மதுரை: தமிழகத்திலேயே முதன்முறையாக, மதுரையில், சமையல் எண்ணெய் சில்லரை விற்பனைக்கு தடை விதித்து, உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.
மதுரையில், பாரம்பரிய முறைப்படி, சமையல் எண்ணெய் தயாரித்து விற்கும் நிறுவனங்கள், சில்லரை வியாபாரிகள் அதிகம்.'ரீபைன்டு' எண்ணெய் குறித்த சர்ச்சையால், தற்போது, செக்கு எண்ணெய் வகை விற்பனை அதிகரித்துள்ளது.பாத்திரங்களில் எண்ணெய் வைத்து, வாடிக்கையாளர்களுக்கு அளந்து விற்கப்படுகிறது. உணவு பாதுகாப்பு விதிகள்படி, 'லேபிள்' ஒட்டிய கேன், பாக்கெட்களில் மட்டுமே, எண்ணெய் விற்க வேண்டும்.

இந்நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக, மதுரையில், எண்ணெய் சில்லரை விற்பனைக்கு, உணவு பாதுகாப்பு துறை தடை விதித்துள்ளது. இனி நகரில், பாக்கெட், கேன்களை தவிர, மற்ற வகையில் எண்ணெய் விற்க முடியாது.
மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சோமசுந்தரம் கூறியதாவது: உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் - 2011ன் படி, சில்லரை விலையில், எண்ணெய் விற்பது தடை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தை, மதுரையில் முழுவீச்சில் அமல்படுத்த உள்ளோம். சில்லரை விற்பனையில், சில கடைகளில் கலப்படம் செய்வது தெரிந்துள்ளது. ஆனால், அதை அடையாளம் காண்பது கடினம். எனவே, தடை செய்கிறோம்.

சில்லரை விற்பனையில் கலப்படம் இன்றி விற்போர், பாதிக்கப்பட மாட்டார்கள். விதிகளை பின்பற்றி, பாக்கெட், கேன்களுக்கு, அவர்கள் மாற வேண்டும். அதில், 'லேபிள்' இருக்க வேண்டும். சில்லரை விலையில், தினமும், மதுரை நகரில், 2 லட்சம் லி., எண்ணெய் விற்பனையாகிறது. அடுத்தகட்டமாக, பாக்கெட் எண்ணெய் கலப்படம் குறித்து, ஆய்வு செய்ய உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE