முகநுாலில் சர்ச்சை பதிவு | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

முகநுாலில் சர்ச்சை பதிவு

Added : அக் 26, 2019 | கருத்துகள் (1)

சென்னை:மத நல்லிணக்கத்துக்கு எதிராக, முகநுாலில் பதிவை வெளியிட்டவருக்கு, சென்னை உயர் நீதிமன்றம், வித்தியாசமான நிபந்தனை விதித்து, முன்ஜாமின் வழங்கியது.

நாகை மாவட்டம், மணல்மேடு பகுதியை சேர்ந்த செல்வகுமார், முகநுாலில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், 'மத மாற்றத்துக்கு எதிராக பேசிய ராமலிங்கம் கொலை செய்யப்பட்டார். 'அதை கண்டித்து நடந்த போராட்டத்துக்கு எதிராகவும், கொலைக்கு ஆதரவாகவும் செயல்படும், துணிக்கடையை புறக்கணிப்போம். ஹிந்துக்களே விழித்து கொள்வோம்' என, கூறப்பட்டு உள்ளது.இந்த பதிவுக்காக, செல்வகுமாருக்கு எதிராக, மணல்மேடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவர், முன்ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார். மனுவில், 'இந்தப் பதிவை நான் தயார் செய்யவில்லை; முகநுாலில் வந்த பதிவு அது. போலீஸ் எச்சரித்த உடன், அதை நீக்கி விட்டேன்' என, கூறியுள்ளார்.
மனுவை, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்தார். போலீஸ் தரப்பில், அரசு வழக்கறிஞர் சண்முக ராஜேஸ்வரன் ஆஜராகி, முன்ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், நிபந்தனை விதித்து, முன்ஜாமின் வழங்கினார்.மத நல்லிணக்கத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டதால், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நடத்தும் அறக்கட்டளைக்கு, 25 ஆயிரம் ரூபாய்; மயிலாடுதுறையில் உள்ள கிறிஸ்துவ ஆதரவற்றோர் அமைப்புக்கு, 25 ஆயிரம் ரூபாய் செலுத்தும்படி, நீதிபதி நிபந்தனை விதித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X