சண்டிகர் : ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுகள் முழுவதும் வெளியாவதற்கு முன்பே முதல்வர் பதவி யாருக்கு என்ற பிரச்னை காங்., கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் இடையே சண்டை எழுந்துள்ளது. இது காங்.,க்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா சட்டசபைக்கு அக்.,21 அன்று தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 68.31 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி இருந்தன. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள், இன்று (அக்.,24) காலை 8 மணிக்கு துவங்கி எண்ணப்பட்டு வருகிறது. ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதலே பா.ஜ., தான் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.
இருப்பினும் பா.ஜ., - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஜெ.ஜெ.பி கட்சியும் 6 இடங்களில் வலுவான நிலையில் உள்ளதால் அது பா.ஜ., மற்றும் காங்.,க்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. ஹரியானாவில் பா.ஜ., தான் ஆட்சி அமைக்கும் என சில கருத்துக்கணிப்புக்களும், தொங்கு சட்டசபை அமையும் என சில கருத்துக்கணிப்புக்களும் கூறி உள்ளதால் முடிவுகள் எப்படி அமையும் என்பதை கணிக்க முடியாமல் அரசியல் கட்சிகள் குழப்பத்தில் உள்ளன.

இதுவரை வெளியான முன்னிலை சுற்று நிலவரங்களிலும் காங்., முன்னிலை பெறவில்லை. ஆனால் அதற்குள்ளாக தனக்கு முதல்வர் பதவி தர வேண்டும் என ஜெ.ஜெ.பி., கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா காங்.,கிடம் பேரம் பேசி வருகிறார். முதல்வர் பதவிக்கான போட்டியில் ஏற்கனவே தற்போதைய முதல்வர் மனோகர் லால் கட்டார். முன்னாள் காங்., முதல்வர் பூபேந்திர சிங் ஹூடா உள்ளிட்டோர் உள்ளனர். இதனால் ஜெ.ஜெ.பி., ஆதரவுடன், ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டால் முதல்வர் பதவியை யாருக்கு தருவது என்ற பிரச்னையில் காங்., சிக்கி உள்ளது.