உடலை கவனமாக பாதுகாக்கலாமே!
மவுனமான மரணம் வர, குறிப்பாக, ரத்த அழுத்தமே காரணமாக இருக்கிறது. ரத்த அழுத்தத்தால் எப்படி மரணம் வரும் என்ற கேள்வி எழலாம். ரத்த அழுத்தத்தை உடனடியாக கவனித்து, மருந்து உட்கொள்ளா விட்டால், ரத்தக் குழாய்களை, தமனி இறுக்க நோய் தாக்கி, ரத்த நாளம் சுருங்கி, அடைப்பு ஏற்படும். இதனால், ரத்தம் கிடைக்காமல், இதய தசைகள் நலிவடைந்து, 'பம்பிங்' வேலை தடைபட்டு, இதயமும், மூச்சும் நின்று மரணம் வருகிறது. இது, உடனடியாக ஏற்படுவதில்லை; பல மாதங்கள், ஆண்டுகள் ஏற்படும். ரத்த நாள இறுக்க நோயால் இது வருகிறது.இந்த மாற்றங்கள், அமைதியாக உடலில் ஏற்பட்டு வருகிறது. சாதாரண மருத்துவ பரிசோதனைகள், 'இ.சி.ஜி., எக்கோ' எனப்படும் இதய ஒலி வரைபடம் போன்ற பரிசோதனைகளை செய்யும் போது, அவற்றை அறியலாம். அதை பார்த்தவுடன் மருத்துவர், 'உங்களுக்கு மவுனமாக மாரடைப்பு வந்துள்ளது' என்று கூறுவார்.
ஆனால், அதை நோயாளிகள், நம்புவதில்லை. இதை, மேலும் உறுதி செய்ய, டி.எம்.டி., என்ற நடைப்பயிற்சி, இ.சி.ஜி, பரிசோதனை மற்றும் ரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்பு பரிசோதனைகளில் அறியலாம்.மேற்கண்ட பரிசோதனைகளை ஆதாரமாகக் கொண்டு, நோயாளிகளிடம், 'உங்களுக்கு மவுனமாக மாரடைப்பு வந்துள்ளது' என்று கூறினால் நம்புவதில்லை. இதய நோய் நிபுணர் கூறுவதைக் கேட்காமல், சாதாரண மருத்துவரிடம் சென்று, சரியா எனக் கேட்டு, அவர் கூறுவதைக் கேட்டுக் கொள்வர். மேலும், வயிற்றில் வாயு, பித்தம், நேற்று சாப்பிட்ட சாப்பாடு தான் காரணம் என, அவர்களே முடிவு செய்து, அதற்கான மருந்துகளை வாங்கி சாப்பிடுவர். பின், ஒரு நாள், திடீர் என மரணம் ஏற்பட்டு விடும். இத்தகைய திடீர் மரணமடைந்தவர்களை நிறைய பார்க்கிறேன். ஸ்கேன்டிநேவியா நாடுகள், பின்லாந்து, ஸ்வீடன், ஐஸ்லாந்து போன்ற நாடுகளில், ஆயிரக்கணக்கான நோயாளிகளை ஆய்வு செய்ததில், இந்த, எஸ்.ஐ.எம்., என்ற, மவுனமான மரணத்தை பற்றி, சில முடிவுகளை வெளியிட்டு உள்ளனர்.
அதற்காக, 65-- 90 வயது வரை உள்ள, 1,000 பேரிடம், 10 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வில், 'கார்டியாக் எம்.ஆர்.ஐ.,' என்ற பரிசோதனை கருவி உபயோகிக்கப்பட்டது. அதன்படி, ஐந்து ஆண்டுகளில், 18 சதவீத பேர், மவுனமான மரணத்தை சந்தித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், 40 சதவீதம் பெண்கள். அதில், மாரடைப்பு வந்து இறந்தவர்கள் எண்ணிக்கையும் சரி சமமாக இருந்தது. இந்த ஆய்வு முடிவுகள் உலகம் முழுவதும் ஏற்கப்பட்டன.இரண்டாவது ஆய்வு, 'ஜாமா' என்ற மருத்துவ இதழில் பதிவு செய்யப்பட்ட முடிவுகள். வட பின்லாந்து நாட்டில் ஆய்வு மேற்கொண்ட, மரணமடைந்த, 5,600 பேரில், 1,700 பேர் மவுனமான மரணம் அடைந்தது, பிரேத பரிசோதனை செய்ததில் கண்டுபிடிக்கப்பட்டது.இரண்டாவது செய்தி, நன்றாக வேலை செய்த பலர், திடீரென மரணமடைந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில், இதய வீக்கம் அடைந்தவர்கள் பலர் ஆவர். இந்த வீக்கம் எதனால் ஏற்பட்டது எனில், முன்பாகவே மவுனமாக மாரடைப்பு ஏற்பட்டு, இதய தசைகள் செயலிழந்து, மெலிந்து இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்களில், பெரும்பாலானோர் தங்களுக்கு இருந்த இதய தசைகள் செயலிழப்பை அறியாமல் வாழ்ந்தவர்கள். இந்த ஆய்வு நடத்தியவர்கள், பின்லாந்து நாட்டில், 'ஒலு' பல்கலைக்கழகத்திலும், 'மியாமி மில்லர் 'மருத்துவ பள்ளியிலும் நன்கு படித்த பேராசிரியர்களின் முடிவுகளை, இன்று, மருத்துவ உலகம் ஏற்றுள்ளது.மவுனமான மாரடைப்பு, எப்போதும் மவுனமான முறையில் வருவதில்லை. ஏதாவது ஒரு அறிகுறிகள் தென்படும். நெஞ்சில் அழுத்தம், வயிறு உப்புசம், வியர்வை, குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் இருக்கும். இவற்றிற்கு வேறு காரணங்களை சொல்லி உதாசீனப்படுத்தி, சாதாரணமாக விட்டு விடுவர்; மருத்துவரையும் பார்க்காமல் இருப்பர்.பேராசிரியர் ராபர்ட் போனெகீஸ் என்பவர், தன் ஆய்வில், பெரும்பாலான பெண்கள், தனக்கு ஏற்படும் சிறு தொல்லைகளை, அறியாமையால் வேறு காரணங்களை காட்டி, இருந்து விடுவதாக கூறுகிறார்.திடீர் மரணத்தை தவிர்க்க...இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன், ரத்தக் கொதிப்பு, இதய நோய் மாத்திரைகளை உட்கொண்டால், 66 சதவீதம் குறைக்கலாம். மேலும், 'ஸ்டிரோக்' 44 சதவீதம் குறையும். 'பை - பாஸ் கிராப்ட், ஸ்டென்ட் அடைப்பு, 40 சதவீதம் வராமல் தடுக்கலாம். இது, ஸ்பெயின் நாட்டின், 'வீகோ' பல்கலைக்கழக ஆய்வின் முடிவு. கடந்த ஐரோப்பிய இதய நோய்க் கழக மாநாட்டில், இந்த ஆய்வு ஏற்கப்பட்டது. தொடர்புக்கு: 9840160433, 9884353288 ,சு.அர்த்தநாரிபேராசிரியர், மருத்துவர்இதய நோய் ஊடுருவல் நிபுணர்டாக்டர் எஸ்.ஏ., ஹார்ட் கிளினிக்ராயப்பேட்டை, சென்னை - 14
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE