சென்னை: தமிழகத்தில் தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணி வரையும், மாலை 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் அக்., 27ல் கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே பட்டாசு தான் என்று இருக்கும் நிலையில், இதனால் ஏற்படும் காற்று மற்றும் ஒலி மாசுபாடு அடைவதாக சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். மாசைக் கட்டுப்படுத்த சுப்ரீம் கோர்ட் கடந்த 2017 ல், பல்வேறு வழிகாட்டல்கள், கட்டுபாடுகளை விதித்தது. அதன்படி, பட்டாசு வெடிக்க சில நேரங்களில் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.

இதன்படி இந்த ஆண்டும், தமிழக அரசு சார்பில் பட்டாசு வெடிக்க நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கை: தமிழகத்தில் மாசில்லா தீபாவளியை கொண்டாட ஏதுவாக, தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணி வரையும், மாலை 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதியளிக்கப்படுகிறது. அதிக ஒலி ஏற்படுத்தக்கூடிய வெடிகளை தவிர்க்கலாம். மருத்துவமனை, பள்ளி, நீதிமன்றம், புனித தலங்கள், குடிசை பகுதிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களில் வெடிக்க கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளியை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தீபாவளிக்கு மறுதினமும் (அக்.,28) அரசு விடுமுறையாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. ஆனால், தீபாவளியன்று வெறும் 2 மணி நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதால், கொண்டாட்டத்தில் மட்டுமல்ல, பட்டாசு விற்பனையிலும் பாதிப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE