புதுடில்லி: கர்தார்பூருக்கு செல்ல, இந்திய சீக்கியர்களுக்கு, 'பாஸ்போர்ட்' தேவையா என்பது பற்றி விளக்கம் அளிக்குமாறு, பாகிஸ்தானிடம் இந்தியா கேட்டுள்ளது.சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக்கின், 550வது பிறந்த தினம், 12ம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது.
குருநானக்கின் சமாதியான கர்தார்பூர் சாஹிப், பாகிஸ்தானில், சர்வதேச எல்லையை ஒட்டி, ராவி நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த சமாதிக்கு செல்வதை, சீக்கியர்கள் மிகவும் புனிதமாக கருதுகின்றனர். குருநானக் சமாதிக்கு, சீக்கியர்கள் எளிதாக செல்லும் வகையில், பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மாவட்டம், தேரா பாபா நானக் நகரிலிருந்து, சர்வதேச எல்லை வரை, மத்திய அரசு சிறப்பு பாதை அமைத்துள்ளது. அதேபோல், பாக்., எல்லையிலிருந்து, கர்தார்பூர் சாஹிப் வரை, பாகிஸ்தான் சிறப்பு பாதை அமைத்துள்ளது. இந்தப் பாதை, நாளை மறுதினம் திறக்கப்பட உள்ளது.கர்தார்பூர் சாஹிப்புக்கு செல்ல, இந்திய சீக்கியர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை என, பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். ஆனால், கர்தார்பூர் பாதை தொடர்பான ஒப்பந்தத்தில், இந்திய சீக்கியர்களுக்கு பாஸ்போர்ட் தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது:கர்தார்பூருக்கு செல்ல, இந்திய சீக்கியர்களுக்கு பாஸ்போர்ட் தேவையா, இல்லையா என்பதை, பாகிஸ்தான் முதலில் தெளிவுப்படுத்த வேண்டும். இந்தியாவில் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதில், பாகிஸ்தானுக்கு எப்போதும் ஆர்வம் அதிகம். அதனால் கர்தார்பூர் பாதையை பயன்படுத்தி, பஞ்சாபில், பிரிவினை மற்றும் தீவிரவாதத்தை, பாகிஸ்தான் துாண்ட முயற்சிக்கிறதா என்பதை கண்காணித்து வருகிறோம். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சித்து மீண்டும் கடிதம்
கர்தார்பூர் பாதை திறப்பு விழாவில் பங்கேற்க, பாகிஸ்தான் செல்ல அனுமதிக்க வேண்டும் என, வெளியுறவு அமைச்சகத்துக்கு, முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரசை சேர்ந்தவருமான, நவ்ஜோத் சிங் சித்து, மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.கர்தார்பூர் பாதை, நாளை மறுதினம் திறக்கப்பட உள்ளது. 'இதன் துவக்க விழாவில் பங்கேற்க வரும்படி எனக்கு, பாகிஸ்தான் அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதனால், பாகிஸ்தான் செல்ல அனுமதிக்க வேண்டும்' எனக் கேட்டு, வெளியுறவு அமைச்சகத்துக்கு சித்து கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், வெளியுறவு அமைச்சகத்துக்கு, சித்து மீண்டும் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கர்தார்பூர் பாதை திறப்பு விழா, 9ம் தேதி காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. இதில் பங்கேற்க, நான் வாகா எல்லையை, காலை, 9:30 மணிக்குள் கடக்க வேண்டும். துவக்க விழாவில் பங்கேற்று விட்டு, மாலைக்குள், கர்தார்பூர் பாதை வழியாக, பஞ்சாப் திரும்பி விடுவேன். இதற்கு எனக்கு அனுமதியளிக்க வேண்டும்.
இது முடியாவிட்டால், நாளை வாகா எல்லை வழியாக கர்தார்பூருக்கு சென்று, மறுநாள் திறப்புவிழாவில் பங்கேற்று விட்டு, பஞ்சாப் திரும்ப அனுமதியளிக்க வேண்டும்.இவ்வாறு, சித்து கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE