கேரள மாநிலம், அட்டப்பாடி, மஞ்சகண்டி வனத்தில், கடந்த, 29ல், கேரள போலீசார் நடத்திய, 'என்கவுன்டரில்' மாவோயிஸ்ட் இயக்க தலைவன் மணிவாசகம் மற்றும் கார்த்தி, ஸ்ரீமதி, சுரேஷ் ஆகியோர் சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்நடவடிக்கை கேரளாவில் விவாதத்தை கிளப்பியுள்ளது.'பழங்குடியின கிராமத்திலிருந்து, 1.5 கி.மீ., தொலைவில் தங்கியிருந்த மணிவாசகம், உடல் நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் இருந்ததாகவும், பழங்குடியின பெண் தலைவர் சிவானி மூலமாக, சரணடைய போலீசாரிடம் பேச்சு நடத்தி வந்ததாகவும், இந்நிலையில் அவர் போலி என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும்' குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.

மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்ட இடத்தை பார்வையிட்ட கேரள காங்., எம்.பி. ஸ்ரீகண்டன், 'மாவோயிஸ்ட்கள் துப்பாக்கியை பயன்படுத்தியிருக்கவில்லை' என, தெரிவித்துள்ளார். இதற்கிடையே, துப்பாக்கி சூடு குறித்து இரண்டு வாரத்துக்குள் அறிக்கை தர, போலீசாருக்கு, கேரள மாநில மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டுள்ளது.காங்., கண்டனம்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவன் மணிவாசகத்தின் தங்கை லட்சுமி, கேரள அதிகாரிகளிடம் அளித்துள்ள மனுவில், 'தனது அண்ணனின் பிரேத பரிசோதனையை, திருச்சூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நடத்த வேண்டும்' என, கூறியுள்ளார். மாவோயிஸ்ட் கார்த்திக் உறவினர்களும் புதுக்கோட்டையிலிருந்து பாலக்காடு வந்துள்ளனர்.
அவர்கள் கூறுகையில், 'உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்கப்போவதில்லை. 'உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சரணடைய முன் வந்து, போலீசாருடன் பேச்சு நடத்திய மணிவாசகத்தை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர்' என்றனர். இதேபோன்று, கேரளா எதிர்கட்சி காங்., தலைவர் ரமேஷ் சென்னிதலா, இ.கம்யூ., கட்சியின் மாநில நிர்வாகி கானம்ராஜேந்திரன் உள்ளிட்டோரும், போலீசாருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தானியங்கி துப்பாக்கிகிடைத்தது எப்படி?
அட்டப்பாடி அருகே சுட்டு கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்கள் பயன்படுத்திய லேப்டாப், பென் டிரைவ், மொபைல்போன், சார்ஜர், மெமரி கார்டுகள், உணவு பொருட்கள், துப்பாக்கிகள், புத்தகங்களை பறிமுதல் செய்துள்ள போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த மாவோயிஸ்ட்களிடம், அதிநவீன தானியங்கி துப்பாக்கி எப்படி வந்தது என்றும் விசாரணை நடக்கிறது.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE