ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த கால்நடை கண்காட்சியில் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள 1300 கிலோ எடை கொண்ட எருமை பங்கேற்றது.
ஜெய்ப்பூரில் நடந்த கால்நடை கண்காட்சியில் முர்ரா இனத்தை சேர்ந்த 1300 கிலோ கொண்ட ஆறு வயதுடைய எருமை மாடு பங்கேற்றது. இதன் உருவமே பார்ப்பவர்களை கவர்ந்திழுத்தது. பலர் மாடு முன் செல்பி எடுத்து கொண்டனர்.
மாட்டின் உரிமையாளர் ஜவகர்லால் ஜாங்கிட் கூறியதாவது: இந்த மாட்டுக்கு தினமும் ஒரு கிலோ நெய், அரைக் கிலோ வெண்ணெய், 200 கிராம் தேன், 25 லிட்டர் பால், ஒரு கிலோ முந்திரி,-பாதாம் கொடுக்கிறோம். இதன் பராமரிப்பு மற்றும் உணவுக்காக மாதத்துக்கு ரூ.1.5 லட்சம் செலவாகிறது. இந்த மாட்டிற்கு பீமா என்று பெயரிட்டு உள்ளோம்.

கண்காட்சியில் பங்கேற்கும் முன் மாட்டை ரூ.14 கோடிக்கு கேட்டார்கள். ஆனால் விற்க எங்களுக்கு மனம் வரவில்லை. கண்காட்சிக்கு எருமைகளை பொதுவாக விற்பனைக்குக் கொண்டு வருவதில்லை. ஆனால் முர்ரா இனத்தை பாதுகாத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த கண்காட்சிக்கு அழைத்து வந்துள்ளோம் என்றார்.