ஹாசன்: 'டிவி' நிகழ்ச்சியில் கிடைத்த பரிசுத் தொகையை வைத்து, தான் படிக்கும் அரசு பள்ளிக்கு, சுற்றுச்சுவர் கட்டிக் கொடுக்க, அப்பள்ளியின் மாணவன் முடிவு செய்துள்ளார்.
மைசூரு மாவட்டம், கடகா கிராமத்தை சேர்ந்தவர் தேஜஸ். இவர், அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்றில், 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், தனியார், 'டிவி' ஒன்றில் நடத்தும், 'கன்னட கோடீஸ்வரன்' நிகழ்ச்சியில் பங்கேற்று, 6.40 லட்சம் ரூபாய் வென்றுள்ளார்.தான் வென்ற பணத்திலிருந்து, ஒரு பகுதியை செலவழித்து, தான் படிக்கும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டி கொடுக்க, தேஜஸ் முடிவு செய்துள்ளார்.
இது குறித்து, தேஜஸ் கூறியதாவது:புனித் ராஜ்குமாருடன், கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் விளையாடியது மகிழ்ச்சி அளித்தது. பள்ளி ஆசிரியர்கள் ஊக்கமே, வெற்றிக்கு காரணம். என் பெற்றோருக்கும், நான் வென்றது மகிழ்ச்சி அளித்துள்ளது.எங்கள் பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால், கால்நடைகள் புகுந்து செடிகளை மேய்ந்து விடுகின்றன.இந்த ஆண்டு, பாதாமி செடிகளை நட்டோம். அனைத்தையும் கால்நடைகள் மேய்ந்து விட்டன. சுற்றுச்சுவர் கட்டினால் செடிகள் தப்பிக்கும் எனக் கருதி உதவி செய்கிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.இதற்கு, ஆசிரியர்கள், கிராமத்தினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE