், 2008ல் மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன். இந்த தாக்குதலில், 166 பேர் கொல்லப்பட்டனர். இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கையில், தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், நீண்ட காலமாக பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து வருகிறது.
பாகிஸ்தானில், ஜமாத்-உத் தாவா அமைப்புக்கு, 300 மத பாடசாலைகள், மருத்துவமனைகள், அச்சகங்கள், ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் உள்ளன. பயங்கரவாத செயல்களுக்கு, நிதியுதவி அளித்து வந்ததால், சர்வதேச நிர்பந்தத்துக்கு அடிபணிந்து, ஹபீஸ் சயீதை, பாக்., அரசு சமீபத்தில் கைது செய்தது. ஜமாத் - உத் தாவா அமைப்பும் தடை செய்யப்பட்டது.
சிறையில் ராஜமரியாதை
லாகூரில் உள்ள கோட் லாக்பட் சிறையில், ஜூலை 17 முதல் அடைக்கப்பட்டுள்ள ஹபீஸ் சயீத்துக்கு, ராஜ மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. சிறைக்குள் போலீசும், நீதிமன்றமும் எல்லாமே ஹபீஸ் சயீத் தான். சிறைக்குள் இருந்து கொண்டே, முக்கிய வழக்குகளுக்கு, 'கட்ட பஞ்சாயத்து' நடத்தி வருவது, தற்போது அம்பலமாகியுள்ளது. சமீபத்தில், சலாஹுதின் அயுபி என்ற நபர், போலீஸ் கஸ்டடியில் இறந்தார்.

ஏ.டி.எம்., மையத்தில் திருடிய குற்றத்துக்காக கைதான அந்த நபர், சற்று மனநலம்பாதிக்கப்பட்டவர். அவரை போலீசார், அடித்தே கொன்றுவிட்டனர். இதையடுத்து, நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. கொல்லப்பட்ட கைதியின் குடும்பத்தினருடன் ஹபீஸ் சயீத் பேச்சு நடத்தி பிரச்னையை முடித்து வைக்க, இம்ரான் கான் அரசே ஏற்பாடு செய்தது.
ரூ. 80 கோடி தீர்வு
சலாஹுதின் உறவினர்கள் சிறைக்குள் வந்து, ஹபீஸ் சயீதை சந்தித்தனர். அப்போது, ஹபீஸ் சயீத், 'குற்றம் சாட்டப்பட்ட போலீசாரிடம் இருந்து ரத்தக்கறை படிந்த பணம் வேண்டுமா, கடவுள் பெயரால் குற்றவாளிகளை மன்னித்து விடலாமா, அல்லது சட்டப்பூர்வமாக வழக்கு தொடரலாமா என மூன்று தீர்வுகளை முன்வைத்தான். சலாஹுதின் குடும்பத்தினர், கடவுள் பெயரால், போலீசாரை மன்னிக்க முன்வந்து, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

இதையடுத்து, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் இரு போலீசாருக்கு உள்ளூர் நீதிமன்றம் இடைக்கால ஜாமின் அளித்தது. பிரச்னையை முடித்து வைத்ததற்கு பிராயசித்தமாக, சலாஹுதின் சொந்த கிராமம் கோராலியில், ஒரு பள்ளிக்கூடம், சாலை வசதி, காஸ் இணைப்பு வசதி உட்பட மொத்தம், 80 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்ட உதவிகளை செய்து தர வேண்டும் எனவும், ஹபீஸ் சயீத் அரசுக்கு உத்தரவிட்டுள்ளான்.
சயீத் நடத்திய மத்தியஸ்த நடவடிக்கையை தொடர்ந்து, பஞ்சாப் மாகாண கர்வர்னர் சவுத்ரி சர்வார், அந்த கிராமத்துக்கு சென்று, அனைத்து வசதிகளையும் உடனே செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார். ஹபீஸ் சயீதை பொறுத்தவரை, சிறையில் இருந்தாலும், வெளியே இருந்தாலும், அதிகாரமும், மரியாதையும் கொண்ட ராஜ வாழ்க்கை தான்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE