டிவி தொடர்களுக்கு தணிக்கை அவசியம்| Dinamalar

'டிவி' தொடர்களுக்கு தணிக்கை அவசியம்

Added : நவ 03, 2019 | கருத்துகள் (2)
Share
வரவேற்பு அறையில், சுவற்றை மறைக்கும் அளவுக்கு, தொலைக்காட்சி பெட்டி. ஞாயிற்றுக் கிழமை மட்டும் தான், அதில் நான் சினிமா பார்ப்பேன். படத்தில் ஒன்றிய லயிப்புடன், என் அருகில் மனைவி, மருமகள், கல்லுாரியில் படிக்கும் மகள்...தணிக்கை செய்யப்பட்ட படம் தான். திடீரென, படுக்கையறை காட்சி வந்து விட்டது. எனக்குள் ஒரு விதிர்விதிர்ப்பு. வயதுக்கு வந்த மகளை, 'டிவி பார்க்காதே; உள்ளே போ' என,
 'டிவி' தொடர்களுக்கு தணிக்கை அவசியம்

வரவேற்பு அறையில், சுவற்றை மறைக்கும் அளவுக்கு, தொலைக்காட்சி பெட்டி. ஞாயிற்றுக் கிழமை மட்டும் தான், அதில் நான் சினிமா பார்ப்பேன். படத்தில் ஒன்றிய லயிப்புடன், என் அருகில் மனைவி, மருமகள், கல்லுாரியில் படிக்கும் மகள்...தணிக்கை செய்யப்பட்ட படம் தான்.

திடீரென, படுக்கையறை காட்சி வந்து விட்டது. எனக்குள் ஒரு விதிர்விதிர்ப்பு. வயதுக்கு வந்த மகளை, 'டிவி பார்க்காதே; உள்ளே போ' என, எப்படிச் சொல்வது என, தவித்தேன். அடுத்த வினாடியில், 'தண்ணீர் குடித்து வருகிறேன்' என கூறி, நானே எழுந்து சென்று, அந்த காட்சியை பார்ப்பதை தவிர்த்தேன்.அது போல, அங்கிருந்த பிறரும், அந்த காட்சியில் கண்களை பொருத்துவதை தவிர்த்து, வேறு வேலைகளில் ஈடுபட்டனர்.

இது போன்ற கூச்ச நிலை, திரைப்பட அரங்குகளில் நேர்வது இல்லை. காரணம், மகள், தன் சினேகிதிகளுடன் தான் செல்வாள்; நாங்கள் கூடப் போவதில்லை; கூச்சத்தை சந்திப்பதும் இல்லை.தணிக்கை செய்யப்பட்ட திரைப்படத்தை பார்ப்பதற்கே, இந்தப் பாடு என்றால், தணிக்கை செய்யப்படாத, 'டிவி' சீரியல்களை, எப்படி நம்பி பார்ப்பது?

தியேட்டர்களில், சினிமா படங்கள் ஆரம்பிக்கும் முன், சி.பி.எப்.சி., என்று ஒரு சான்றிதழை காட்டுவர். 'யு, யு/ஏ, ஏ மற்றும் எஸ்' போன்ற ஆங்கில எழுத்துகளால் ஆன குறியீடுகள், ஒவ்வொரு சான்றிதழ்களிலும் காட்டப்படும்.'யு' சான்றிதழ் என்றால், 'யுனிவர்சல்' என்ற ஆங்கில வார்த்தையின் ஓரெழுத்து குறியீடாக, அனைத்து தரப்பினரும் அந்தப் படத்தைப் பார்க்கலாம் என்பதை, புரிந்து கொள்ள முடியும். 'யு/ஏ' என்றால், 12வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், தங்கள் பெற்றோர் வழிகாட்டுதல் படி தான், அந்தப் படத்தைப் பார்க்கலாம் என்பது கட்டுப்பாடு!

'ஏ' என்றால், 'அடல்ட்ஸ் ஒன்லி' எனப்படும், வயதுக்கு வந்தவர்கள் மட்டுமே பார்க்கலாம். 'எஸ்' என்றால், 'ஸ்பெஷல்' என்ற பொருள்படி, மருத்துவம், கல்வியாளர்கள் போன்ற, குறிப்பிட்ட துறையினர் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படுவர்.இதுபோல, சில குறியீடுகள், சில விதிகள், சினிமா தணிக்கை துறையால் கடைபிடிக்கப்படுகின்றன. தணிக்கையின் போது, காட்சிகள், வசனங்கள், பாடல்கள், நடிகர்களின் அசைவுகள் என, எல்லாவற்றையும், தணிக்கைக் குழுவினர் ஊன்றிக் கவனிப்பர்.

ஏதாவது அபத்தக் காட்சிகள், சமுதாயத்திற்கு ஊறு உண்டாக்கும் அர்த்தங்கள் இருந்தால், அந்தப் படத்தின் இயக்குனரிடம் விளக்கம் கேட்டு, தேவை என்றால் வைப்பர்; இல்லையேல், அந்த காட்சிகளை, தணிக்கையாளர்கள் வெட்டி, நீக்கி விடுவர்.கலை, பொழுதுபோக்கு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள், தணிக்கை குழுவில் இடம் பெற்றிருப்பர். சினிமா தணிக்கைத் துறை, 79 ஆண்டுகளில், 793 படங்களை, வெளியிடக் கூடாது என, தடை செய்துள்ளது. இதனால், அந்தப் படத்தை தயாரித்தோருக்கு, நஷ்டம் ஏற்படத் தான் செய்யும்.

அது, சுதந்திர போராட்ட காலம். விடுதலை வேள்வி, நாடு முழுவதும் சுடர் விட்டு பரவியிருந்தது. மேடை நாடகம், தெருக்கூத்து, பாட்டுக் கச்சேரிகள் போன்றவற்றின் மூலம், சுதந்திரத் தீயை, போராட்ட களத்திலிருந்த தலைவர்கள் ஏற்றி வைத்த நேரம் அது.நான் நடித்த, 'பூமாலை' என்ற நாடகம், திருச்சி, தேவர் அரங்கத்தில், 1965ல் அரங்கம் கண்டது. அந்த நாடகத்தில் நாயகனாக நடித்தவர், பின்னாளில், எம்.ஜி.ஆர்., அமைச்சரவையில், சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த, திருச்சி சவுந்தரராஜன்.அந்த நாடகத்தின் காட்சி அமைப்பு, முழு வசனங்கள், பாடல்களுடன் கூடிய மூலப் பிரதிகள், ஒப்புதலுக்காக, திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டன.

எழுத்துப் பூர்வமாக அனுமதி பெற்ற பின் தான், அந்த நாடகத்தின் ஒத்திகையே துவங்கியது.இத்தனைக்கும் அந்த நாடகம், சில ஆயிரம் ரசிகர்களை சென்றடையக் கூடியது தான். ஆனால், பல கோடி பேரை சென்றடையும், 'டிவி சீரியல்களுக்கு' தணிக்கையும் கிடையாது; தரச் சான்றும் கிடையாது என்றால் நியாயமா?

சமுதாயத்தின் தீங்குகளாக கருதப்படும் பல அம்சங்களை, சீரியல்கள் காண்பிக்கின்றன. காட்சிகளில் விவாதிக்கப்படும் அம்சங்கள், காது கொடுத்து கேட்க முடியாத, வக்கிரங்களாகவும், கண்ணால் காண முடியாத வன்முறை அம்சங்களாகவும் உள்ளன.'நாட்டில் நடப்பதைத் தானே காட்டுகிறோம்; புதிதாக எதுவும் நாங்கள் காண்பிக்கவில்லையே...' என, சீரீயல் தயாரிப்பாளர்கள் கூறக் கூடும். நாட்டில் நடக்கும் நல்லனவற்றையும் காட்டியிருக்கலாமே... இல்வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகளை வழங்கியிருக்கலாமே என்றால், எதிர் தரப்பினரிடம் பதிலில்லை.ஆனால், 100க்கு,99 சதவீத சீரியல்கள், சமுதாயத்திற்கு தேவையில்லாத அம்சங்களைத் தான் விவாதிக்கின்றன. குரூர கற்பனை வளம் தான், அவற்றில் மிஞ்சி நிற்கிறது; அவற்றை பார்க்கும், சாதாரண மன நிலையில் இருப்போருக்கு, பீதி அல்லவா ஏற்படுகிறது!

'டிவி' சீரியல்களுக்கு, எந்த நாட்டிலும் தணிக்கை இல்லை. எனவே, வேறு எங்கும் இல்லாததை, நாம் ஏன் இங்கே, அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கேள்வியும் எழலாம். நல்லதை முதலில், நாம் செய்வது நல்லது தானே!எனவே, சினிமா படங்களுக்கு இருப்பது போல, 'டிவி' சீரியல்களுக்கும் தணிக்கை முறையை அமல்படுத்த வேண்டும். இன்னும் சொல்லப் போனால், சினிமா ரசிகர்களை விட, 'டிவி' தொடர்களுக்கு, ரசிகர்கள் அதிகரித்து விட்டனர். எனவே, இது தான், தணிக்கைக்கான சரியான நேரம். தமிழில் தயாராகும் தொடர்களுக்கு மட்டுமின்றி, நாடு முழுவதும், பல மொழிகளில் வெளிவரும் தொடர்களுக்கும், தணிக்கை தேவை.

கடந்த, 1952ம் ஆண்டிலேயே, குறும்படங்கள், முன்னோட்டப் படங்கள், ஆவணப்படங்கள் போன்றவை, சி.பி.எப்.சி., சான்றிதழுக்கு உட்படுத்தப்பட்டன. எனவே, இப்போது, சீரியல்களுக்கு தணிக்கை முறை அமல்படுத்துவது சாத்தியம் தான்.பெண்மை என்றாலே மென்மை என்று தான் அர்த்தம். அது மாதிரி மென்மைக்குணம், பொறுமை, விவேகம், துணிவுள்ள பெண் கதாபாத்திரங்களை, சீரியல் கதாசிரியர்கள் படைக்கலாம். அதை தவிர்த்து, பெண்களை மிக மோசமாக, அரக்கிகள் போல காட்டுகின்றனரே!

சீரியல்களுக்கு தணிக்கை என்பது, குறை சொல்ல மட்டுமல்ல; நிறைகளை பாராட்டவும் தான். பாராட்ட பாராட்ட, மேலும் மேலும் நிறைவாக, பாத்திரப் படைப்புகள் கூடும்; மனித மனங்களில் அது பதியம் ஆகும்!'சினிமாவிலாவது அருவருப்பு காட்சிகள் வரும்; சின்னத்திரையில் அவ்வாறு வராதே...' என, சிலர் சொல்லக் கூடும். அதற்குத் தான், தணிக்கை முறையில், 'யு, ஏ' போன்ற சான்றிதழ்கள் உள்ளன!ஆபாசத்தை காட்டிலும், பொறாமை பிடித்த பெண்களை அதிகம் காட்டுவது, இளம் பெண்களின் மத்தியில், 'இப்படி இருந்தால் தான் ஜெயிக்க முடியுமோ...' என்ற எண்ணத்தை துாண்டி விடுகிறது. அதைத் தவிர்க்கலாமே!

'பொறாமை மனிதர்களிடம் இல்லையா; அதைத் தானே சீரியல்களில் காட்டுகிறோம்' என்றும் கேட்கலாம். இருக்கத் தான் செய்கிறது; சின்னத்திரை கதாபாத்திரங்கள் அளவுக்கு இல்லை. ஆட்சேபகரமான காட்சிகளை குறைத்துக் காட்டினால், உயிரோட்டமான காட்சிகளை அமைக்க முடியுமா என்ற கேள்வி எழலாம்.சமுதாய சிந்தனை உள்ள, சின்னத்திரை தொடர்கள் பெருக, தணிக்கை என்ற ஆயுதம் உதவலாம்.

நகைச்சுவை நடிகர் நாகேஷ், ஒரு திரைப்படத்தில், திக்குவாய் நபரை கேலி செய்வது போல நடித்திருப்பார். அந்தப் படத்தை தணிக்கை செய்த அதிகாரி, அந்த படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் நாகேஷை அழைத்து, 'இது போன்ற காட்சிகளால், ஊனமுற்றோர் மனம் வேதனைப் படுமே. அந்த காட்சிகளை நீக்கி விட்டோம்' என்றாராம்.தவறை உணர்ந்த நாகேஷ், 'இனிமேல் யார் மனம் புண்படும் படியும், நடிக்க மாட்டேன்' என, உறுதி எடுத்து, அதன்படி கடைசி வரை, ஊனமுற்றோரை கிண்டல் செய்யும் காட்சிகளில் நடிக்கவில்லை.

அந்த தணிக்கை அதிகாரி நினைத்திருந்தால், அந்த காட்சிகளை வெட்டிப் போட்டிருக்கலாம். எதற்காக, இயக்குனரை அழைத்து பேசினார்... நல்லவை வளர வேண்டும் என்பதற்காகத் தானே! அது போலத் தான், இந்த கட்டுரையின் நோக்கமும். நல்லவை வளர வேண்டும்; அனைவரும் நல்ல மனநிலையுடன் வாழ வேண்டும் என்பதற்காகத் தான்; 'டிவி' சீரியல்களுக்கு தணிக்கை வேண்டும் என்கிறோம்.தயாரித்த பின் தான், சினிமா, தணிக்கைக்கு போகிறது. அந்த கால நாடகங்களைப் போல, சின்னத்திரை கதை அமைப்பை, படம் பிடிப்பதற்கு முன் கூட, தணிக்கை துறையினரிடம் சமர்ப்பித்து, அனுமதி பெற்று விடலாமே!

இன்று, தெருக்கூத்து, நாடகங்கள் குறைந்து விட்டன. அந்த இடத்தை, முழுக்க முழுக்க, சின்னத்திரை சீரியல்கள் ஆக்கிரமித்துள்ளன. தெருக்கூத்தில் அருவருப்பு வசனங்கள் இருந்தால், அதை அந்த நேரத்தோடு மறந்து விடுவர். அந்த நாடகக் கலை வசீகரித்த மனித எல்லையும் குறுகியதே!சின்னத் திரைத் தொடர்கள் அப்படி அல்ல. அந்த குறிப்பிட்ட நேரத்தில் பார்க்கத் தவறினால், மடிக்கணினி, கைபேசி போன்றவற்றில், எந்த நேரமும், 'யூடியூப்' சேனல் மூலம் பார்க்க முடிகிறதே!

எனவே, நல்லதை படைப்போம் என, படைப்பாளிகள் மனது வைக்க வேண்டும். எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் இருக்கத் தான் வேண்டும். அதை வைத்து, தந்திரப் போர்வையில், காசு குவிக்க பயன்படுத்தக் கூடாது.குறை கூறுவதும், புறம் பேசுவதும் மனிதர்கள் இயல்பு தான் என்றாலும், அவற்றை தவறு என, கண்டிக்க வேண்டும்; வளர்க்க உதவக் கூடாது.

மேலும், தணிக்கை முறை வருவதால், அதன் தயாரிப்பாளர்களுக்கு எந்த பாதிப்பும் வர போவது இல்லை. ஒரு தொடரின் காட்சியை சுடச்சுட பரிமாற முடியாதே தவிர, ஒரு வாரத் தொடர்களை முன்கூட்டியே படம் பிடித்து, தணிக்கைக்கு அனுப்பி, சான்றிதழ் பெற்று விடலாமே! எனவே, 'டிவி' சீரியல்களுக்கு தணிக்கை மிக அவசியம். அரசும், தயாரிப்பாளர்களும் மனது வைத்தால் மட்டுமே அது சாத்தியம்!தொடர்புக்கு:
சுப்ரமணிய வெங்கடாசலம்எழுத்தாளர்
93858 86315இ - மெயில்: send2subvenk@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X