Marieke ends her life in Belgium | கருணையுடன் விடைபெற்றார் மரியகே! உலக ரசிகர்கள் சோகம்| Dinamalar

'கருணையுடன்' விடைபெற்றார் மரியகே! உலக ரசிகர்கள் சோகம்

Updated : அக் 24, 2019 | Added : அக் 24, 2019 | கருத்துகள் (14)

புருஸ்செல்ஸ்: பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற, மாற்றுத்திறனாளியான பெல்ஜியம் வீராங்கனை மரியகே, அவரது விருப்பப்படி கருணை கொலை செய்யப்பட்டார்.






பெல்ஜியத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீராங்கனை மரியகே வெர்வூர்ட். தனது 14வது வயதில் 'டிஜெனரேட்டிவ்' தசை நோயால் பாதிக்கப்பட்டார். முதுகுத்தண்டு சம்பந்தமான இந்த நோய், நாட்கள் செல்ல செல்ல மூளைப்பகுதிக்கும், தசைகளுக்கும் இடையிலான தொடர்பை துண்டிக்கும். ஒரு கட்டத்தில், பக்கவாதம் ஏற்படும். இப்படிப்பட்ட ஆபத்தான நோயில், சிக்கியபோதும் மரியகே மனம் தளராமல் போராடினார்.


கடைசி போட்டி:


வீல்சேரில் அமர்ந்து கொண்டு கூடைப்பந்து, நீச்சல், தடகளத்தில் சாதித்தார். கடந்த 2012ல் லண்டனில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் வீல் சேர் (டி 52 பிரிவு) 100 மீ., பிரிவில் தங்கம் வென்றார். 200 மீ., ஓட்டத்தில் வெள்ளி கைப்பற்றினார். உலக சாம்பியன்ஷிப்பில் மூன்று தங்கம் வென்றுள்ளார். 2016ல் நடந்த ரியோ ஒலிம்பிக்கில் (2016), 400 மீ., பிரிவில் வெள்ளி, 100 மீ., பிரிவில் வெண்கலம் கைப்பற்றினார். இதன்பின், பார்வை குறைபாடு ஏற்பட, இதுவே கடைசி போட்டி என அறிவித்தார்.






வலியுடன் வாழ்க்கை:


ஒவ்வொரு நாளும் வலியோடு போராடிய இவர், 2008ம் ஆண்டில் கருணைக்கொலைக்கான சட்டப்பூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பெல்ஜியத்தில் கருணைக்கொலைக்கு அனுமதி இருப்பதால், வலியுடனான வாழ்க்கைக்கு விடை தர எண்ணினார். பெல்ஜியத்தில் உள்ள டயஸ்ட் நகரில் ஒப்பந்தபடி, நேற்றுமுன் தினம் கருணை கொலை செய்யப்பட்டார். நோயுடன் போராடிய வாழ்க்கைக்கு 40வது வயதில் விடை கொடுத்தார்.


நாய் மீது பாசம்:


ஜென் என்ற பெயரிடப்பட்ட லேபரடார் வகை நாயை வளர்த்தார் மரியகே. இதன் மீது எல்லையில்லா அன்பு வைத்திருந்தார். நோய் தாக்கத்தில் இருந்த சமயத்தில், மரியகேயின் 'சாக்சை' எடுத்து வருவது என பல வழிகளில் உதவி உள்ளது. மருத்துவமனைக்கும் அழைத்து வருவார். இது குறித்து மரியகே கூறியது: மைதானத்தில் எதை நான் கீழே தவறவிட்டாலும், ஜென் எடுத்து தரும். சுயநினைவை இழந்தால், குரைப்பதன் மூலம் 'நர்சை' அழைக்கும். சகஜநிலை வரும் வரை, எனது முகத்தை நாக்கால் வருடிவிடும். ஜென் இல்லாத வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இவ்வாறு மரியகே தெரிவித்திருந்தார்.




Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X