திருச்சி: ''தமிழகம் முழுவதும், பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை கணக்கெடுத்து, அவற்றை மூடும் பணி மேற்கொள்ளப்படும்,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.
திருச்சி, நடுக்காட்டுப்பட்டியில் அவர் கூறியதாவது: சிறுவனை மீட்கும் பணி, தொய்வின்றி நடக்கிறது. கடுமையான பாறை பகுதியாக இருப்பதால், துளையிடுவதில் சிரமம் உள்ளது. ஏற்கனவே பயன்படுத்திய இயந்திரத்துக்கு பதிலாக, ஒரு மணி நேரத்தில், 10 அடி வரை அதிவேகமாக துளையிடும் இயந்திரம் வரவழைத்து, பணி நடந்தது. இதன்மூலம், குழந்தையை நல்லபடியாக மீட்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

குழந்தை, 88 அடி ஆழத்தில் இருப்பதாக தெரிகிறது. தற்போது, 40 அடி ஆழம் தோண்டப்பட்டுள்ளது. பாறையாக இருப்பதால், துளையிடுவதில் தாமதம் ஏற்படுகிறது. 90 அடி வரை துளையிட்டு, அங்கிருந்து பக்கவாட்டில் துளையிட்டு, குழந்தையை மீட்க திட்டமிடப்பட்டுஉள்ளது.அதிகபட்சம், குழந்தையை உயிருடன் மீட்பதற்கான முயற்சியை, அரசு முடுக்கி விட்டுள்ளது. தனியார் நிலங்களில் அமைக்கப்படும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லாவிட்டால், அரசின் கவனத்துக்கு கொண்டு வந்து, மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறு, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற, மீட்பு பணிகளுக்கான தொழில்நுட்ப கருவிகளை கண்டுபிடிக்க, குழுவை ஏற்படுத்தி, ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில், பயன்படாத ஆழ்துளை கிணறுகள் கணக்கெடுக்கப்பட்டு, முழுமையாக மூடப்படும். முதல்வர், அனைத்து அமைச்சர்களையும் சம்பவ இடத்துக்கு அனுப்பி, பணியை தீவிரப்படுத்தியுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
ஜெர்மன் கருவி
வருவாய்த் துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:குழந்தையை மீட்க, முழு தொழில்நுட்பத்தை யும் பயன்படுத்தி வருகிறோம். பல்வேறு துறைகளும் தொடர்ந்து பணிகளை செய்து வருகின்றன. சிறிய ஓட்டைக்குள் விழுந்த குழந்தையை மீட்பது, சவாலாக உள்ளது. ஜெர்மன் கருவி மூலம், மீட்பு பணி செய்து வருகிறோம். முதல்வர் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பணிகளை கேட்டறிந்து வருகிறார்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE