தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கார்த்தி நடித்த, கைதி படம் இன்று வெளியாகிறது. இப்படம் குறித்த பல விஷயங்களை, நம்முடன் பகிர்ந்து கொண்டார் கார்த்தி. அவரிடம் பேசியதில் இருந்து:
தீபாவளி நாளில் உங்கள் படம் வெளியாவது குறித்து?
தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் படம் பார்ப்பது, ஒரு ஞாபகார்த்தமாக மாறிவிடும். இது, அடுத்த தீபாவளி வரை பேசப்படும். இந்த நாளில், படம் ரிலீசுக்கு தேதி கிடைப்பதே ரொம்ப பெரிய விஷயம்.
இப்படத்தில் நாயகியே இல்லை என்கிறார்களே?
இப்படி கேட்பதே, படத்திற்கு விளம்பரம் போலாகி விட்டது. நான்கு மணி நேர கதையில், நடிகைக்கான பாத்திரமோ, காதல், காமெடி போன்ற விஷயங்களோ தேவைப்படவில்லை. குழந்தை மட்டும் தான் இருக்கிறது. ஆனால், ஜனரஞ்சகமாக, ரசிக்கும்படி உருவாக்கியுள்ளோம். அதே வேளையில், இப்படத்தை விருதுக்காக எடுக்கவில்லை.
கைதி என்ன கதை?
ஹாலிவுட்டில் வெளியான, ஸ்பீடு, டைஹார்ட் படம் மாதிரி இருக்கும். ஆக் ஷனை மையமாக கொண்ட படம் தான் கைதி. ஒரே இரவில், உச்சப்பட்ச சூழ்நிலைக்கு தள்ளப்படும் பாத்திரங்களும், அவர்களின் பின்னணியும் தான் கதை.அனைத்து பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும். ஆக் ஷன் படத்தில், இந்த மாதிரி உணர்ச்சிகரமான விஷயங்கள் இருப்பதை தான், நான் முக்கியமாக பார்க்கிறேன்.
சிறுத்தை படத்திற்கு பின், மீண்டும் ஒரு தந்தையாக நடித்தது பற்றி?
குழந்தை பிறந்ததில் இருந்தே, அதை பார்த்திராத நிலையில், கைதி பாத்திரம் இருக்கும். அந்த பாத்திரத்தின் வலி, ரொம்ப பெரியது. இது தான் படத்தின் பலமும்.
இரவிலேயே ஆக் ஷன் காட்சிகளை படமாக்கியது எப்படி இருந்தது?
நடித்தது கஷ்டம்னு சொல்ல மாட்டேன்; ஆனால் ஈஸி இல்லை. ரொம்ப ரிஸ்க்காகவே இருந்தது. அதிகாலை, 3:00 மணிக்கு, உடல் தளர்ந்து போயிடும். ஆனால், அப்போது தான் ஹெவி ஆக் ஷன் சீன் இருக்கும். ஆக் ஷன் காட்சிகளின் படப்பிடிப்பின் போது, பாதுகாப்பு விஷயங்களில் நிறைய அக்கறை எடுத்துக் கொண்டோம். ஆம்புலன்ஸ் தயாராகவே இருக்கும். டெக்னாலஜி வளர்ந்ததும், உதவியாக இருந்தது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பற்றி?
சினிமா மீது பயங்கர காதல் கொண்டவர்; சினிமா மேல் பைத்தியமாக இருக்கிறார். எதையும், புதிதாக செய்ய வேண்டும் என, நினைக்கிறார்.
தீபாவளி பண்டிகை குறித்து?
தீபாவளி இப்ப ரொம்ப மாறிடுச்சு. முன்பெல்லாம் பட்டாசு வெடிப்பதே, அவ்வளவு கொண்டாட்டமாக இருக்கும். இப்ப, சுற்றுச்சூழல் அக்கறை வந்திருக்கு. இப்பல்லாம் எல்லாரும் ஒன்றாக இருக்கிறதே ஸ்பெஷலா இருக்கிறது. இந்த தீபாவளிக்கு, நாங்கள் அனைவரும் ஒன்றாக இருப்போம்.
தொடர்ந்து ஒரே தயாரிப்பாளரின் படங்களில் நடிப்பது குறித்து?
நாம எப்படி தேடி, தேடி படம் பண்றோமோ, அந்த மாதிரியே அவர்களும் இருக்கின்றனர். இருவரின் ரசனையும் ஒத்து போகிறது. இது தான் விஷயம்.
உங்களின் அடுத்த படம்?
ஜித்து ஜோசப்பின் படம். அண்ணி, சத்யராஜ் எல்லாம் நடித்துள்ளனர். கோவையில் நடக்கிற கதை. சுல்தான் படம், கிட்டதட்ட முடிந்து விட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE