சண்டிகர்: ஹரியானாவில் பா.ஜ.,- ஜே.ஜே.பி., கூட்டணி முடிவானது. இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியை அமைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பா.ஜ., தலைவர் அமித்ஷா இன்று இரவு நிருபர்களிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அமித்ஷா கூறுகையில்: துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளோம். இதனை கவர்னரிடம் நாளை தெரிவிப்போம். மேலும் ஜே.ஜே.பி., கட்சிக்கு துணை முதல்வர் பொறுப்பை வழங்குவோம் என்றும் கூறினார்.

நடந்து முடிந்த ஹரியானா சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 90 இடங்களில் தனிப்பெரும் கட்சியாக பா.ஜ., 40 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. காங்கிரஸ் கட்சி 31 இடங்களிலும் சுயேட்சை 6 இடங்களிலும், ஜனநாயக ஜனதாகட்சி 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான இடங்களை காட்டிலும் அனைத்து கட்சிகளும் குறைவான இடங்களை பெற்றிருப்பதால் தொங்கு சட்டசபை அமையும் நிலை ஏற்பட்டது.
தேர்தல் முடிவுக்கு பின்னர் டில்லியில் பா.ஜ., தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி மீண்டும் மனோகர்லால் கட்டார் முதல்வராக தொடர்வார் என கூறினார். இதனையடுத்து சுயேட்சை எம்.எல்.ஏக்கள் 6 பேரும் பா.ஜ., ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இந்திய ஜனநாயக கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா சந்தித்து பேசினார். பேச்சுவார்த்தையில் துஷ்யந்த்சவுதாலாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது எனவும் , அமைச்சர் பதவி தருவது உள்ளூர் வேலைவாய்ப்பில் 75 அளவிற்கு சவுதாலா கட்சி சொல்லும் பிரிவினருக்கு ஒதுக்கீடு அளிப்பது என்பன உட்பட கோரிக்கைகள் இரு தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
10 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்
ஹரியானா சட்டசபை தேர்தலில் 10 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்திருக்கிறார் துஷ்யந்த் சவுதாலா.முன்னாள் துணை பிரதமர் தேவிலால் கொள்ளு பேரன் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரன் முன்னாள் எம்.பி. அஜய்சவுதாலாவின் மகன் என்ற அரசியல் பரம்பரையில் வந்தவர். தந்தை தாத்தா இருவரும் ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றுவிட துஷ்யந்த் அரசியலில் குதித்தார்.
1988 ஏப். 3ல் ஹரியானாவின் ஹிசாரில் பிறந்தார். பி.எஸ்சி. மற்றும் சட்டப்படிப்பு முடித்துள்ளார். கடந்த 2014 லோக்சபா தேர்தலில் இந்திய தேசிய லோக் தளம் (ஐ.என்.எல்.டி.) சார்பில் ஹிசார் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு வயது 26. லோக்சபா வரலாற்றில் குறைந்த வயதில் எம்.பி. ஆனவர் என்ற பெருமை பெற்றார்.
ஐ.என்.எல்.டி. கட்சியில் இருந்து வெளியேறி 2018 டிச. 9ல் ஜனாயக் ஜனநாயக கட்சி (ஜே.ஜே.பி.) தொடங்கினார். கட்சி துவக்க விழாவில் 6 லட்சம் தொண்டர்கள் திரண்டனர். இது ஹரியானா வரலாற்றில் அரசியல் நிகழ்ச்சியில் அதிகம் பேர் பங்கேற்ற கூட்டம் என்ற சாதனை படைத்தது. தற்போது ஹரியானாவின் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக வளர்ந்துள்ளார். இவர் இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவராக இருந்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE