தமிழக கோவில்கள் மீது தனி பக்தி

Updated : நவ 17, 2019 | Added : நவ 03, 2019 | கருத்துகள் (3)
Advertisement
தமிழக கோவில்கள் மீது தனி பக்தி

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, வரும், 18ம் தேதி பதவியேற்க உள்ளார் நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே. தமிழக அரசு சார்பாக, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகளில் வாதாடிய, முன்னாள் மூத்த வழக்கறிஞர் வினோத் அரவிந்த் பாப்டேவின் சகோதரர் தான் இவர். அயோத்தியில் உள்ள, சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்கிற வழக்கை விசாரித்த, ஐந்து நீதிபதிகளில், அரவிந்த பாப்டேயும் ஒருவர். மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர். இவர் குடும்பம் முழுக்கவே வழக்கறிஞர்கள் தான்.பாப்டே, தெய்வங்கள் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர். இவருடைய டில்லி வீட்டில், மூன்று முகம் கொண்ட ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இது, காசியிலிருந்து கொண்டு வரப்பட்டதாம்.

இந்தியாவில் எந்த ஊருக்கு போனாலும், அங்குள்ள கோவில்களுக்கு சென்று, தரிசித்துவிட்டு தான் வருவார். நாமக்கல் ஆஞ்சநேயர் மீது, இவருக்கு தனி பக்தி உண்டு.பாப்டே எப்போது சென்னை வந்தாலும், இங்குள்ள கோவில்களுக்கு தவறாமல் செல்வார். காளிகாம்பாள் கோவில், பார்த்தசாரதி கோவில், கபாலீஸ்வரர் என, எந்த கோவிலையும் விடமாட்டார். தமிழகத்தில் உள்ள மற்ற கோவில்களுக்கும் பாப்டே சென்றுள்ளார்.

தமிழக கோவில்களின் மீது, அதீத பக்தி வைத்துள்ளார்.நீதிபதியாக இருக்கும் பாப்டேவின் முக்கிய பொழுதுபோக்கு, புகைப்படம் எடுப்பது. கேனன் கேமராவில், சிறந்த மாடலை வைத்திருக்கும் இவர், வெளியூர் செல்லும் போதெல்லாம், பார்க்கும் காட்சிகளை எல்லாம் சுட்டுத் தள்ளுகிறார். இன்னொரு பக்கம், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் தீவிரம் காட்டுகிறார். 'ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்' என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில், தீவிர ஆர்வம் காட்டும் இவர், இதை வைத்து, உச்ச நீதிமன்றத்தில் பல புதிய முயற்சிகளை மேற்கொள்ளவிருக்கிறார்.


வீணாகிறது மக்களின் வரிப்பணம்



கடந்த லோக்சபாவின் சபாநாயகராக இருந்தவர், பா.ஜ.,வைச் சேர்ந்த சுமித்ரா மகாஜன். 2019 லோக்சபா தேர்தலில், இவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. இதனால், தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டார்.இவர் சபாநாயகராக இருந்த போது, 2016ல், 'ஜாகுவார்' என்கிற விலை உயர்ந்த கார், இவருக்காக வாங்கப்பட்டது. அப்போது, அதன் விலை, 48 லட்சம் ரூபாய். இவர், ஏற்கனவே வைத்திருந்த, 'டொயோட்டோ' கேம்ரிக்குப் பதிலாக, இந்த காரைத் தேர்ந்தெடுத்தார் சுமித்ரா மகாஜன்.இந்த காரில் பயணம் செய்த இவர், அடுத்த நாளே, 'இந்த கார் வேண்டாம், பழைய காரிலேயே பயணிக்கிறேன்' என, புத்தம் புது காரை ஓரங்கட்டிவிட்டார். இது, 13 கி.மீ., தான் பயணம் செய்துள்ளது. பிறகு கராஜுக்கு சென்றுவிட்டது.'

இந்தக் காரில் பின்னால் உட்கார முடியவில்லை; கால் வைக்கும் இடம் மிகவும் குறைவாக உள்ளது; உட்கார மிகவும் கஷ்டமாக இருக்கிறது' எனக் கூறிய சுமித்ரா, 'நான், ஜாகுவாரில் இரண்டு மாடல்களைப் பார்த்தேன். என் அலுவலகம், நான் தேர்ந்தெடுத்த மாடலை வாங்காமல், வேறொரு மாடலை வாங்கி விட்டது' என, சாக்கு சொல்லிவிட்டாராம்.

புதிய சபாநாயாகர் ஓம் பிர்லாவும், இந்த ஜாகுவார் காரை பயன்படுத்துவதில்லை. இவருக்காக, புதிய டொயோட்டோ கேம்ரி ஹைபிரிட் என்ற கார் வாங்கப்பட்டுள்ளது. இதன் விலை. 37 லட்சம் ரூபாய். சுமித்ரா மகாஜன் வாங்கிய அந்த ஜாகுவார் காரை, இப்போது யாரும் பயன்படுத்துவதில்லை; கராஜில் துாங்குகிறது. விரைவில், இந்தக் கார், ஏலத்திற்கு விடப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.

கடந்த, 18 ஆண்டுகளில், சபாநாயகருக்காக, ஐந்து கார்கள் வாங்கப்பட்டுள்ளன. 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 'அம்பாசிடர்' கார், 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 'ஹோண்டா' அகார்ட், 21 லட்சம் ரூபாயில் டொயோட்டா கேம்ரி, 48 லட்சம் ரூபாயில் ஜாகுவார். இப்போது, 36 லட்சம் ரூபாயில் டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் வாங்கப்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணம் எப்படியெல்லாம் வீணாகிறது.


மோடியிடம் காங்., முதல்வர் நெருக்கம்


சீக்கியர்களின் புனித தலமான குருத்வாரா ஒன்று பாகிஸ்தானில் உள்ளது. சீக்கிய குருவான, குருநானக் தேவ், கர்தார்பூர் என்கிற இடத்தில், 1504ம் ஆண்டில், இந்த குருத்வாராவைக் கட்டினார். குருநானக் தேவ், தன் கடைசி, 18 ஆண்டுகளை இந்த குருத்வாராவில் தான் கழித்தார். எனவே, இது சீக்கியர்களின் புனிதத் தலமாக விளங்குகிறது.பஞ்சாபின், குருதாஸ்பூரிலிருந்து, 4 கி.மீ., தொலைவில், பாகிஸ்தானில் உள்ளது கர்தார்பூர் குருத்வாரா. இங்கே பக்தர்கள் சென்று வர, இரு நாடுகளும் இணைந்து சாலை அமைத்துள்ளன. இதற்கு, பிரதமர் மோடியும், பஞ்சாப் முதல்வரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான அமரீந்தர்சிங்கும் முக்கிய காரணம்.

அமரீந்தர் சிங்கின் தாத்தா, பட்டியாலாவின் ராஜா. இவர், 1925ல், கர்தார்பூர் குருத்வாராவை புதுப்பிக்க, 1.35 லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்தார். இதனால், இந்த குருத்வாரா மீது அமரீந்தர் சிங்கிற்கு தனி மரியாதை உண்டு.பாகிஸ்தானிலுள்ள இந்த குருத்வாராவையும், இந்தியாவில், பஞ்சாபின் குர்தாஸ்பூரிலுள்ள குருத்வாராவையும் இணைக்கும் சாலையின் திறப்பு விழா, வரும், 9ம் தேதி நடக்க உள்ளது. அதோடு குருநானக் தேவின், 550ம் ஆண்டு பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்படுகிறது.

இந்திய எல்லையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கும், அமரீந்தருக்கும் ஆகாது. இதனால், தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சித்து. இவரும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கிரிக்கெட் விளையாடிய காலத்திலிருந்து நல்ல நண்பர்கள். சில மாதங்களுக்கு முன், இம்ரான் அழைப்பின்படி, சித்து பாகிஸ்தான் சென்று வந்தார். இது, அமரீந்தருக்குப் பிடிக்கவில்லை.

இந்நிலையில், கர்தார்பூர் குருத்வாரா விழாவில் பங்கேற்க, சித்துவிற்கு, பாகிஸ்தானிலிருந்து மீண்டும் அழைப்பு வந்துள்ளது. இது, அமரீந்தருக்கு பெரும் எரிச்சலைக் கிளப்பியுள்ளது. உடனே, அவர் மோடியை சந்தித்து விஷயத்தைச் சொன்னார்.மத்திய அரசும் அவருக்கு செவி சாய்த்தது. அரசின் அனுமதியில்லாமல், எந்த ஒரு அரசியல்வாதியும், பாகிஸ்தான் போகக் கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது. இப்போது, பிரதமர் மோடி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தரின் நெருக்கம், பலரின் கண்களை உறுத்துகிறது.


வசைபாடல் அரசியல்



தமிழகத்தைப் போல பீஹாரிலும், வசைபாடல் அரசியல் படு பரபரப்பாக நடக்கிறது. இங்கு, முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் -- பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கே, பிரதான எதிர்க்கட்சி, லாலு பிரசாத் யாதவின், ராஷ்ட்ரீய ஜனதா தளம். லாலு, ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். இவரது குடும்பம், ரொம்பவும் பெரிசு. இரண்டு மகன்கள், ஏழு மகள்கள் என, லாலுவிற்கு ஒன்பது வாரிசுகள். மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், மாநிலத்தில், ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்த போது, சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர். இளையவர், தேஜஸ்வி யாதவ், துணை முதல்வராக பணியாற்றியவர்.

தமிழகத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தினமும் ஆளும் கட்சியை வசை பாடுவது போல, பீஹாரிலும் ஆளும் கட்சியை, லாலு கட்சி, தினமும் வசைபாடி வருகிறது. பீஹாரில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இந்நிலையில், கள்ள சாராய மாபியா கும்பல் ஒன்று, முதல்வர் நிதிஷ் குமார் வீட்டில் எப்போதும் இருக்கிறது என, ராஷ்ட்ரீய ஜனதா தளம் குற்றம் சாட்டியது.

உடனே, நம்மூர் ஆளும் கட்சி அமைச்சர் ஜெயகுமார் போல, நிதிஷ்குமாருக்கு நெருக்கமான தலைவர் ஒருவர், ஒரு குண்டைத் தூக்கி போட்டார். 'தேஜஸ்வி யாதவ் பீஹாரில் தங்குவதே இல்லை. அவர் தினமும் எங்கு தங்குகிறார் என்பதைக் கண்டுபிடியுங்கள். பீஹாரில் குடிக்க முடியாது. அதனால் தான், அவர், வெளி மாநிலத்திற்கு அடிக்கடி ஓடி விடுகிறார்' என, அவர் சொன்னார்.உடனே, தேஜஸ்வி யாதவ் பதிலடி கொடுத்தார்.

'நிதிஷ் குமாருக்கு நெருக்கமானவர்கள் சட்டத்திற்கு புறம்பாக தினமும் குடிக்கின்றனர். கள்ளச் சாராய மாபியா ஒன்று, நிதிஷ் குமாரின் வீட்டிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறது. முடிந்தால் என்னைக் கைது செய்து பாருங்கள்' என, சவால் விட்டுள்ளார். பீஹாரில், இப்போது குடியை வைத்து, அரசியல் நடந்து கொண்டிருக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thulakol - coimbatore,இந்தியா
21-நவ-201920:39:32 IST Report Abuse
thulakol இறைவன் இவருடைய பணிகளில் துணை இருப்பார்
Rate this:
Share this comment
Cancel
prakashc - chennai,இந்தியா
21-நவ-201911:51:48 IST Report Abuse
prakashc thiruma வந்து .........
Rate this:
Share this comment
Cancel
S.V.SRINIVASAN - Chennai,இந்தியா
03-நவ-201919:51:16 IST Report Abuse
S.V.SRINIVASAN தெய்வ நம்பிக்கை உள்ள ஷரத் அரவிந்த் பாப்டே வழக்குகளை நல்ல முறையில் கையாண்டு தீர்ப்புகளை வழங்க வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X