வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ஆழ்துளை கிணற்றில் விழுந்து, மணப்பாறையை சேர்ந்த சிறுவன் சுஜித் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்ட இரங்கல் அறிக்கை: திருச்சி மாவட்டம், மணப்பாறை, நடுக்காட்டுபட்டியில், ஆழ்துளை கிணற்றில், இரண்டு வயது சிறுவன் சுஜித் தவறி விழுந்துவிட்டான் என்ற செய்தி மிகுந்த வேதனை அளித்தது. இந்த செய்தி அறிந்தவுடன், சிறுவனை உயிருடன் மீட்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு, அமைச்சர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் திருச்சி கலெக்டருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தேன். இதன்பேரில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இரவு பகலாக மீட்பு பணிகளை மேற்கொண்டனர். சிறுவனை உயிருடன் மீட்பதற்காக, அதிநவீன இயந்திரங்களை கொண்டு சிறுவன் சிக்கி கொண்ட ஆழ்துளை கிணற்றின் அருகே புதிதாக ஒரு பெரிய ஆழ்துளை கிணறு தோண்டும் போது, கடினமான பாறைகள் இருந்ததால், மீட்புப் பணிகளில் பல்வேறு, சிரமங்கள் ஏற்பட்டன. அச்சிரமங்களை எல்லாம் வல்லுநர் குழு உதவியுடன் சரி செய்து குழந்தையை உயிருடன் மீட்க இரவு பகலாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தும் சிறுவன் சுஜித் வில்சன் சடலமாக மீட்கப்பட்டான் என்ற செய்தி எனக்கு மிகுந்த வேதனை அளித்தது. ஏற்கனவே ஆழ்துளை கிணறு அமைக்கும் போது, கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விதிகளை வகுத்து, அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். இதில் கவனக்குறைவு ஏதும் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அரசு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இனி வருங்காலங்களில் இது போன்ற துயர சம்பவங்கள் நிகழாமல் இருக்க பொது மக்களும் தங்களுடைய நிலங்களில் ஆழ்துளை கிணற்றை மூடும் போது உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன். மீட்பு பணிகளை இரவு பகலாக மேற்கொண்ட அமைச்சர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் இந்த தருணத்தில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் சுஜித் வில்சன் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
காங்., எம்.பி.,ராகுல்: குழந்தை சுஜித் உயிரிழந்த செய்தி வருத்தத்தை அளிக்கிறது. அவரது பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்
I'm sorry to hear about the passing of baby Sujith. My condolences to his grieving parents and his family.
#RIPSujith
— Rahul Gandhi (@RahulGandhi) October 29, 2019
திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை: நான்கு நாட்களாக நாட்டையே ஏக்கத்தில் தவிக்கவிட்ட சுஜித் நமக்கு நிரந்தரச் சோகத்தைக் கொடுத்து போய்விட்டான். சுஜித் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது?அவனது இழப்பு தனிப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பல்ல. நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு. சுஜித் நம் நினைவில் என்றும் நீங்க மாட்டான்!

ஆழ்துளைக் கிணற்றுக்குள் இதுவரை எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கிறது. இனியொரு உயிர் பலியாகிவிடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி! இவ்வாறு அந்த பதிவில் ஸ்டாலின் கூறியுள்ளார்.
பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் அறிக்கை

குழந்தை சுர்ஜித்தை உயிருடன் மீட்க வேண்டும் என்பதற்காக உள்ளூர் மக்கள் முதல் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரை அனைவரும் கடுமையாக போராடினார்கள். பல்வேறு தரப்பும் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தது பெரும் சோகம் தான்.இயற்கையும் சதி செய்தது. இயற்கையை வெல்ல முடியாதது வேதனையளிக்கிறது.
— Dr S RAMADOSS (@drramadoss) October 29, 2019
சுர்ஜித்தை உயிருடன் மீட்க தமிழக அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மேற்கொண்ட முயற்சிகளை குறை கூற முடியாது. ஆனாலும் சிறுவனைக் காப்பாற்ற முடியாதது சோகமே. இனியும் இப்படி ஒரு சோகம் நிகழாத அளவுக்கு இத்தகைய சூழல்களை சமாளிக்க புதிய தொழில்நுட்பங்களும்,கருவிகளும் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.
— Dr S RAMADOSS (@drramadoss) October 29, 2019
அமைச்சர் வேலுமணி வெளியிட்ட அறிக்கை: ஈடு செய்ய இயலாத குழந்தை சுஜித் இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். இரவு பகல் பாராமல் மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் கூறியுள்ளார்.
பாஜ தேசிய பொதுச்செயலாளர் எச்.ராஜா வெளியிட்ட டுவிட்டர் பதிவு:
சிறுவன் சுஜித்தை காப்பாற்ற அரசு தீவிர முயற்சி மேற் கொண்டும் காப்பாற்ற இயலாதது வருத்தமளிக்கிறது. சுஜித்தின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
— H Raja (@HRajaBJP) October 29, 2019
தெலுங்கானா கவர்னர் தமிழிசை: கடுமையான போராட்டங்கள் நடத்தியும் குழந்தை சுஜித்தை மீட்க முடியாதது மன வேதனை அளிக்கிறது எனக்கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்க முடியாதது வருத்தம் அளிக்கிறது எனக்கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE