புதுடில்லி: விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் வகையில், கோதுமை, பருப்பு வகைகளுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை உயர்த்தி, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டில்லியில் நேற்று நடந்தது.
விலை உயர்த்தப்படும்
இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறிய தாவது:அக்., - மார்ச் வரையிலான, ரபி பயிர் காலத்துக்கான, பல்வேறு பயிர்களுக்கான அடிப்படை ஆதார விலையை உயர்த்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.விவசாயிகளின் வருவாயை உயர்த்தும் வகையில், கொள்முதல் விலையை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, கோதுமைக்கான அடிப்படை ஆதார விலை, 1 குவிண்டாலுக்கு, 85 ரூபாய் உயர்த்தப் பட்டு, 1,925 ரூபாய் வழங்கப்படும். பார்லிக்கான விலை, குவிண்டாலுக்கு, 85 ரூபாய் உயர்த்தப் பட்டு, 1,525 ரூபாய் வழங்கப்படும்.பருப்பு வகைகள் பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில், அவற்றுக்கான ஆதார விலையும் உயர்த்தப்படுகிறது.
துவரம் பருப்பின் விலை, குவிண்டாலுக்கு, 325 ரூபாய் உயர்த்தப்பட்டு, 4,800 ரூபாய் வழங்கப் படும். கடலைப் பருப்பின் விலை, குவிண்டாலுக்கு, 255 ரூபாய் உயர்த்தப்பட்டு, 4,875 ரூபாய் வழங்கப்படும்.எண்ணெய் வித்துகளில், கடுகு விதைகளுக்கான ஆதார விலை, குவிண்டாலுக்கு, 225 ரூபாய் உயர்த்தப்பட்டு, 4,425 ரூபாயும்; சூரியகாந்தி விதைகளுக்கு, குவிண்டாலுக்கு, 270 ரூபாய் உயர்த்தி, 5,215 ரூபாயும் வழங்கப்படும்.
இணைப்பு
நஷ்டத்தில் இயங்கும், தொலைத் தொடர்பு நிறுவனங்களான, பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., இணைக்கப்படும். இந்த நிறுவனங்களை மீட்கும் வகையில், 29 ஆயிரத்து, 937 கோடி ரூபாய் திரட்டப்படும்.'பாண்டு'கள் மூலம், 15 ஆயிரம் கோடி ரூபாயும், சொத்துகள் விற்பனை மூலம், அடுத்த நான்கு ஆண்டுகளில், 38 ஆயிரம் கோடி ரூபாயும் திரட்டப் படும்.
செலவுகளை குறைக்கும் வகையில், ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் செயல்படுத்தப் படும்.போட்டியை உருவாக்கும் வகையில், பெட்ரோல் பங்க் அமைக்கும் உரிமையை, எண்ணெய் துறையில் இல்லாத நிறுவனங்களுக்கும் வழங்க, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுஉள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் கீழ், நாடு முழுவதும், 65 ஆயிரம் பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. சில தனியார் நிறுவனங்களும் இந்த துறையில் ஈடுபட்டுள்ளன.பெட்ரோலியப் பொருட்கள் சில்லறை விற்பனையில் ஈடுபட, ஹைட்ரோகார்பன் திட்டம் அல்லது திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு திட்டத்தில், 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.இந்த நிபந்தனையை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.மொத்த விற்பனை, 250 கோடி ரூபாய் உள்ள நிறுவனங்கள், பெட்ரோல் பங்க் அமைக்க அனுமதி தரப்படும். ஆனால், அதில், 5 சதவீதத்தை கிராமப் பகுதிகளில் அமைக்க வேண்டும்.
டில்லி காலனிகள்
தேசிய தலைநகர் டில்லியில் உள்ள, அங்கீகாரமற்ற குடியிருப்பு காலனிகளில் வசிக்கும், 40 லட்சம் பேருக்கு பயன் கிடைக்கும் வகையில், அவர்களுக்கு வீட்டின் உரிமை வழங்க, அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அந்தப் பகுதிகளுக்கு, குடிநீர், கழிவுநீர் இணைப்பு உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும்.
டில்லி சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுவதால், இந்த திட்டம் கொண்டு வரப்பட வில்லை. மத்திய அரசு நியமித்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதைத் தவிர பல்வேறு துறைகளில், பல நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்வதற்கும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.